Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM
வீடோ, அலுவலகமோ நாம் அணிகிற ஆடைதான் நம்மை அடையாளப் படுத்தும். இடத்துக்கு ஏற்ப ஆடை அணிகிறபோது நம் மதிப்பு தானாகவே உயரும். அதற்காக நம் இருப்பைக் காட்ட வேண்டுமே என்று அடுத்தவர் கண்களைக் குருடாக்குகிற மாதிரி ஆடை அணிந்து செல்வதும் தவறு. சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி ஆடை அணிவதுதான் முக்கியம். மாலை நேர விழாக்களுக்குச் செல்லும்போது தேர்ந்தெடுத்த உடைகளை அணிவது சிறந்தது. நவநாகரிக ஆடைகளை விரும்பு கிறவர்கள், ஃப்ளோயி ஸ்கர்ட்டும் அதற்கு ஒத்துப் போகிற டாப்ஸும் அணியலாம். உயரம் குறை வானவர்களைக்கூட உயரமாகக் காட்டக்கூடிய மந்திரம் இந்த வகை ஆடைக்கு உண்டு.
முழங்கால் வரை தொடக் கூடிய ஸ்கர்ட் ரகங்களையும் அணியலாம். பென்சில் ஸ்கர்ட்டுகள் இப்போது அலுவலக உடையாக அறியப்படுவதால், அவற்றைத் தவிர்த்து மற்ற ரகங்களை அணியலாம்.
கல்லூரிக்கு ஏற்றவை
தரைதொடுகிற ஃபுல் லெங்க்த் ஸ்கர்ட்களைத்தான் கல்லூரிப் பெண்கள் தேடித் தேடி வாங்குகிறார்கள், விரும்பி அணிகிறார்கள். அதுவும் இந்த வகை ஸ்கர்ட்டுகள் விதவிதமான டிசைன்களில் பிரின்ட் செய்யப்பட்டுக் கிடைப்பது அவர்களின் தேடுதல் வேட்டையைச் சுவாரசியமாக்குகிறது. காட்டன், சிந்தடிக், கிரஷ்டு எனப் பல ரகங்களில் கிடைப்பதால் ரசனைக்கு ஏற்ற மாதிரி அணிந்து செல்கிற வாய்ப்பும் இதில் உண்டு. இந்த வகை ஸ்கர்ட்டுகளுக்கு டீஷர்ட்டுகள் அருமையாக ஒத்துப் போகும். அலுவலகத் தோற்றம் தராத வகையில் இருக்கிற காலர் வைத்த ஷர்ட்டுகளையும் அணிந்து செல்லலாம்.
மெருகூட்டும் நகைகள்
இப்படி மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து அணியும்போது, அதற்கு ஏற்ற மாதிரி நகைகள் அணிந்திருக்கிறோமா என்பதும் முக்கியம். ஜீன்ஸ் அணியும்போது வளையல்களைத் தவிர்த்து பிரேஸ்லெட்டை அணியலாம். ஸ்கர்ட் மற்றும் லெக்கிங்ஸ் அணியும்போது நாகரிகத் தோற்றம் தரும் ஒற்றை வளையல் சிறந்த தேர்வு. விரும்பினால் சத்தம் வராத மெல்லிய ஃபேன்ஸி கொலுசு அணியலாம். ஜீன்ஸ் போடும்போது ஹீல்ஸ் அல்லது ஸ்டிராப் வைத்த செருப்பை அணியலாம்.
சிகை அலங்காரம் ஆடம்பரமோ, உறுத்தலோ இல்லாமல் இயல்பாக இருக்க வேண்டும். இறுக்கமாகப் பின்னுவதைத் தவிர்த்து கொஞ்சம் லூஸ் ஹேர் ஸ்டைல், மிக்ஸ் அண்ட் மேட்ச் ஆடைகளுக்கு அருமையாக ஒத்துப்போகும். எல்லாவற்றையும்விட, நாம் அணிந்திருக்கிற ஆடை நமக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்ற எண்ணத்துடன் இருப்பது நம் கம்பீரத்தைக் கூட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT