Published : 09 Apr 2017 08:31 AM
Last Updated : 09 Apr 2017 08:31 AM

என் பாதையில்: கிராமத்து அத்தியாயம்

இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த என் பெரிய தங்கையைப் பார்க்கச் சென்றேன். என் ஒன்றரை வயது மகளுடன் கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி போய் அங்கிருந்து நல்லிக்கோட்டைக்குப் போனேன். பேச்சும் அரட்டையுமாக அன்றைய பகல் பொழுது சந்தோஷமாகக் கழிந்தது. எங்கள் அத்தையின் மகனுக்கே தங்கையைக் கொடுத்ததால் அத்தை வீடென்று பள்ளி விடுமுறைக்குப் போய் வந்த ஊர்தான்.

தெருமுனையில் இட்லி சுட்டு விற்கும் வீட்டுக் கடையில் காரச்சட்னியான ரோசாப்பூ சட்னியுடன் எங்களுக்கு டிபனாக அரிசி அல்வாவையும் வாங்கித் தருவார்கள். அத்தை வீட்டில் சுடும் சோள தோசையை நினைத்தாலே நாவூறும். பச்சைப் பயறை ஊறவைத்து அரைத்து, இட்லி போல அவித்து அதனை உதிர்த்து நாட்டுச் சர்க்கரையும் தேங்காயும் சேர்த்த புட்டும், பச்சைப் பயறு பணியாரமும், நாட்டுக்கோழிக் குழம்பும் அத்தை மறைந்தாலும் நினைவில் நிற்பவை.

தங்கைக்கு அது மூன்றாவது பிரசவம். முதல் இரண்டும் தாய்வீட்டிலேயே பார்த்து விட்டதால் மூன்றாவது அத்தை வீட்டிலேயே பார்க்கட்டும் என்று இருந்துவிட்டார்கள். நான் போய் இறங்கிய அன்றே இரவு ஏழு மணிக்கு என் தங்கைக்கு இடுப்பு வலி எடுத்துவிட்டது. சோம்பு, தனியா போட்ட கஷாயம் வைத்துக் கொடுத்து, பிரசவ வலிதான் என்று தெரிந்தவுடன் வண்டிக்காரருக்குச் சொல்லி அனுப்பினோம். மாட்டு வண்டி கட்டி லாந்தர் விளக்குடனும் பேட்டரி லைட்டுடனும் கிளம்பினோம். காத்து கருப்பு அண்டாதிருக்க எங்களுக்குத் தலையில் வேப்பிலை இணுக்கு செருகினார் அத்தை.

என் தங்கையோடு அத்தை, நான், என் மகள் மூவரும் ஏறிக்கொள்ள வண்டிக்குப் பின்னால் மாமாவும் மற்றோர் உறவினரும் நடந்து வர வண்டி புறப்பட்டது. மூன்று மைல் போக வேண்டும். வடசேரி என்ற இடத்தில்தான் மருத்துவமனை இருந்தது.

செம்மண் பாதையில் மாட்டின் ஜல் ஜல் மணி ஓசையுடன் இருளின் அமைதி, இரவு வண்டுகளின் ரீங்காரம், சவுக்குத் தோப்பில் மரங்களை அசைக்கும் ஊதக் காற்று என்று இருந்த அந்த இரவை என்றைக்கும் மறக்க முடியாது. முக்கால் தூரம் போய்விட்டோம்.

தங்கைக்குப் பிரசவ வலி அதிகம் எடுக்க, “பொறுத்துக்கோ, பொறுத்துக்கோ. இதோ போய்விடலாம்” என்று தலையைத் தடவிக் கொடுத்து வேண்டுதல்களோடு அமர்ந்திருந்தோம். நான் பயந்தது போலவே வண்டியிலேயே பிரசவம் நடந்துவிட்டது. பிறந்த குழந்தை வீறிட்டு அழ, இடைஞ்சலாக இருக்குமே என்று எனது மகளைத் தூக்கி நடந்துவரும் மாமாவிடம் கொடுக்க, அவளும் வீல் வீல் என்று அழ, குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்ட மகிழ்வில் நானும் அழுதேன். பிறகு தாயும் சேயுமாக மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

இன்று அந்த ஊரில் பெரும்பாலான வீடுகளில் கார், வண்டி என்று வசதியாக இருக்கிறார்கள். ஆனால் போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற காலத்தில் நிகழ்ந்த என் தங்கையின் குழந்தைப் பேறு என் வாழ்நாளில் மறக்கவே முடியாதது.

- கு. மாலதி குசேலன், சென்னை.



நீங்களும் சொல்லுங்களேன்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x