Published : 13 May 2017 03:23 PM
Last Updated : 13 May 2017 03:23 PM
கனவுகள் மிகவும் விசித்திரமானவை. பல நேரங்களில் அதில் வரும் சம்பவங்கள் நிஜமாகிவிடுவதற்கான அநேக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன சில கனவுகள். இதில் என்னவொரு சிறப்பு என்றால், நம்முடைய நலனுக்காகக் காணும் கனவுகள் பல நேரங்களில் பலிக்காது. ஆனால், பிறரின் நலனுக்காகக் காணும் கனவுகள் நிஜமாகிவிடும். ஆனால், குறிப்பிட்ட ஒரு விலையோடு!
கூகி கல்மான் அப்படியொரு கனவைத்தான் கண்டார். அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம். எவ்வளவு அதிகம் என்றால், உயிரை இழப்பதுவரை! அப்படி என்ன கனவைத்தான் அவர் கண்டார்..? கென்யாவில் இருக்கும் கறுப்புக் காண்டாமிருகங்களைக் காப்பது என்பதே!
சபிக்கப்பட்ட வாழ்வு
1943-ம் ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் பிறந்தார் கூகி கல்மான். அவரது தந்தை ராணுவ வீரர். போர்க் காலங்களில் அவர் பல நாடுகளுக்கும் செல்ல வேண்டியிருந்தது. அப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்குள்ள காடுகள், மலைகள் மீது தனது தனி விமானத்தில் பறந்து திரிவார். அங்கிருக்கும் பறவைகளும் மரங்களும் காட்டுயிர்களும் அவரின் மனதைக் கொள்ளைகொண்டன. இதனால் இயற்கையின் மீது அவருக்கு மிகுந்த நேசமிருந்தது. இந்த நேசம், கூகியையும் தொற்றிக்கொண்டதில் வியப்பேதுமில்லை.
கூகியின் ஆரம்ப கால வாழ்க்கை பெரிதும் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை. தன் வாழ்க்கையைத் தன் போக்கில் அமைத்துக்கொள்ள அனுமதித்த பெற்றோர், இலக்கியத்திலும் இயற்கையிலும் மூழ்கிக் கிடக்கும் வாய்ப்பு, அளவற்ற செல்வம், கட்டற்ற சுதந்திரம் என மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார் கூகி. அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது அவரின் கனவு. ‘ஆப்பிரிக்காவில் வாழ வேண்டும்' என்ற கனவு அவரை உந்தித்தள்ள, தனது கணவர் மரியோவை விவாகரத்து செய்தார். அவர் மூலமாக கூகிக்கு இம்மானுவேல் என்ற மகன் இருந்தார்.
தெரிந்தவர்கள் மூலமாக பவ்லோ எனும் நண்பர் கூகிக்கு அறிமுகமானார். ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியிருந்த கூகியைப் போலவே ஆப்பிரிக்காவில் வாழ வேண்டும் என்ற கனவு பவ்லோவையும் துரத்திக்கொண்டிருந்தது. ஒரே கனவால் ஈர்க்கப்பட்ட அந்த இரண்டு இதயங்கள் திருமணத்தால் இணைந்து ஆப்பிரிக்காவுக்குப் பறந்தன. அங்கு விபத்தொன்றில் பவ்லோ இறந்தார். அடுத்த சில வருடங்களில், பாம்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கூகியின் மகன் இம்மானுவேலும் பாம்புக் கடியால் உயிர் துறந்தார். இதனால் தனி மரமானார் கூகி.
கென்யாவின் காண்டாமிருகங்கள்
ஆப்பிரிக்காவில் வாழ, கூகியும் பவ்லோவும் தேர்வு செய்த இடம் கென்யா. அங்கு லைகிபியா எனும் பகுதியில், அல் அரி நீரோ எனும் மேய்ச்சல் நிலத்தை அவர்கள் வாங்கினர். கால்நடைப் பண்ணை ஒன்றை அமைத்து வாழ்ந்துவந்தனர். பவ்லோ, இம்மானுவேல் ஆகியோரின் இறப்புக்குப் பிறகு, தன்னுடைய வாழ்வைப் பொருள்பொதிந்த ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்த கூகி, ‘கல்மான் நினைவு அறக்கட்டளை' என்ற அமைப்பை நிறுவினார்.
அந்தப் பகுதியில் மசாய், கிக்குயூ, துர்கானா, சம்புரு, போக்கோட் என்று பல பழங்குடி இன மக்கள் வாழ்ந்துவந்தனர். மசாய் இனத்தின் மா மொழியில் ‘அல் அரி நீரோ' என்பதற்கு, ‘பெரிய நீரூற்றுகள் அமைந்த இடம்' என்று பொருள். நீரூற்றுகள் அதிகம் நிறைந்த அந்தப் பகுதியில் யானைகள், கறுப்புக் காண்டாமிருகங்கள், சிங்கங்கள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் வாழ்ந்துவந்ததில் ஆச்சரியமில்லை.
70-களில் கென்யாவின் இதர பகுதிகளில் தந்தங்களுக்காக யானைகளும் கொம்புகளுக்காக காண்டாமிருகங்களும் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு வந்தன. அதிலும், அல் அரி நீரோ போன்ற தனியார் வசம் உள்ள மேய்ச்சல் நிலங்களும், காட்டுப் பகுதிகளும் காட்டுயிர்களுக்குப் பெரும் சாபக்கேடாக அமைந்தன. காரணம், வேட்டை அப்போது சட்டபூர்வமாக இருந்தது. ஆனால் 1977-ம் ஆண்டு, வேட்டை தடை செய்யப்படவுடன், காட்டுயிர்ப் பாதுகாப்பு கென்ய அரசின் பொறுப்பாக மாறியது.
இதனால், தனியார் மேய்ச்சல் நில உரிமையாளர்கள், தங்களுக்கும் காட்டுயிர்ப் பாதுகாப்புக்கும் தொடர்பில்லை என்பதுபோல நடந்துகொண்டனர். இந்த நிலையில்தான், தன்னுடைய கால்நடைப் பண்ணை இருக்கும் இடத்தைப் பாதுகாக்க நினைத்தார் கூகி. சட்டபூர்வ வேட்டை தடை செய்யப்பட்ட பிறகு, கள்ள வேட்டை மிகுந்தது. ஆனால், கூகியின் முயற்சியால், அல் அரி நீரோ பகுதியில் யானைகளோ அல்லது காண்டாமிருகங்களோ கள்ள வேட்டையாடப்படுவது தடுக்கப்பட்டது.
தோட்டா கொடுத்த அங்கீகாரம்
இந்தப் பணிகளின் காரணமாக ‘இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றிய'மும், ‘ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு'ம், கூகியின் மேய்ச்சல் நிலப் பகுதியை ‘முக்கிய உயிரினப் பன்மை நிலவும் பகுதி'யாக அறிவித்தன. யானைகளைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 1989-ம் ஆண்டு அன்றைய கென்ய அதிபர் டேனியல் அரப் மோய் யானைத் தந்தங்களை மொத்தமாக எரித்தார். தந்தங்களின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் யானைகள் கள்ள வேட்டையாடப்படுவது தடுக்கப்படும் என்ற நம்பிக்கைதான் இந்த முயற்சிக்குக் காரணம். அந்த முயற்சியில் கூகி கல்மானுக்கும் பெரும் பங்குண்டு.
இந்த முயற்சிகளை எல்லாம் துர்கானா பழங்குடியின மக்கள் ஆதரிக்க, போக்கோட் இன மக்கள் எதிர்த்துவந்தனர். இதனால், இரண்டு பழங்குடியின மக்களுக்கு இடையே அவ்வப்போது சண்டை மூண்டுகொண்டேயிருந்தது.
கூகி கல்மான் - ஸ்வேவா
தன்னுடைய ஆப்பிரிக்க அனுபவங்களை ‘ஐ ட்ரீம்ட் ஆஃப் ஆஃப்ரிக்கா' என்ற புத்தகமாக எழுதினார் கூகி. பின்னாளில், அதே பெயரில் கூகியின் வாழ்க்கையைச் சொல்லும் படமும் ஹாலிவுட்டில் வெளியானது. அந்தப் புத்தகத்தில், போக்கோட் இன மக்கள் தன்னிடம் வந்து, “துர்கானா மக்களுக்கும் எங்களுக்கும் இடையிலான சண்டை முடிவுக்கு வந்துவிட்டது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இனி உங்கள் இடத்தில் உள்ள காட்டுயிர்களை வேட்டையாட மாட்டோம்” என்று சொல்லிச் சென்றதாக எழுதியிருக்கிறார் கூகி. ஆனால், அவரின் இயற்கைப் பாதுகாப்புப் பணிகளுக்குத் தங்கள் தோட்டா மூலம் தற்போது அங்கீகாரம் கொடுத்திருப்பது கென்யாவில் அதிகரித்துவிட்ட தீவிரவாதக் குழுக்களில் ஒன்று.
கென்யாவில் சமீபகாலமாக மிகவும் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. இதனால், தங்கள் கால்நடைகளுக்குப் புல் கிடைக்காத தனியார் மேய்ச்சல் நிலங்களுக்குள் சிலர் அத்துமீறி நுழைந்துவருகின்றனர். இந்தப் போர்வையில் கூகியின் நிலத்துக்குள்ளும் நுழைந்து அவரது உடைமைகள், குடியிருப்புகளை அடையாளம் தெரியாத தீவிரவாதக் குழுக்களில் ஒன்று எரித்துவிட்டது. பவ்லோவுக்கும் கூகிக்கும் பிறந்த மகளான ஸ்வேவாவின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஸ்வேவா தப்பித்தார். இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி, கூகியின் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. அதில் காயமுற்ற கூகி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தனியார் மேய்ச்சல் நிலம், பழங்குடிகள் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவுவதை விரும்பாத தீவிரவாதக் குழுக்கள் இப்படி வரம்பு மீறும் செயலை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால், கூகியின் பணியைத் தொடர அவரைப்போல இன்னும் ஆயிரம் பேர் வருவார்கள் என்பதை அவர்கள் என்றும் உணர மாட்டார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT