Published : 10 Nov 2014 11:04 AM
Last Updated : 10 Nov 2014 11:04 AM
பெண்கள் அனைத்து நிகழ்வுகளிலும் முக்கியப் பங்கு வகித்தாலும் ஜோதிடம் என்று வந்துவிட்டால் அவர்களுக்கு அங்கே அத்தனை முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லியே அவர்களுக்கு எதையும் தெரியவிடாமல் செய்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களும் ஆன்மிகம் சார்ந்த தெளிவும் அறிவும் பெறுவது அவசியம். அதை நிறைவேற்றுவதுதான் இந்தப் பகுதியின் நோக்கம். ஜோதிடம் தொடங்கிய ஆதிப் புள்ளியான வேதங்களில் இருந்தே அதைத் தொடங்குவோம்.
வேதங்கள் இந்து சமயத்தின் அடிப்படை. இந்து சமயத்தின் பழக்க வழக்கங்கள், இயல்புகள், சடங்குகள், பரிகாரங்கள் இவற்றை விளக்கக்கூடிய அற்புத பொக்கிஷங்களாக வேதங்கள் விளங்குகின்றன.
சதுர் வேதங்கள்
‘வேதார்த்த பிரகாசிகா’ என்ற நூலே முதன் முதலில் எழுத்து வடிவில் தோன்றிய வேத நூல். இது 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதற்கு முன்பாக வேதங்கள் வாய்வழியே சொல்லி மனப்பாடம் செய்தே நினைவில் கொள்ளப்பட்டன.
ரிக் வேதம்
வேதங்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டவை. ரிக் வேதமே காலத்தால் முற்பட்டது. இது கி.மு.1500-க்கும் முன்பே உருவானது.
காலம்: கி.மு. 2200 முதல் கி.மு. 1600 வரை ரிக் வேதத்தில் 10,600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக்வேதிகள் இந்திரனையும், அக்னியையும் வழிபட்டுவந்தனர். மேய்ச்சல், விவசாயம், தச்சு வேலை, மண் வேலைகள், பருத்தி, கம்பளி நூற்றல், சிற்ப வேலைகள், அறுசுவை உணவுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர்.
பிந்தைய வேதங்கள்
யஜுர் வேதம் கி.மு.1400 முதல் கி.மு.1000 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது. பிந்தைய காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளியை விட்டுக் கிழக்கு நோக்கி நகர்ந்துவிட்டனர். அதனால் பழக்கவழக்கங்களும், வாழ்வியல் நடைமுறைகளும், தெய்வ வழிபாடுகளும் மாறிவிட்டன. முதலில் இயற்கையை வணங்கியவர்கள் பிறகு சிவன், பிரம்மா, விஷ்ணுவை வழிபட்டனர்.
சாம வேதம் சடங்குகளின்போது இசைப்பதற்காக படைக்கப்பட்டது. இதிலிருந்துதான் இந்திய இசை தோன்றியது.அதர்வணம்தான் இறுதியான வேதம். இதுவும் சடங்குகளைப் பற்றியே பேசுகிறது. நல்லவை, அல்லவை (மந்திரம், மாந்திரீகம்) இரண்டையும் கொண்டுள்ளது.
வேதங்களின் நான்கு பாகங்கள்:
சம்ஹிதை என்பவை தொகுப்பு மந்திரங்களாக உள்ளன. இவை தெய்வங்களால் தரப்பட்ட பாடல்கள் என அழைக்கப்படுகின்றன.
பிரமாணங்கள் என்பவை உரை அல்லது சடங்குகளின் வழிமுறைகள் பற்றிக் கூறுகின்றன.
ஆரண்யகம் என்பவை காட்டில் வாழ்கின்ற முனிவர்கள் நமக்குத் தந்த உரைகள்.
வேதத்தில் கூறப்பட்ட தத்துவ உரைகள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள், தத்துவ விவாதங்கள் ஆகியவை வேதத்தின் அந்தமாக வருவதை ‘வேதாந்தம்’ என்று கூறுகிறார்கள்.
வேதத்தின் அங்கங்கள்
சிக்ஷா, சந்தஸ், நிருத்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம் ஆகிய ஆறும் வேதத்தின் அங்கங்களாகும். இதில் ஜோதிஷம் வேதத்தின் கண்கள் என்று சொல்லப்படுகிறது. நம் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஜோதிடம் முக்கியக் காரணியாக விளங்குகிறது. எனவே இது பற்றிய பல விஷயங்களை வரும் வாரங்களில் பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT