Published : 10 Jul 2016 03:47 PM
Last Updated : 10 Jul 2016 03:47 PM
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தமிழத் தையே உலுக்கிக்கொண்டிருக்கும் செய்தி, இளம் பொறியாளர் சுவாதியின் படுகொலை. கொலைக்கான காரணமாக வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களை எவ்வளவு பயப்பட வைத்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சமூக ஊடகங்களில் பெண்களுக்கு இடமில்லையா? பெண்கள் அவற்றை எப்போதும் அச்சத்துடன்தான் பயன்படுத்த வேண்டுமா? முகநூலில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பெண்களுக்கு மட்டுமே அறிவுறுத்தப்படுகிறது. ஒரு பெண், ஆணிடம் விகல்பம் இல்லாமல் நட்புடன் இருக்க முடியாதா? அதையே அந்த ஆண் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நட்புடன் அணுகுகிறவளைக் காதலியாகப் பார்த்தால் என்ன செய்வது? இப்படியான சமூகத்தில் ஆண்களுடன் பெண்களால் இயல்புடன் பழகவே முடியாது போலிருக்கிறது.
இளைஞர்களின் மனப்பிறழ்வுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் விதை போட்டது யார்? இன்றைய திரைப்படங்களுக்கும் வலைத்தளங்களுக்கும் சின்னத் திரைகளுக்கும் நிச்சயம் பங்கு உண்டு.
ஒரு காலத்தில் திரைப்படத்தில் கதாநாயகன் என்பவன் நன்மையே உருவெடுத்தவனாக இருப்பான். தவறுகள் செய்பவனைத்தான் வில்லனாகச் சித்தரித்தார்கள். அதுவும் பல திரைப்படங்களில் வில்லன் தன் தவறை உணர்வதாகவும் அவரைக் கதாநாயகன் மன்னிப்பதாகவும் காட்டப்படும். ஆனால் இன்றைய திரைப்படங்களில் கதாநாயகனே கடத்தல்காரனாகவும், கொள்ளைகூட்டத் தலைவனாகவும், ரௌடித்தனம் செய்யும் தாதாவாகவும் காட்டப்படுகிறான். வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் யார் வெற்றி பெறுவது என்பதில்தான் போட்டியே தவிர, இருவரும் செய்யும் செயல்கள் எதிர்மறையானவையே.
பல திரைப்படங்களில் காதலிக்க மறுக்கும் ஒரு பெண்ணை எப்படிச் சீண்டி வசப்படுத்துவது, எப்படிக் கீழ்த்தரமாக நடத்தலாம், எப்படி வன்முறைகளில் ஈடுபடலாம் என்று பாடமே நடத்தப்படுகிறது. இளம் வயதில் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிற பலரும் தனக்குத் திரைப்படங்களே வழிகாட்டியதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
சில வருடங்கள் கழித்து சுவாதியின் கொலையும் திரைப்படமாக்கப்படலாம். கொலையாளி அதில் கதாநாயகனாகவும் காட்டப்படக்கூடும்.
- எஸ். ஜெயஸ்ரீ, கூத்தப்பாக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT