Published : 05 Feb 2017 01:08 PM
Last Updated : 05 Feb 2017 01:08 PM
இந்தியாவில் அதிக வசூல் சாதனை படைத்த ஆமீர் கானின் படமான ‘தங்கல்’ ஏற்கனவே அதிகமாகக் கொண்டாடப்பட்டுவிட்டது. ஆணாதிக்கம் மோசமான வடிவங்களில் செயல்படும் ஹரியாணா போன்ற மாநிலத்தில் மல்யுத்த விளையாட்டில் ஆண்களைப் பெண்கள் வீழ்த்துவதாகக் காண்பிக்கப்பட்டது உண்மையிலேயே உற்சாகம் தருவது.
பெண்களின் தன்னிறைவு தொடர்பாகப் பல சுவாரசியமான கேள்விகளைத் திரைப்படம் நம்மிடையே எழுப்பினாலும், அந்தப் படத்தின் பின்னணியிலோ, அதுபோன்ற ஒற்றைத் திரைப்படத்தின் பின்னணியிலோ அந்தக் கேள்விகளுக்கு தீர்வுகண்டுவிட முடியாதுதான். அந்தப் படத்தின் முக்கியமான காட்சியில், நாயகன் மகாவீர் போகத், தன் மகள்களை இனி வீட்டுவேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தன் மனைவிக்கு ஆணையிடுவார். மல்யுத்தப் பயிற்சிக்காகக் கூடுதலாக நேரம் செலவழிக்க வேண்டுமென்பதற்காக அதைச் சொல்வார்.
விடுபட்ட வேலை யாருக்கு?
அந்தப் படத்துக்கு வெளியே, யதார்த்த உலகில் எப்போதைக்குமான கேள்வியாக ஒன்று இருக்கிறது. அந்தப் பெண்கள் அந்த வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டால், பிறகு யார் அந்த வேலையைச் செய்யப் போகிறார்கள்? சம்பளம் தரப்படாமல் பெண்களால் செய்யப்படும் சமையல், சுத்தம் செய்தல், தொலை தூரம் சென்று நீர் கொண்டு வருதல், குழந்தைப் பராமரிப்பு, நோயாளிகள் மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகிய வீட்டு வேலைகள் அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டவை என்று சொல்லமுடியுமா?
ஆணாதிக்கத்தைச் செயல்படுத்தும் வேலைப்பிரிவினையின் அடிப்படையைக் கேள்வி கேட்காமல் பெண்கள் விடுதலையை பெறமுடியுமா? சம்பளம் இல்லாத வீட்டுவேலைகள், அவளுக்குச் சுமையாக மாறி வீட்டுக்குள்ளேயே சிறைப்படுத்திவிடும்போது, அவர்கள் எப்படி வெளியே வர முடியும்? ஆண்கள் உலகில் ஆண்கள் உருவாக்கிய விதிகளைப் பின்பற்றி பெண்கள் பொதுவெளி, தனிவெளி என்னும் முரண்பாட்டைத் தகர்க்க முடியுமா? ஆணுக்கும் பெண்ணுக்குமான எதிர்நிலையை அர்த்தமற்றதாக ஆக்காமல், வெறுமனே சில பெண்களை ஆண்களின் வேலைப் பிரிவுக்குள் தள்ளுவதன் மூலம் அதை நம்மால் உடைக்க முடியுமா?
பொதுவெளி, தனிவெளி என்ற முரண்பாட்டை உடைக்கும் போர்வையில், பெண்களுக்கு ஆண்களது வேலை உலகின் அப்பத்திலிருந்து ஒரு துண்டு அளிக்கப்படுகிறது. இதில் பிரச்சினைக்குரியது பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலைக் கத்தரிப்பதோ, ஆண்மைத்தனம் கொண்ட விளையாட்டில் பெண் உடல் பங்குபெறுவதோ அல்ல. மனித வாழ்க்கையை நிலைப்படுத்துவதற்கான பங்களிப்பாக வழங்கப்படும் பெண்களின் வேலையும் அழிக்கப்படுகிறது.
கண்டுகொள்ளப்படாத பெண்களின் உழைப்பு
தேசிய அளவிலான கணக்கெடுப்பிலோ மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கெடுப்பிலோ பெண்களின் வீட்டு உழைப்பு அங்கம் வகிக்கவேயில்லை. சம்பளம் அளிக்கப்படாத பெண்களின் வீட்டுப்பணி என்பது தேசத்தின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் பிரதானப் பணி. உலகளாவிய அளவில் சம்பளம் தரப்படாமல் குடும்பம் சார்ந்து செய்யப்படும் பணியில் 75 சதவீதம் பணியைப் பெண்களே செய்கிறார்கள். இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் 10 முதல் 12 மடங்குப் பணியை சம்பளமில்லாமல் செய்கிறார்கள். மேற்கு நாடுகளில்கூட பெண்களின் பங்கே அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63 சதவீதம் பெண்கள் செய்யும் சம்பளமற்ற பணி என்று ஃபெர்ரண்ட், பெசாண்டோ மற்றும் நோவாக்கா ஆகியோரின் ஆய்வறிக்கை சொல்கிறது.
சம்பளமுள்ள பணிகள் பெண்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால், அவர்கள் சட்டென்று சம்பளமற்ற வீட்டுப் பணியை விடவும் முடிவதில்லை. சம்பளமுள்ள பணியும் அவர்களை விடுதலை செய்யாது. ஏனெனில் அவர்கள் வீட்டு வேலையையும் சேர்த்து இரட்டைச் சுமையை ஏற்க வேண்டியிருக்கிறது. ஆனால், வீட்டுக்கு வெளியே பெண்கள் வேலை பார்ப்பதே நலமானது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கிறது.
பெண்களின் வேலை என்பது பூமியை உயிர்ப்புள்ளதாக வைத்திருக்கிறது. அவர்கள் செய்யும் சம்பளமில்லாத வீட்டு வேலை மட்டுமில்லாமல், வாழ்க்கைத் தேவைக்கான பொருள் உற்பத்தியிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். வளரும் நாடுகளில் வேளாண்மைத் தொழிலில் பாதியளவு பங்களிப்பு பெண்களுடையது. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 60 சதவீதம் பேர் வேளாண்மைப் பணிகளில் பங்கெடுக்கின்றனர். ஆனால் உலகிலுள்ள மொத்த விவசாய நிலத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண்கள் நில உரிமையாளர்களாக உள்ளனர். உலகில் தொடர்ந்து பசிக்கொடுமையை அனுபவிப்பவர்களில் பெண்களும் பெண்குழந்தைகளும்தான் 60 சதவீத எண்ணிக்கையில் உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஆண் விவசாயிகளைப் போலவே பெண் விவசாயிகளுக்கும் வளங்கள் கிடைக்குமானால், உலகில் பசியுள்ளோர் எண்ணிக்கை 15 கோடி குறையும் என்று சொல்கிறது. மனித வளர்ச்சிக் குறியீட்டில் பெண்களின் தன்னிறைவு அவசியமானது என்று அமர்த்திய சென் போன்றவர்கள் நிரூபித்துள்ளனர்.
விளையாட்டு உட்பட எல்லா துறைகளிலும் பெண்கள் நுழைவது அவசியமானது. ஆனால், மேற்கத்தியச் சமூகங்களில்கூட, தடகள விளையாட்டுகளில் நுழையும் பெண்கள், பெண்மை தொடர்பான ஆதிக்கக் கருத்தியல்களுக்கு உட்பட்ட பாகுபாடுகளைச் சந்திக்கத்தான் செய்கிறார்கள். பெருநிறுவனங்கள் கட்டுப்படுத்தும் உலக விளையாட்டுத் துறையில் பெண்களின் உடல்களை காட்சிக்குள்ளாக்கும் அம்சங்களும் செயல்படவே செய்கின்றன. செரீனா வில்லியம்ஸ் போன்ற மிகச் சிலரே பெண்மையின் பொதுவான கருத்தோட்டங் களை சர்வதேச விளையாட்டில் உடைத் துள்ளனர்.
அங்கீகாரம் அவசியம்
அதனால்தான் பெண்களின் விடுதலை என்பது உறுதியான பொருளார்ந்த தளங்களின் அடிப்படையில் எழ வேண்டியுள்ளது. வீட்டில் செய்யப்படும் சம்பளமற்ற பணிதான், வெளியே பெண்கள் வேலைக்குச் செல்வதற்கும் விளையாட்டில் பங்கேற்பதையும் சாத்தியப்படுத்துகிறது. அப்படியே சில பெண்கள் வீட்டிலிருந்து பொதுவெளிக்கு வந்தாலும், வீட்டு வேலை என்பது குறைந்த கூலி வாங்கும் ஏழ்மையான பின்னணியில் உள்ள பெண்களுக்கே உரியதாக மாறிவிடுகிறது. வளர்ந்த நாடுகளில் அவர்கள் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களாக உள்ளனர். தாயாக, மனைவியாக, சகோதரிகளாக, மகள்களாக வீட்டு வேலைகளைச் செய்பவர்கள் இன்னும் அங்கீகரிக்கப்படாத நாயகிகளாகவே உள்ளனர். அமைப்பு ரீதியாக விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட அவர்கள், வெளியில் சென்று பதக்கத்தையோ அதிர்ஷ்டத்தையோ கொண்டுவந்துதான் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று நிரூபிக்க முடிகிறது.
பெண்களின் தன்னிறைவு என்பது மல்யுத்த வீராங்கனைகளாகவோ விமான ஓட்டியாகவோ மாறுவது மட்டுமல்ல, அடையாளப்பூர்வமாக அவை முக்கியமானதாக இருந்தாலும். உண்மையான சமத்துவம் வர வேண்டு மானால், பெண்களின் சம்பளமில்லாத வீட்டுப் பணிக்கு பொருள் சார்ந்த அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT