Published : 08 Jan 2017 03:38 PM
Last Updated : 08 Jan 2017 03:38 PM
திரைப்பட இயக்குநர் சுராஜ், நடிகைகளின் ஆடை குறித்து அநாகரிகமாகப் பேசியதையும் அதற்கு நடிகைகள் தமன்னா, நயன்தாரா இருவரும் சொன்ன பதிலையும் கடந்த ஜனவரி 1-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியிட்டிருந்தோம். திரைப்படங்களில் பெண்களைப் பண்டமாகக் காட்டும் போக்கு சரிதானா என்றும் வாசகிகளிடம் கேட்டிருந்தோம். திரைத்துறையின் இந்தச் செயல்பாட்டைக் கண்டித்தே பலரும் எழுதியிருந்தார்கள். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு.
பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டும் கருதும் மனப்பான்மையும் அழகுப் பதுமைகளாகப் பயன்படுத்தும் போக்கும் இன்னும் மாறவேயில்லை. அது முன்பைவிட இன்னும் அதிகரித்துள்ளது. அதையே இயக்குநர் சுராஜும் நாகரிகமற்ற வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார். பணத் தேவைக்காகவோ, புகழுக்காகவோ நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் சமுதாயத்தின் பார்வையில் மிகவும் கீழ்த்தரமாகவே மதிப்பிடப்படுகிறார்கள். பணத்துக்காக அவர்கள் ‘எல்லாவற்றுக்கும்’ ஒப்புக்கொள்வார்கள் என்று ஆண்கள் ‘எதிர்பார்ப்பது’ பெண்களைப் பற்றிய அவர்களது மலிவான மனப்போக்கையே காட்டுகிறது.
நயன்தாரா கவர்ச்சியாக நடித்ததால் அவர் கருத்துக் கூற முடியாது என்று சொல்லக் கூடாது. சமூகப் பொறுப்பு என்பது இயக்குநர், நடிகர், நடிகைகள் கையில் மட்டுமில்லை. மட்டமான, பிற்போக்குத்தனமான, தனிமனிதர் துதிபாடும் மசாலா திரைப்படங்களை எப்போது நாம் புறந்தள்ளி ஒதுக்குகிறோமோ அப்போதுதான் சமுதாய அக்கறை திரைத்துறையினருக்கு ஏற்படும்.
- தேஜஸ், காளப்பட்டி.
திரைப்பட நாயகிகள் வெறும் பண்டமா என்று திரைத்துறையைச் சார்ந்த அனைவரும் யோசிக்கவேண்டும். தயாரிப்பாளர்கள், ‘இது நம் சமூகம். நம் பிள்ளைகளும் இதில்தான் வளர்கிறார்கள்’ என்ற எண்ணத்துடன் திரைப்படங்களை எடுக்கவேண்டும். திரைப்பட நாயகிகளின் கவர்ச்சியை நம்பிப் படம் எடுக்காமல் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க நினைத்தால்தான் நல்ல மாற்றம் வரும்.
- உஷா முத்துராமன், திருநகர்.
ஒரு பெண் என்ன ஆடை அணியவேண்டும் என்பதைச் சமூகம் தீர்மானிக்கவேண்டியது இல்லை. இந்தச் சமூகம் என்னை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை என் உடைதான் தீர்மானிக்கும் என்பதைக்கூட தெரியாமலா பெண்கள் இருக்கிறார்கள்? பிரபலம் ஆனதினாலேயே ஆடை பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அதை எப்படி ஆதரிக்க முடியும்? ஆடை குறைப்பின் மூலமே தங்களைத் திரைப்படத்தில் நிலைநிறுத்திக்கொள்ளும் இவர்களுடைய கருத்துகளை எப்படி நாம் அனைத்துப் பெண்களுக்குமான கருத்தாக எடுத்துக்கொள்ள முடியும்? பெண்கள் தங்களைப் பண்டமாகக் கருதும்வரை ஆண்கள் நுகர்வோராகப் பெண்கள் மீதான தங்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.
- சவிதா ஆனந்தகுமார்.
பெண்களைக் காட்சிப் பொருளாகத்தான் இன்றைய திரைப்படங்கள் காட்டுகின்றன. தனித்தன்மை, அங்கீகாரம் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது மிகக் குறைவே. தாங்கள் அணியும் ஆடைகள் மூலம் சமுதாயத்தில் பாதிப்பு வருகிறது என்று அறியாமலா நடிகைகள் இருப்பார்கள்? தங்களது நடை, உடை, பாவனையால் இளைய சமுதாயம் பாதிக்கக் கூடாது என்ற சிந்தனையோடு அவர்கள் செயல்பட்டால் நல்லது.
- பானு பெரியதம்பி, சேலம்
சுராஜின் கருத்து சந்தேகமில்லாமல் எல்லை மீறியது. நடிகைகளின் கண்டனமும் சரியானது. நடிகைகளின் சமூகப் பொறுப்பு கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. சில காட்சிகளில் அவர்கள் அணியும் உடை நமக்கே கண்ணை உறுத்தத்தான் செய்கிறது. அதனால் அவர்கள் காட்டும் கோபம் வலுவிழந்து நிற்பதால் அவர்களின் உணர்வுகளோடு நாம் ஒட்ட இயலவில்லை. பொங்கியெழும் நம் நாயகிகள், அதே அலைவரிசையில் நின்று, கண்ணியமாக உடையணிந்தால் மட்டுமே அவர்களின் கோபம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
- இரா.பொன்னரசி, சத்துவாச்சாரி, வேலூர்.
இயக்குநர் சுராஜ் தன்னுடைய மனவக்கிரத்தின் அளவைக் காட்டி விட்டார். மற்றவர்கள் காட்டவில்லை அவ்வளவுதான். இதில் அவரை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. நடிகைகள் தங்களுடைய ஆடைகளில் கண்ணியத்தைக் வெளிப்படுத்துகிறார்களா? கண்ணியமான உடை எது என்பதே சர்ச்சைக்குரிய விவாதம்தான். ஆனால் இன்றைய நடிகைகள் பொதுநிகழ்ச்சிகளில்கூட எப்படி ஆடை அணிந்து வருகிறார்கள்? ஒட்டுமொத்த திரைப்படத்துறைக்குமே சமூகப் பொறுப்பு இருக்கவேண்டும்.
- சஞ்சலா ராஜன், கோவை.
குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்கள் இப்போது குறைவு. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கதையோடு தொடர்புடைய உடைகளை அணியலாம். பெண்கள் ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பமாயிருந்தாலும் அது கண்களைக் கூசவைக்காமல் மரியாதை தருவதாக இருக்கவேண்டும்.
- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்.
என்ன ஆடை அணிந்து நடிக்கவேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நேரடியாக அவர்களைச் சொன்னதால் கொதித்து எழுகின்றனர். ஆனால் அவர்களே பல படங்களில் குறைந்த ஆடையுடன்தான் வருகின்றனர். இயக்குநருக்கும் நடிகைக்கும் சமபங்கு இருக்கும் இந்தச் சர்ச்சையில் யாரைக் குறை சொல்வது? எல்லோரும் முயன்றால் கண்ணியமான திரைப்படங்களைக் கொடுக்கலாம்.
- ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்.
சுராஜின் கருத்து ஆணாதிக்கத்தின் குரூர வெளிப்பாடு. அவர் வருத்தம் தெரிவித்திருந்தாலும்கூட ஒரு சில நடிகைகளைத் தவிர பெரும்பாலான நடிகைகள் தங்களின் கண்டனத்தைக்கூட பதிவு செய்ய வில்லை. நியாயமாகப் பார்த்தால் நடிகர் சங்கம் பலமான எதிர்ப்பைக் காட்டியிருக்கவேண்டும். பெண்ணுரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும்கூட இதற்கான கண்டனங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை. காரணம் நடிகைதானே என்ற அலட்சியம் காரணமாக இருக்கலாம். சினிமா துறையில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலுமே பெண்கள், ஆணாதிக்க உணர்வால் மிகக் கடுமையாகவும் மோசமாகவும் விமர்சிக்கப்படுகின்றனர்.
- பொன்.கருணாநிதி, கோட்டூர்.
திரைப்படம் என்பதே ஒரு கூட்டு முயற்சி என்பதை சுராஜ் புரிந்துகொண்டுதான் பேசினாரா? சமூகப் பொறுப்புடன் இனியாவது கண்ணியமாகப் பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
- பா.சுபிசுதா, காவேரிபாக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT