Published : 16 Mar 2014 12:25 PM
Last Updated : 16 Mar 2014 12:25 PM
டாக்டர் கமலா ஷங்கர், ஹிந்துஸ்தானி இசைக்குச் செய்திருக்கும் மிகப் பெரிய பங்களிப்பு, ஆறு தந்திகளையுடைய ஹவாயன் கிதாரை மேம்படுத்தி (4 முக்கியத் தந்திகள் மூன்று சிகாரி தந்திகள் அதனுடன் இணைந்த 11 தந்திகள்) வாரணாசியில் அருள்பாலிக்கும் ஷங்கரின் பெயரிலேயே `ஷங்கர் கிதாராக’ இசை உலகுக்குத் தந்ததுதான்!
இவர் தஞ்சாவூரில் பிறந்து வாரணாசியில் இசையைப் பரப்பிவருபவர். நான்கு வயதில் தன் அன்னையிடம் இசையில் பாலபாடத்தைத் தொடங்கிய கமலா, ஆறு வயதில் பண்டிட் அமர்நாத் மிஸ்ராவிடம் முறையான இசைப் பயிற்சியைப் பெறத் தொடங்கினார்.
ஹிந்துஸ்தானி இசையில் ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின், அவர் தேர்ந்தெடுத்த வாத்தியம் - ஹவாயன் கிதார். மேற்கு வங்கத்தில், ரவீந்திர சங்கீத இசை மேடைகளில் வாசிக்கப்படும் முதன்மை வாத்தியம் இது. இந்த வாத்தியத்தை வாசிக்கும் பயிற்சியை டாக்டர் ஷிவ்நாத் பட்டாச்சார்யாவிடம் கற்றார். அதன்பின் பண்டிட் சணலால் மிஸ்ராவிடமும் பண்டிட் விமலேந்து முகர்ஜியிடமும் இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
பிரயாக் சங்கீத் சமிதியில் சங்கீத் பிரபாகர், சங்கீத் பிரவீன் ஆகிய பட்டங்களைப் பெற்றிருக்கிறார். டாக்டர் கோபால் ஷங்கர் மிஸ்ராவின் வழிநடத்தலில், கிளாஸிக்கல் கிதாரில் இந்திய இசை என்னும் தலைப்பில் பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷனில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கிவரும் இவர், மனிதவள மேம்பாட்டு துறையின் உதவித்தொகையைப் பெறும் கலைஞரும்கூட.
ரோட்டரி இண்டர்நேஷனல் அமைப்பின் மூலமாக உலக நாடுகள் பலவற்றில் இசை பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். இவரின் ஹவாயன் கிதாரில் மியூஸிக் மெலடி, ரிச் ஹெரிடேஜ், டான்டரங் ஆகிய இசை ஆல்பங்களை முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன.
மும்பை சுர் சிங்கார் சம்ஸாத் அமைப்பின் சுர்மனி, பத்திரிகையாளர் அமைப்பு வழங்கிய கலாஸ்ரீ சம்மான், உத்தரப்பிரதேசத்தின் மேத்தா நியாஸ் சமூக் வாரனாசி அமைப்பின் சாரஸ்வத் சம்மான், ராஷ்ட்ரிய குமார் காந்தர்வ சம்மான் ஆகிய உயர்ந்த விருதுகளைப் பெற்றிருப்பவர்.
உள்நாட்டில் நடக்கும் அனைத்து இசை விழாக்களிலும் உலக நாடுகளில் நடக்கும் இசை விழாக்களிலும் தன்னுடைய ஷங்கர் கிதாரின் மூலம் இசையைப் பரப்பிவருகிறார் டாக்டர் கமலா ஷங்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT