Published : 23 Apr 2017 11:57 AM
Last Updated : 23 Apr 2017 11:57 AM
ஆண்டு முழுவதும் செழித்து வளரக்கூடியது சோற்றுக் கற்றாழை. ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அருமருந்து. குறைந்த அளவு நீரிலும் மண்ணிலும் வளரும். நீரும் மண்ணும் இல்லாவிட்டால்கூடக் காற்றில் இருக்கும் சத்துகளை ஈர்த்து வளரக்கூடிய அரிய மூலிகை.
ஆற்றங்கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் தானாகவே வளரும். 250 வகைக் கற்றாழைகள் தோட்டங்களில் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவக் குணம் மிக்கவை. அழகு சாதனப் பொருட்களில் அதிகம் பயன்படும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. என்றும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் தினந்தோறும் உள்ளும் புறமும் சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தலாம்!
எப்படி வளர்ப்பது?
மூலிகைகளிலேயே மிக எளிதாக வளரக்கூடிய தாவரம் இது. ஒரு செடியை நட்டு வைத்தாலே போதும், சில நாட்களில் துளிர்த்து வளர ஆரம்பித்துவிடும். இதை மற்ற பெரிய செடிகள், மரங்களுடன் துணைச் செடியாக வளர்க்கும்போது பூச்சிக் கட்டுப்பாடும் நிலவளப் பாதுகாப்பும் கிடைக்கும். மண்ணில் உள்ள நீர் விரைவாக ஆவியாவதையும் தடுக்கும்.
நேரடி உணவு
வைட்டமின் ஏ, சி, இ, பி12, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம், சோடியம் போன்ற பல வகைத் தாதுக்களும் 20 அமினோ அமிலங்கள், இன்னும் சில சத்துகளும் இவற்றில் இருக்கின்றன. சத்துகள் ஏராளமாக இருப்பதாலேயே இதை உலக மக்கள் சிறப்பு உணவு (super food) வகையில் சேர்த்துள்ளனர். இளமை காக்கும் தன்மையும் ஆயுளை நீட்டிக்கும் தன்மையும் உள்ளதால் இதை மற்ற இந்திய மொழிகளில் ‘குமரி’ என்றும் அழைக்கிறார்கள்.
கடுமையான கோடைக்காலங்களில் கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு, நடுப் பகுதியில் உள்ள திடக்கூழைத் தண்ணீரால் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதை ஒரு டம்ளர் மோரில் கலந்து அதனுடன் ஒரு சிட்டிகை மிளகுப் பொடி, சீரகப் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கல் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால் கோடைக்கால நோய்களைத் தடுக்கும். நோய்கள் வந்தாலும் விரைவில் குணமாக்கும் தன்மை இதற்கு உண்டு. சிறந்த மலமிளக்கி. குடல்புண், உணவுக் குழாயில் ஏற்படும் எரிச்சல், புண் ஆகியவற்றைச் சீர் செய்யும்.
தலைக்கு
செம்பருத்தி இலை 100 கிராம், வெந்தயம் 10 கிராம், மருதாணி இலை 100 கிராம், கற்றாழை 50 கிராம் என்ற அளவில் எடுத்து அரைத்து இயற்கை ஷாம்பூவாகப் பயன்படுத்தலாம்.
முகத்துக்கு
பச்சைப் பயறு 100 கிராம், புங்கங்காய் 10 கிராம், சந்தனம் 5 கிராம், கற்றாழை 20 கிராம், ஆவாரம்பூ 10 கிராம் போன்றவற்றை அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்துவந்தால் முகம் பொலிவு பெறும். வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.
பூச்சி விரட்டி
இயற்கை விவசாயத்துக்கும் மாடித் தோட்டத்துக்கும் கற்றாழை மிகச் சிறந்த செலவில்லாப் பூச்சி விரட்டியாகவும் நுண்ணூட்டப் பொருளாகவும் இருக்கிறது. செடிகளில் பூச்சிகள் வராமல் தடுக்கவும் வந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.
1. தோலுடன் அரைத்த கற்றாழைக் கூழ் 100 கிராம்
2. வேப்பங்கொட்டை 50 கிராம் அல்லது வேப்ப இலை 100 கிராம்
3. விரலி மஞ்சள் தூள் 10 கிராம்
4. பஞ்சகவ்வியம் 100 மி.லி.
இவை அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, இரண்டு நாட்கள் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். மாலை சூரியன் மறையும் நேரத்தில் 10 மி.லி. பூச்சி விரட்டிக் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, இலைகளில் நன்கு படும்படி தெளியுங்கள். வாரம் ஒருமுறை இந்தக் கரைசலைச் செடிகளுக்குப் பயன்படுத்தினால் பூச்சிகளின் தாக்குதல் குறையும். பயிருக்குத் தேவையான நுண்ணூட்டங்களும் கிடைக்கும்.
கட்டுரையாளர்,
இயற்கை வேளாண்மை ஆர்வலர்
தொடர்புக்கு: info@chennaigreencommune.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT