Last Updated : 12 Mar, 2017 02:19 PM

 

Published : 12 Mar 2017 02:19 PM
Last Updated : 12 Mar 2017 02:19 PM

முகம் நூறு: நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட்டம்!

பழங்குடி சங்கத் தலைவர் முத்தம்மா

இன்று முத்தம்மாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒருநாள் முழுவதும் ஊடகங்கள் இவரது பெயரை உச்சரித்து ஓய்ந்துள்ளன. கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலை அமைந்துள்ள இடம் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமானவர்களில் முக்கியமானவர் முத்தம்மா.

வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர். இவர் தாக்கல் செய்த மனுவின் பலனாகத்தான் உயர் நீதிமன்றம் ஈஷா யோக மையம் குறித்த பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருக்கிறது. அந்தப் பரபரப்பான காலகட்டத்தைப் பற்றிக் கேட்டபோது, உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் முத்தம்மா.

“பிரதமர் கோவைக்கு வந்தபோது என் குடிசை வீட்டைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் காவலுக்கு இருந்தனர். உதவி பெண் ஆய்வாளர் வீட்டுக்குள்ளேயே 24 மணி நேரமும் என்னுடன் இருந்தார். அதெல்லாம் என் பாதுகாப்புக்காகத்தான்னு சொன்னாங்களே பார்க்கலாம்! பிரதமர் வரும்போது நான் கறுப்புக் கொடி காட்டிடுவேன், வேறு ஏதாவது நூதனப் போராட்டத்தில் இறங்கிடுவேன்னு அதிகாரிகள் பயந்ததால்தான் எனக்கும் என் குடிசைக்கும் இத்தனை பாதுகாப்பு” என்று கம்பீரமாகச் சொல்கிறார் முத்தம்மா.

யார் இந்த முத்தம்மா?

இவர் மட்டுமல்ல; இவரது பெற்றோர், உடன் பிறந்தவர்கள் யாருமே படித்ததில்லை. இவருக்குச் சொந்த ஊர் அட்டப்பாடி கோட்டத்துறை அருகில் உள்ள பூதிவழி கிராமம்.

“பழங்குடி வம்சம்னாலும் காட்டுப் பொருள் சேகரிக்கும் தொழிலை அப்பா காலத்துலேயே நிறுத்தியாச்சு. அம்மா, அப்பா ரெண்டு பேருமே கூலி வேலைகளுக்குப் போவாங்க. நானும் பத்து வயதிலிருந்தே கட்டிட வேலைக்குத்தான் போனேன். 19 வயசுல தாணிக்கண்டியில் (ஈஷா மையத்துக்குப் பின்புறம் உள்ள பழங்குடி கிராமம்) திருமணம் செய்து கொடுத்தாங்க. இங்கேயும் கஷ்டம்தான். கூலி வேலையில்தான் பொழைப்பு ஓடுச்சு. ஈஷாவுக்குள்ளேயும் வேலைக்குப் போயிருக்கேன். 1998-வது வருஷம் சத்யஜோதி நேர்டு சங்கத்தைச் சேர்ந்தவங்க தாணிக்கண்டியில் சுயஉதவிக் குழு ஆரம்பிக்க உதவி செஞ்சாங்க.

முதல்ல 12 பேர் வீதம் இரண்டு சுயஉதவிக் குழுக்கள் உருவாச்சு. அப்போ குழுவில் நான் மூணாவது ஆளாகத்தான் இருந்தேன். கொஞ்சமாவது படிச்சவங்க, கையெழுத்துப் போடறவங்க, வங்கிக்குப் போறவங்கதான் அந்தப் பொறுப்புல இருக்கணும்னு நினைச்சோம். அவங்க அதைச் செய்தாலும் களப்பணிகள், பெண்களை ஒருங்கிணைப்பது, கூட்டம் போட்டுப் பேசுவதில் நான் முன்னாடி நிற்பேன்” என்கிறார் முத்தம்மா.

“தாணிக்கண்டியைச் சுற்றியுள்ள எட்டு ஊர்ப் பெண்கள், முதலில் சுயஉதவிக் குழுக்கள்ல சேர்றோம்னு சொல்லுவாங்க. அப்புறம் வரவே மாட்டாங்க. வனத்துறை அதிகாரிகள், கார்டு, வாட்சர், ரேஞ்சர்களைக் கண்டாலே பயப்படுவார்கள். பேச மாட்டாங்க. முத்தம்மா பேசினாதான் எல்லோரும் வருவாங்கன்னு நேர்டு சங்கத்துக்காரர்கள் ஊக்கம் கொடுத்தாங்க” என்று சொல்லும் முத்தம்மா அந்த வேலையை மிகச் சரியாகச் செய்தார். ஒருபக்கம் பெண்களிடமும் இன்னொரு பக்கம் வனத்துறை ரேஞ்சர், அலுவலர்களிடமும் பேசி சம்மதிக்க வைத்தார். அதன் பலனாக ஒவ்வோர் ஊரிலும் சுயஉதவிக் குழு உருவானதோடு, வனக் குழுவும் உருவானது.

தேடி வந்த தலைமைப் பொறுப்பு

புளி, சிகைக்காய், துடைப்பம் புல், ஜாதிக்காய், பூச்சக்காய் என்று வனப் பொருட்கள் சேகரிக்கிற உரிமையை, வனக் குழு மூலமாக முதன்முதலில் எடுத்தனர். அந்த வனக் குழுவில் 18 சுய உதவிக் குழு கூட்டமைப்பும் அங்கம் வகித்தது. அதன் தலைவியாக முத்தம்மாவை நியமித்தனர்.

“சுயதொழில் செயல்பாட்டின் மூலமா எங்க பெண்களுக்கு ஊதியம் போக, 40 ஆயிரம் ரூபாய் சேமிப்புக் கணக்குல வச்சிருந்தோம். அதுக்குப் பின்னாலதான் பெண்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அதிகமானது. பெண்கள் எல்லாம் வீட்டை விட்டு வெளியே வரணும்னு போற இடங்கள்ல எல்லாம் பேசுவேன். அப்போ இருந்த வனத்துறை அதிகாரிகளும் நல்ல ஒத்துழைப்பு தந்தாங்க. பெண்களுக்கு வெளி உலகம் தெரிய ஆரம்பிச்சது. விவசாயத்துக்கு லோன், காட்டாமணக்கு வச்சா வரக்கூடிய லாபம் போன்ற விஷயங்கள் எல்லாம் அந்தந்தத் துறை அலுவலர்கள் மூலம் விளக்கமா சொல்லப்பட்டது.

அதன்பேரில் நாங்கள் பூர்வீகமா வாழ்ந்த பழங்குடியினருக்கான 95 ஏக்கர் செட்டில்மென்ட் பூமி வனத்துறை கட்டுப்பாட்டில் சும்மா கிடப்பது தெரியவந்தது. அதைத் திரும்பப் பயன்படுத்த முடிவு செஞ்சு, வேலி போட்டுப் பயிர் செய்யவும் திட்டமிட்டோம். அதுலதான் பிரச்சினையே கிளம்பியது. இங்குள்ள பழங்குடி மக்கள் எல்லாம் இதைச் சுத்தியிருக்கிற ஆன்மிக, கல்வி மையங்களுக்குக் கூலிக்குச் செல்கிறவர்களாகவும் பண்ணைக் கூலிகளாகவும் இருந்தாங்க. பழங்குடிப் பெண்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கினால் என்னவாகும்னு, சிலர் மறைமுகமாக எதிர்க்க ஆரம்பிச்சாங்க.

அதில் எனக்கெதிராகவும் எங்கள் குழுவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சாங்க. பணம், பதவி, ஆசை வார்த்தைகள் எல்லாமே பயன்படுத்தப்பட்டது” என்று சொல்லும்போது, முத்தம்மாவின் குரலில் வருத்தம் தெரிகிறது.

தொடரும் போராட்டம்

பழங்குடியினர் 300-க்கும் மேற்பட்டோர் ஆதிகுடிகளாக இந்தக் கானகத்திலிருந்து வந்தாலும், சொந்தமாகக் குடியிருக்க ஒரு வீடு இல்லை. இரண்டு சென்ட் நிலம்கூட இல்லை. சொந்தமாக வீடு கட்ட இலவச நிலம் கேட்டு மனுக்கள் அளிக்கப்பட்டுவந்ததைச் சுட்டிக்காட்டி அதிகாரிகளிடம் கேட்டதுடன், போராட்டத் திலும் ஈடுபட்டனர் முத்தம்மா குழுவினர்.

“நாங்க போராடிய பிறகுதான் நீங்க இருக்கிற பகுதியில் புறம்போக்கு நிலம் இருந்தா காட்டுங்க, அதை வீடில்லாதவங்களுக்குத் தர்றோம்ன்னு அதிகாரிகள் சொன்னாங்க. நாங்க அப்படித் தேடினதில் 44 ஏக்கர் நிலம் அரசாங்கத்தோட நில உச்ச வரம்பு சட்டத்துல எடுக்கப்பட்டு, சும்மா கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில்தான் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்தது. அதை அரசாங்கத்தோட கவனத்துக்குக் கொண்டு போனோம். நீதிமன்றத்துல நியாயம் கேட்டோம். எங்களைப் பொறுத்தவரை வீடில்லாத எங்க ஜனங்களுக்கு வீடு வேணும். அவ்வளவுதான். அதை முறைப்படி கேட்கிறோம். அதில் யாருக்குப் பாதிப்பு வருதோ, அவங்க எல்லாம் எங்களுக்கு மறைமுக எதிர்ப்பு காட்டுறாங்க.

நாங்க உங்களுக்கு என்ன செய்யலை? நல்ல சோறுகூட இல்லாம இருந்தீங்க, உணவு கொடுத்தோம். வேலையில்லாம கஷ்டப்பட்டீங்க, வேலை தந்தோம். படிப்புத் தர்றோம். வறுமைய நீக்கறோம். மருத்துவ உதவிகள் செய்யறோம்னு சொன்னாங்க. எல்லாம் செஞ்சீங்க, எங்களுக்கு ஒண்டறதுக்கு ஒரு நிலமும் வீடும் கேட்கிறோம். அதைத் தடுக்கறீங்களே, நியாயமான்னு கேட்கிறோம். நாங்க அவங்களுக்கு எதிராகப் போராடலை, எங்களுக்காகப் போராடுறோம். இப்படி அந்த விஷயத்துல உறுதியா நின்னதுக்காக நெருக்கமான சொந்த பந்தங்களையே கைக்குள்ளே போட்டு, என் மேல அவதூறு கற்பிச்சாங்க.

நான் எதுக்கும் மசியறதா இல்லை. எங்க மக்களுக்குக் குடியிருக்கவும் வாழ்க்கை நடத்தவும் உரிமையுள்ள நிலத்தை வாங்கிக் கொடுக்காமல் ஓய மாட்டேன்” என்று உறுதியாகக் கூறும் முத்தம்மாவின் போராட்டம் வெற்றிபெறும் நாள் தொலைவில் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x