Published : 22 Jan 2017 03:20 PM
Last Updated : 22 Jan 2017 03:20 PM

சட்டமே துணை: பாலியல் புகாருக்கு இழப்பீடு உண்டா?

மீனாவின் அலுவலகத்தில் ஐசிசி கமிட்டி தன் வேலையை ஆரம்பித்துவிட்டது. அது தெரிந்ததும் நாதன் தொலைபேசியில் அழைத்து, “சுமுகமாக முடித்துக்கொள்ளலாம், இனிமேல் தவறு நிகழாது, அதற்குத் தேவையான ‘எதையும் செய்யத் தயார்” என்று சொன்னது மீனாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

பாலியல் குற்றம் சாதாரணமானதா?

அலுவலகத்தில் இருந்த கமிட்டியின் மூன்றாவது நபரான ஒரு பெண் வழக்கறிஞரைச் சந்திப்பதற்காகத் தன் அம்மாவுடன் மீனா சென்றார். அவருடன் பேசியதிலிருந்து மீனாவுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. அதாவது இந்தச் சட்டத்தில் பேச்சுவார்த்தை என்ற ஒரு வாய்ப்பு இருந்தாலும் பணம் கொடுத்துப் பேச்சு வார்த்தையில் புகாரை முடித்துவிட முடியாது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உண்மையான எண்ணம் நிர்வாகத்துக்கும், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நியாயத்தைப் பெற வேண்டும் என்ற உறுதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இருந்தால்தான் நியாயம் பெறுவது சாத்தியப்படும்.

விசாரணை தொடங்குவதற்கு முன்பாக அலுவலகத்தில் மீனா மதிக்கக்கூடிய ஒரு பெண், “என்ன மீனா போட்டுத் தள்ள வேண்டும் என்று முடிவே செய்துவிட்டாயா?” என்று கேட்டார்.

“போட்டுத் தள்ளுவதா? செய்த தவறைத்தானே சட்டப்படி கேள்வி கேட்கிறேன்?” என்றார் மீனா.

பாலியல் ரீதியான தவறு செய்கிற ஆண் மீது புகார் செய்வதை, அவன் வேலைக்கு உலை வைக்கும் செயலாகப் பார்ப்பதும் கொலைக்குச் சமமாகக் கருதுவதும் எந்த விதத்தில் நியாயம்? அப்படியானால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கியது, குற்றவாளி கேள்விக்குள்ளாவதைவிடச் சிறிய குற்றமா? ஏன் பெண் மீதான வன்முறைகள் குறிப்பாகப் பாலியல் வன்முறைகள் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன?

தேவையில்லாத குறுக்கீடு

விசாரணைக்கு முதல் நாள் மாலை மீனா அம்மாவின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் வீட்டுக்கு வந்தார்.

“நாதனை எனக்கு நல்லாவே தெரியும். அடிப்படையில் வெகுளி. அவர் வாழ்க்கை முழுவதுமே கஷ்டங்களை அனுபவித்தவர். ஒருமுறை தவறு செய்துவிட்டார்...” என்று அவர் பேச்சை முடிக்கும் முன்பே நிறுத்திய மீனா, கோபத்தில் கத்தினார்.

“அம்மா, நீ கேட்பது நியாயம்தான். அவன் நல்லவன்னு சொல்ல வரலை. அவன் வேலை போய்விட்டால் என்ன செய்வான்? நீ அவனை மன்னித்து விட்டுவிட்டால் அவன் பிழைத்துப் போவான். உனக்காக அவன் எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்” என்றார் அந்தப் பெரியவர்.

“எதையும் என்றால்?”

“பணம்”

“லஞ்சமா?”

“நஷ்ட ஈடு”

“உங்க பெண்ணுக்கோ, மனைவிக்கோ பாலியல் ரீதியான வன்முறைக்கு எவ்வளவு பணம் கொடுத்தால் நீங்கள் திருப்தி அடைவீங்க? எவ்வளவு நஷ்டஈடு சரியாக இருக்கும்?” என்று கேட்டார் மீனா.

அவர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் கிளம்பினார்.

மீனாவுக்கு இப்போது பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சட்டமும் விதிமுறையும் மிக நன்றாகத் தெரியும். இந்தச் சட்டத்தின்படி சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பாதிக்கப்பட்ட பெண் தயாராக இருந்தால், பேச்சு வார்த்தையில் இதை ஐசிசி கமிட்டி முடிக்கலாம். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படை பண ரீதியான இழப்பீடாக இருக்க முடியாது. எந்த ஒரு பேச்சுவார்த்தையோ, சமாதானமோ பணத்தின் அடிப்படையில் செய்ய முடியாது என்று சட்டம் தெளிவாகச் சொல்கிறது என்பது மீனாவுக்குத் தெரியும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாகுபாடுகள் நிறைந்த இந்தச் சமூகத்தில் பண இழப்பீடு கொடுப்பதைச் சட்டமே ஏற்றுக்கொண்டால், வன்முறை செய்துவிட்டு இழப்பீடு கொடுத்துவிடும் அபாயகரமான போக்கு, பெண்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். பாலியல் வன்முறைகள் தொடர்பான புகார்களில் பண இழப்பீடு சட்ட விரோதமானது என்பதை இந்தச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

வழிகாட்டும் விசாரணை

சட்டத்தின்படி கமிட்டி இரு தரப்பு சாட்சிகளையும் விசாரிக்கும். தங்கள் தரப்பு சாட்சியங்களை எடுத்துச் சொல்ல சமவாய்ப்பை அளிக்கும். பாதிக்கப்பட்ட பெண் தரக்கூடிய புகார், ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் என்று எல்லாத் தரவுகளையும் அதன் நகல்களையும் குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கும் தர வேண்டும். தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க அவருக்கு இது உதவும். மேலும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்பட்டு, பண இழப்பீடு அற்ற பிற நிபந்தனைகள் மூலம் புகார் முடிவுக்கு வந்த பின், குற்றம் சாட்டப்பட்ட ஆண் நிபந்தனைகளை மீறினால் ஐசிசி கமிட்டி விசாரணையை மீண்டும் ஆரம்பித்து இறுதி முடிவு எடுக்கும்.

சட்டப்படி புகார் தருவதற்கு 30 நாட்களிலிருந்து 90 நாட்கள்வரை அவகாசம் தரப்பட்டிருக்கிறது. புகாரைப் புகார் கமிட்டி பெற்றுக்கொண்டு ஏழு நாட்களுக்குள் எதிர்வாதிக்குப் புகார் நகலையும் ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். 10 நாட்களுக்குள் எதிர்வாதி பதில் தர வேண்டும். 90 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று விதிகள் சொல்கின்றன.

விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தரும்போது பாலியல் வன்முறை நிரூபிக்கப்பட்டால் குற்றம் புரிந்தவருக்கு அலுவலக விதிகள்படி தண்டனையும் நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பொருளாதார இழப்பீட்டை முடிவு செய்யவும் ஐசிசி கமிட்டிக்குச் சட்டம் வழி செய்கிறது. எந்த வித அச்சுறுத்தல்களுக்கும் பணத்துக்கும் அடிபணியாமல் விசாரணையில் மீனா முழுவீச்சுடன் ஈடுப்பட்டார். இது நாதனுக்கு மட்டுமல்ல அலுவலகத்தில் இருந்த பலருக்கும் பல படிப்பினைகளைக் கொடுத்தது.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x