Published : 28 May 2017 12:30 PM
Last Updated : 28 May 2017 12:30 PM
காடுகளில் வாழும் உயிரிகளில் மிகவும் கம்பீரமான உயிரினமாகக் கருதப்படுவது சிங்கம். மிடுக்கான நடை, கூர்மையான பார்வை, அசாத்திய வேகம், அளவிட முடியாத பலம், ஆபத்துக் காலத்தில் சுதாரித்துக்கொள்ளும் நுண்ணறிவு, குலை நடுங்கச் செய்யும் கர்ஜனை... இவை மட்டுமே அந்த கம்பீரத்துக்குக் காரணமல்ல. காட்டில் உயிரினச் சமநிலையைக் கொண்டுவருவதில் முக்கியப் பங்கு வகிப்பதாலும் சிங்கத்துக்கு அந்தக் கம்பீரம்! அப்படிப்பட்ட சிங்கத்தை ஒரு பெண் தன் அன்பாலும் அரவணைப்பாலும் கட்டிப்போட்டார் என்றால் நம்ப முடிகிறதா? அப்படியொரு சம்பவம் ஆப்பிரிக்காவில் நடந்திருக்கிறது.
அன்புக்காக ஏங்கிய வாழ்வு
இன்று உலக அளவில் ஆப்பிரிக்க சிங்கம், ஆசிய சிங்கம் ஆகிய இரண்டு வகை சிங்கங்கள் மட்டுமே காடுகளில் உள்ளன. இவற்றில் ஆசிய சிங்கம் இந்தியாவில் மட்டுமே தென்படுகிறது. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஆசிய சிங்கங்களைப் பாதுகாக்கும் பணி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறது. ஆனால், ஆப்பிரிக்க சிங்கங்களின் பாதுகாப்பு இன்று உலகத்துக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அதற்கு வித்திட்டவர் ஜாய் ஆடம்ஸன்.
1910-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அன்றைய ஆஸ்ட்ரோ ஹங்கேரிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த த்ரோப்பா எனும் நகரத்தில் பிறந்தார் ஜாய். அவருக்குப் பத்து வயதானபோது, அவரின் பெற்றோர் விவாகரத்துப் பெற்றனர். இதனால் பாட்டியுடன் வாழ்ந்துவந்தார். பெற்றோரிடமிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காததாலோ என்னவோ, அவர் இயற்கையிடமிருந்து அன்பை எதிர்பார்த்தார். இயற்கைக் காட்சிகளை வரைந்து தள்ளினார். உயிரினங்கள் மீது அளவற்ற அன்பு செலுத்தினார். 1935 மற்றும் 1938-ம் ஆண்டுகளில் அவருக்கு நிகழ்ந்த இரண்டு திருமணங்களும் விவாகரத்திலேயே முடிந்தன.
ஆப்பிரிக்கா தந்த அன்பு
ஜாய் ஆடம்ஸனின் இரண்டாவது கணவர் தாவரவியல் அறிஞர். எனவே, அவருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. பீட்டருடனான விவாகரத்துக்குப் பிறகு 1943-ம் ஆண்டு கென்யாவில் ‘கேமிங் ரிசர்வ்’ எனப்படும் காட்டுயிர்களைச் சட்டத்துக்கு உட்பட்டு வேட்டையாடும் பகுதியைக் காவல் செய்துவந்த ஜார்ஜ் ஆடம்ஸனைத் திருமணம் செய்துகொண்டார். அதற்குப் பிறகுதான், காட்டுயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஜாய் ஆடம்ஸன் மனதில் ஆழமாக வேரூன்றியது.
ஒருமுறை ஜார்ஜ் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தற்காப்புக்காக ஒரு சிங்கத்தைச் சுட்டுக் கொன்றுவிட்டார். அந்த சிங்கம் சில நாட்களுக்கு முன்பு மூன்று குட்டிகளை ஈன்றது பிறகுதான் தெரியவந்தது. இதனால் சோகமடைந்த ஆடம்ஸன் தம்பதியினர் அந்த சிங்கக் குட்டிகளைத் தங்கள் இருப்பிடத்துக்குக் கொண்டு வந்தனர். அவற்றில் இரண்டு ஆண், ஒன்று பெண். சில மாதங்களில் ஆண் குட்டிகள் தங்களது வீடான காட்டுக்கே திரும்பிவிட்டன. பெண் சிங்கக் குட்டி மட்டும் செய்வதறியாது தவித்தது. அதற்கு எல்சா என்று பெயரிட்டு வளர்த்துவந்தார் ஜாய். 1956 முதல் 1959-ம் ஆண்டுவரை அந்த சிங்கத்தை வளர்த்து, 1960-ம் ஆண்டுவாக்கில் அதை மீண்டும் வனத்துக்குள் விட்டார். அது, பிற்காலத்தில் காட்டுயிர் பாதுகாப்பில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
மனிதர்களிடம் வளரும் காட்டுயிர்களுக்கு, அவற்றிடம் இயற்கையாக உள்ள மிருகத்தன்மை, குண நலன்கள் ஆகியவை மறந்துபோகும். அது அந்த உயிரினங்களின் சந்ததிக்கு ஆபத்தாக முடியும் என்று அப்போது விஞ்ஞானிகளிடையே பரவலான கருத்து இருந்துவந்தது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஒரு சிங்கத்தை வளர்த்து, மீண்டும் அதைக் காட்டில் விட்டால், அந்த சிங்கம் நிச்சயம் பிழைத்துக்கொள்ளும். அதுவும் தன்னைப் பராமரிக்க தாய் சிங்கம் இல்லாதபோது, சிங்கக் குட்டிகளை மனிதர்கள் வளர்த்து மீண்டும் அவற்றைக் காட்டில் விடுவது தவறில்லை என்ற கருத்தை எல்சா மூலம் உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார் ஜாய் ஆடம்ஸன். அதனால்தான், ஆப்பிரிக்க சிங்கங்களின் பாதுகாப்பில் ஆதாரப் புள்ளியாக இன்று ஜாய் போற்றப்படுகிறார்.
எல்சாவை வளர்த்த தன் அனுபவங்களை ‘பார்ன் ஃப்ரீ’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார் ஜாய் ஆடம்ஸன். பபேசியா எனும் ஒட்டுண்ணியால் சிங்கங்கள் இறக்கும் என்பதை முதன்முதலில் அறிந்தவரும் இவர்தான். காரணம் எல்சா, அந்த ஒட்டுண்ணியால்தான் இறந்தது. இப்படி சிங்கங்கள் குறித்த பல தகவல்களை அந்தப் புத்தகத்தில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருப்பார் ஜாய். அந்தப் புத்தகத்தின் தலைப்பிலேயே ஹாலிவுட் படம் ஒன்று வெளியாகி ஆஸ்கர் விருதைப் பெற்றது.
அன்பைப் பதம் பார்த்த அம்பு
இப்படியொரு மகத்தான பணியைச் செய்த ஜாய் ஆடம்ஸன், 1980-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். காட்டுயிர் தாக்கி இறந்திருக்கலாம் என்று முதலில் ஊகிக்கப்பட்டது. ஆனால் அவர் கொல்லப்பட்டார் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. ஆடம்ஸன் தம்பதியரிடம் முன்பு வேலைபார்த்த ஊழியரே ஜாய் ஆடம்ஸனைக் கொன்றதாக வழக்கை முடித்தது கென்ய அரசு. 1989-ம் ஆண்டு அவருடைய கணவர், கள்ள வேட்டைக் கும்பலால் கொல்லப்பட்டார்.
எல்சாவுக்குப் பிறந்த மூன்று குட்டிகளையும் ஒரு சிற்றன்னைபோல இருந்து, அவற்றை வளர்த்து, காட்டில் விட்டார் ஜாய் ஆடம்ஸன். அதில் ஜெஸ்பா எனும் சிங்கக் குட்டி, பழங்குடி மக்கள் தன் மீது எய்த அம்பை சுமார் ஒரு வருட காலம் சுமந்திருந்தது. கென்ய அரசின் நெருக்குதல் காரணமாக அந்தக் குட்டிகளை, செரெங்கெட்டி தேசியப் பூங்காவில் விட்டது ஆடம்ஸன் தம்பதி. ஜெஸ்பாவின் நிலை என்னவானது என்று இறுதிவரை ஜாய் ஆடம்சனுக்குத் தெரியவில்லை. அப்போது அவர் இப்படி எழுதினார்:
“நான் எவ்வளவு காலம் வாழ்கிறேனோ, அவ்வளவு காலம் காட்டுயிர்களுக்கு உதவி செய்வேன். அவற்றுக்கு உதவி செய்வதன் மூலம் மனிதர்களுக்கே உதவி செய்கிறேன் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் காட்டுயிர்கள் இல்லையென்றால் அவற்றுடன் இந்தச் சூழலியலைப் பங்கிட்டிருக்கும் நாமும் இருக்க மாட்டோம். நான் எல்லா ஆப்பிரிக்க சிங்கங்களிடமும் எல்சாவின் சாயலையே பார்க்கிறேன். எனவே, அந்த சிங்கங்கள் எல்லா அம்புகளிடமிருந்தும் காப்பாற்றப்படட்டும்!”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT