Published : 22 Jan 2017 03:30 PM
Last Updated : 22 Jan 2017 03:30 PM
உல்லாசமாகவும் உற்சாகமாகவும் இருந்த கல்லூரி வாழ்க்கைக்கு என் திருமணம் சடன் பிரேக் போட்டது. பாரதி போற்றிய புதுமைப் பெண்ணாக சாதிக்க நினைத்த என் எண்ணங்கள் எல்லாம் தூளாகின. சம்பாதித்து என் காலில் நிற்பேன், சுய கௌரவத்தை இழக்க மாட்டேன், நான் நானாகவே இருப்பேன் என்று தோழிகளிடம் சவால் விட்டதெல்லாம் நினைவுக்கு வந்தன. மனத்தைத் தேற்றிக்கொண்டு இறுதித் தேர்வை எழுதினேன்.
1980-களில் பெற்றோரை எதிர்த்து என்னால் போரிட முடியவில்லை. இத்துடன் என் அத்தியாயம் முடிந்தது என்ற எண்ணத்தோடுதான் மண வாழ்க்கையை ஆரம்பித்தேன். கூட்டுக் குடும்பம். கணவர் வங்கியில் பணியாற்றிவந்தார். லட்சியங்களை மூட்டைக் கட்டி வைத்து விட்டு, வாழ்க்கை நீரோட்டத்தில் கலந்துவிட்டேன். படித்த, பண்பாளரான கணவர் என் மனதைப் புரிந்துகொண்டார். என் மேற்படிப்புக்கான விண்ணப்பத்தை வாங்கிக் கொடுத்தார். தீபாவளி மத்தாப்பூவாக என் உள்ளம் பூரித்தது. மேற்படிப்பு படித்தேன். இடையில் ஐஏஎஸ் தேர்வு எழுத உற்சாகப்படுத்தினார். சரியாகத் தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதால் 24% மதிப்பெண்தான் வாங்க முடிந்தது. இருந்தாலும் ஒரு சின்னப் பெருமிதம் வந்தது.
அடுத்து வங்கிப் பணிக்குத் தேர்வெழுதினேன். முதல் முயற்சியிலேயே தேர்வானேன். மகிழ்ச்சியில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தேன். வங்கிப் பணியில் 35 வருடங்கள் பணியாற்றி பணி நிறைவும் பெற்றுவிட்டேன்.
படிப்பு, வேலை, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் எனக்கு உறுதுணையாக இருந்து எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர், எனக்காகத் தன் பதவி உயர்வையும் தியாகம் செய்தார். ஓய்வு நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, “மாடித்தோட்டம் அமைத்து செடிகளோடு உரையாடு” என்றார். வாழ்க்கை ரம்மியமாகப் போகிறது.
திடீரென்று ஒருநாள், “நான் பாட்டு கற்றுக் கொள்ளவா?” என்று கேட்டவுடன், இந்த வயதில் ஏன் இந்த ஆசை என்று கிண்டல் செய்யாமல், அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார். அடுத்து கார் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருக்கிறேன். கற்றுக்கொள்வதற்கு வயது தடையில்லை என்று சொல்லும் என்னவர், இதற்கும் பச்சைக்கொடிதானே காட்டுவார்!
- சுந்தரி ராஜேந்திரன், கும்பகோணம்
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT