Published : 19 Feb 2017 10:20 AM
Last Updated : 19 Feb 2017 10:20 AM
விதவிதமான மேற்கத்திய ஆடைகளை அணிகிறவர்கள்கூட வீட்டு விசேஷங் களுக்கும், திருவிழாக்களுக்கும் பட்டுப் புடவை களைத்தான் விரும்பி உடுத்துகிறார்கள்.
அந்தப் புடவைகளுக்குத் தோதான பிளவுஸ்களைத் தேடுவதைப் போல அதற்கேற்ற நகைகளைத் தேடுவதும் பெரும் பாடாக இருக்கும். “இனி அந்தக் கவலை தேவையே இல்லை. இப்போது எந்த நிறப் பட்டுப் புடவைக்கும் கைகொடுக்கின்றன சில்க் திரெட் நகைகள்” என்கிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவின் அடையாளம் விதவிதமான பட்டு நூல் நகைகள். நெற்றிச்சுட்டி, காது ஜிமிக்கிகள், நெக்லஸ் வகைகள், ஆரம், பிரேஸ்லெட், ஒட்டியாணம் போன்றவற்றைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் செய்வது இவரது சிறப்பு.
“எனக்கு சின்ன வயதிலிருந்தே ஃபேஷன் நகைகள் மீது ஆர்வம். ஒருமுறை மகளிர் சுய உதவிக் குழுவினருக்குப் பயிற்சி கொடுத்தாங்க. எம்.காம். படிச்சதால என்னை எங்க வீட்ல பேங்க் வேலைக்காக எக்ஸாம் எழுதச் சொன்னாங்க. அதுக்காக படித்தபோது நடுநடுவே ரிலாக்ஸ் செய்துக்க ஃபேஷன் நகைகள் செய்ய ஆரம்பிச்சேன். என் ஃப்ரெண்ட் வீட்டு விசேஷத்துக்கு எல்லா நகைகளையும் மேட்சிங்கா போட்டுட்டுப் போனேன். பார்த்தவங்க எல்லாரும் எங்கே வாங்கினேன்னு கேட்டுத் துளைச்சியெடுத்துட்டாங்க” என்று சொல்லும் ஐஸ்வர்யாவுக்கு அந்தப் பாராட்டுக்களே ஊக்கம் அளித்தன. அதற்குப் பிறகு தொடர்ந்து ஃபேஷன் நகைகள் செய்துவருகிறார். ஃபேஸ்புக், இணையதளம் வழியாக ஆர்டர் எடுக்கிறார்.
- ஐஸ்வர்யா
“ஹைதராபாத், பெங்களுரூவிலிருந்து மொத்தமா ஆர்டர் கொடுக்கிறாங்க. பட்டுப் புடவைகளின் போட்டோ அனுப்பச் சொல்லி அதே நிறத்தில் நூல்களை வரவழைத்து நகைகள் செய்கிறேன். ஒரு செட் நகைகளை செய்து முடிக்க ஆறு நாள் ஆகும். வித்தியாசமான டிசைன்கள் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தன. கடையில் வாங்குகிற ஹேங்கிங்கைத்தான் பலரும் பிளவுஸில் அட்டாச் செய்வாங்க.
நான் அந்தப் புடவையின் இரண்டு நிறங்களையும் கலந்து வேலைப்பாடு நிறைந்த பிளவுஸ் ஹேங்கிங் செய்யறேன். அதுவே என்னோட ஸ்பெஷல்னு வாடிக்கையாளர்கள் பாராட்டுறாங்க. அடுத்ததா டெரகோட்டா, ஜுட் நகைகள் செய்யற திட்டமும் இருக்கு” என்று சொல்லும் ஐஸ்வர்யா, வெளிநாடுகளுக்கும் ஃபேஷன் நகைகளை ஏற்றுமதி செய்துவருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT