Published : 11 Sep 2016 11:42 AM
Last Updated : 11 Sep 2016 11:42 AM
திருமணம் என்று வரும்போது குடும்பங்கள் பெண்ணின் தகுதி, குணநலன், விருப்பங்களுக்கு ஏற்ற மணமகன் பார்ப்பதில்லை. குடும்பத் தகுதி, வயது, உயரம், உணவு, உடை, இருப்பிடம் தருவாரா என்ற அளவில் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது. திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது பெண்கள் விரைந்து முடிவெடுப்பதில்லை. நீண்ட காலம் அல்லது மிக நீண்ட காலம் வன்முறை நிரம்பிய குடும்ப வாழ்க்கையில் அல்லல்படுகிறார்கள்.
பொறியியல் பட்டம் பெற்றவர் சுதா. அவரின் அப்பா சொந்தத் தொழில் செய்துவந்தார். அம்மா கல்லூரி விரிவுரையாளர். வரன் தேட ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்த மாப்பிள்ளை சொந்தமாகத் தொழில் செய்துவந்தார். சென்னையில் வீடும் காரும் வசதியான வாழ்க்கை. திருமணத்திற்குப் பின் வேலைக்குப் போக அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமே சுதாவின் கோரிக்கை. மாப்பிள்ளை வீட்டில் சம்மதித்தார்கள். திருமணம் இனிதே நடந்தது.திருமணமான இரண்டாம் மாதத்திலேயே சுதாவின் முகத்தில் பொலிவு இல்லை. சென்னையில் தனிக் குடித்தனம். இவர்களுக் கிடையில் அப்படி என்ன பிரச்சினை?
ஒருநாள் சுதாவின் மாமனார், சுதாவின் அம்மாவை அழைத்து சுதா ஒழுங்கில்லை, திமிர்பிடித்தவள், சோம்பேறி என்று திட்டினார். சுதாவின் அம்மா தன் கணவருடன் சுதா வீட்டிற்குச் சென்றார். கணவர் அன்பாக இல்லை என்று சுதா கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
சமையல் சரியில்லை, வீடு சுத்தமாக இல்லை, தன் அப்பா, அம்மாவிடம் அன்பாகப் பேசவில்லை என்று ஏகப்பட்ட புகார்கள் சுதா மீது சுமத்தப்பட்டன. கணவர் தினமும் இரவு டி.வி முன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, தூங்கச் செல்வதும், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதுமாக இருந்ததால் சுதாவுக்குத் தன் கணவருடன் வாழ்கிறோம் என்ற உணர்வே தோன்றவில்லை. கணவன் வீட்டில் ஒரு வேலையாளாக இருப்பதாகவும், இரவில் மட்டும் தாம்பத்திய உறவு இருப்பதால் மனைவி என்ற உணர்வு தோன்றியதாகவும் சொல்லியிருக்கிறார்.
சிறு பிரச்சினை வந்தாலும், ‘உங்கம்மா சரியில்லை’, ‘உன்னை ஒழுங்காக வளர்க்கவில்லை’ என்று குற்றசாட்டு வைப்பார். 10-15 நாட்களுக்கு அவர் அறைக்குள் வராதே என்று சொல்லிவிடுவார்.
சுதாவின் மாமனார், “என்ன என் மகனுடன் பதிலுக்குப் பதில் பேசுகிறாயாமே? ஜாக்கிரதையாக இரு. பல்லை உடைத்து, கையில் கொடுக்கத் தயங்காதவன்” என்று கூறியிருக்கிறார்.
தங்கள் மருமகன் மீது அவர்கள் வைத்திருக்கும் உயர்வான எண்ணம் பாழாகிவிடக் கூடாது என்பதால் எதையுமே சுதா தன் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால், ஏன் இத்தனை கஷ்டங்களையும் சுதா பொறுத்துக்கொண்டிருந்தார் என்று பலருக்கும் புரியவில்லை.
சமூகம் பெண்களுக்குப் போட்டிருக்கும் மனத்தடைதான் காரணம். ஒரு பெண்ணுக்குத் திருமணம் தோல்வியுற்றால், அது அவளுக்கு அவமானம் என்று கருதும் மனநிலையும் காரணம். வேறொரு (மண) வாழ்க்கை கிடைக்காது, கிடைத்தாலும் அது மரியாதைக்குரிய விஷயமல்ல என்ற கருத்து உறைந்து கிடக்கிறது. ஒரு பெண், கணவன் சரியில்லை என்று திருமணத்தை விட்டு வெளியேறினால் வாழ்க்கையே சூன்யமாகிவிட்டதாகக் கருதும் எண்ணம் சமூகத்தில் உள்ளது. பெண் என்றால் எப்படியும் பொறுத்துதான் போகவேண்டும்; குழந்தை பிறந்துவிட்டால் இழிவான நிலையில்கூட வாழ்ந்தாக வேண்டும் என்ற ‘குடும்ப கவுரவம்’ சார்ந்த கருத்துகள் பெண்களை முடிவெடுக்க விடாமல் கட்டுப்படுத்துகின்றன.
என் உடல் என் கணவனால் தீண்டப்பட்டு விட்டது. அதை மீட்க முடியாது. வேறொருவன் தீண்டுவதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்பது போன்ற கருத்துப் பிழையும் நிலவுகிறது. ‘என் உடல் எனக்குச் சொந்தம், எனது உரிமை’ என்ற கருத்தாக்கம் நம் சமூகத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்படுகிறது. பெண்ணுடல் மீதான இந்தத் தவறான கருத்தும் பார்வையும் வன்முறை நிறைந்த உறவுகளிலிருந்து மீள முடியாமல் பெண்களை முடக்குகின்றன.
தனித்து வாழும் பெண் என்றால் யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடக் கோரிக்கை வைக்கலாம் அல்லது வன்முறையாக அத்துமீறலாம் என்ற ரீதியிலான செயல்களும் சமூகம் முழுவதும் நிறைந்துள்ளன. பெண்கள் தன் கணவன் சரியில்லை என்பதையும், தான் கணவனின் வன்முறையான உறவிலிருந்து தனித்து வாழ்வதையும் யாருடனும் பகிர்ந்துகொள்ள தயங்கும் மோசமான சூழலே நிலவுகிறது பெண்ணுடலைத் தன் சொத்து என்று ஆண்கள் கருதும் பழமையான பார்வை இன்னும் நடைமுறையில் உள்ளது. பெண்கள் இதை வலிமையாக எதிர்த்து நிற்காமல் மாற்றம் வராது. குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்கள் வெளியே வருவதும் சாத்தியமாகாது.
அடிமையாகவோ, பணியாளாகவோ, வன்முறையை ஏற்றுக்கொண்டு உழலும் இழிநிலையைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எந்தப் பெண்ணுக்கும் இல்லை. மோசமான வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற முடிவை எடுக்க ஒரு பெண் தயாராக இருக்க வேண்டும். பல நேரங்களில் ஒரு பெண் தன் வாழ்க்கையில்
படும் அல்லல்களே இந்தத் தெளிவைத் தருகின்றன. நெருக்கடி வரும்போது தெளிவாக, தீர்க்கமாக முடிவெடுப்போம். சமூகம் மாறிய பிறகு நமக்கு விடுதலை கிடைக்கும் எனக் காத்திருக்க முடியாது. நம் தைரியமான முடிவுகள்தான் சமூகத்தின் பார்வையை மாற்றும்.
கட்டுரையாளர், வழக்கறிஞர் - தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT