Published : 28 May 2017 12:28 PM
Last Updated : 28 May 2017 12:28 PM

கேளாய் பெண்ணே: தலை குளித்தால் கழுத்து வலிக்கிறதே என்ன செய்ய?

எப்பொழுது தலைக்குக் குளித்தாலும் தலைவலி, கழுத்து வலி வந்துவிடுகிறது. இதைச் சித்த மருத்துவத்தில் சரிசெய்ய முடியுமா?

- அமுதா.

எம். கண்ணன், மருத்துவர் மற்றும் ஆராய்ச்சி அலுவலர்,
சித்தா ஆராய்ச்சி மருத்துவமனை, சென்னை.

சைனஸ் இருந்தால்தான் தலைக்குக் குளிக்கும்போது மூக்கடைப்பு, காது வலி, தலைவலி, கழுத்து வலி, கண் அரிப்பு போன்றவை ஏற்படும். சரியாகத் தூங்காவிட்டாலும் தலைவலி வரலாம். சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடும்போது அவற்றின் மீது சிறிது மிளகுப் பொடியைத் தூவிச் சாப்பிடுங்கள்.

தலைக்குக் குளிக்கும்போது தொடர்ச்சியாகத் தலைவலி, கழுத்துவலி இருந்தால், சித்தா மருந்தான நீர்க்கோவை மாத்திரையை லேசான வெந்நீரில் கரைத்து நெற்றி, மூக்கின் மேல் பகுதியில் தடவினால் குணம் தெரியும். வாரம் ஒருமுறை நொச்சித் தைலம், சுக்குத் தைலம், அரக்குத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலையில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால் சைனஸ் பிரச்சினை மட்டுப்படும். இந்த முறைகளைப் பயன்படுத்தியும் சரியாகவில்லையென்றால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

எனக்கு 30 வயது. இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்தவர்கள். சமீபக் காலமாக பிறப்புறுப்பு வறண்டுள்ளது. மாதவிடாய் நேரத்தில் இடுப்பு வலி அதிகமாக இருக்கிறது. என்ன செய்வது?

– உமா மகேஸ்வரி,

தமிழ்ச்செல்வி, மகப்பேறு மருத்துவர், திருச்சி.

பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் நின்றதும் பிறப்புறுப்பு வறண்டுவிடும். நீங்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று கருப்பையை ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிடுவது நல்லது. வேறு ஏதேனும் பிரச்சினை இல்லையென்றால் பிறப்புறுப்பு வறண்டு போகாமல் இருப்பதற்கு மருத்துவர் ஜெல்லைப் பரிந்துரைப்பார்.



உங்கள் கேள்வி என்ன?

‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x