Last Updated : 19 Mar, 2017 11:14 AM

 

Published : 19 Mar 2017 11:14 AM
Last Updated : 19 Mar 2017 11:14 AM

சட்டமே துணை: சமூக வலைத்தளங்களில் தொடர்வதும் குற்றமே

கோமதி, பத்து ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். ஒரு நாள் தன் அம்மாவிடம், தன்னை ஓர் ஆசிரியர் முறையற்று தொட்டதைச் சொன்னாள். அம்மாவோ, அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரியாமல் நடந்துவிட்டிருக்கலாம் என்றும் சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கச் சொன்னார். கோமதிக்கு மனம் பொறுக்கவில்லை. தன் தோழியிடம் சொன்னாள். அவளோ, “நீ அவரைத் தவறாகவே நினைப்பதால் உனக்கு அப்படித் தோன்றுகிறது” என்று சொன்னாள். அவளுடன் எப்போதும் போட்டி போடும் விமலா, “நீ எப்போதும் ஜீன்ஸ், டி-ஷர்ட் மட்டுமே போட்டுவருவதால் நீ ‘சோஷியல்’ டைப் என்று அவர் நினைத்திருக்கலாம். நீயும் யாருக்கும் பயந்து நடுங்கும் பெண் இல்லையே? தைரியமாகப் பேசக்கூடிய, எல்லா மாணவர்களுடனும் இயல்பாகப் பழகக் கூடியவள்தானே?” என்று எதிர்வாதம் செய்தாள். கோமதிக்கு அதை இன்று நினைத்தாலும் கோபமும் ஆற்றாமையும்தான் ஏற்படும்.

பத்து ஆண்டுகள் கழித்து ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? பாலியல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகும் பெண்ணையே குற்றவாளியாக்கும் அல்லது அதை மன்னித்து மறக்கச் சொல்லும் வழக்கம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

எது பாலியல் வன்முறை?

கோமதி தினமும் தவறாமல் செய்தித்தாளைப் படிப்பாள். நிர்பயா வழக்கின் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டதைத் தெரிந்துகொண்டாள். நாடு முழுவதும் தேவைப்படும் சட்டத்திருத்தங்கள், பாலியல் வன்முறை, பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல் பற்றிய சட்டம், தண்டனை, சாட்சிய சட்டம் அதற்கான நடைமுறை ஆகிய அனைத்திலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அதற்கான விவாதங்கள் நடைபெற்றதையும் தொடர்ந்து வாசித்துவந்தாள்.

2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றவியல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்தும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354A என சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு கீழ்க்காணும் செயல்களைப் பாலியல் துன்புறுத்தல் (sexual harassment) என வரையறுத்துள்ளது.

1. உடல் நீதியான தொடுதல் அல்லது அதற்கான முயற்சிகள்.

2. பாலியல் ரீதியான செயல்பாடுகளுக்கான கட்டாயப்படுத்துதல் அல்லது கோரிக்கைகள்.

3. அநாகரிகமான படங்களைக் காட்டுவது. (போர்னோகிராபி போன்றவை)

4. பாலியல் ரீதியான குறிப்புகளோடு பேசுவது அல்லது பகடி செய்வது.

5. பாலியல் தன்மைகளுடன் கூடிய விரும்பத்தகாத வார்த்தைகள், சைகைகள், நடவடிக்கைகள்.

இந்தச் சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும். இது பிணையில் விட முடியாத குற்றம். பிற குற்றச் செயல்களைப் போல இந்தக் குற்றத்தின் பாதிப்புகளை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாதே என்றும் தன்னை யார் நம்புவார்கள் என்றும் பெண்கள் பலர் பயப்படுவது உண்டு. அது போன்ற எந்தப் பயமோ தயக்கமோ தேவையில்லை.

பாலியல் புகாருக்கு ஆதாரம் தேவையில்லை

முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு, நடந்த பாலியல் குற்றச் சம்பவமும், தெளிவான விவரங்களும், எழுத்துப் பூர்வமான புகாரும் போதுமானவை. தனக்கு நேர்ந்தது தண்டனை அளிக்கப்பட வேண்டிய, மன்னிக்க இயலாத குற்றம் என்ற புரிதல் பெண்களுக்கு வந்தால் போதுமானது. பெண்கள் இதுபோன்ற பாலியல் ரீதியான புகார்களைப் பொய்யாகத் தருவதில்லை. உண்மையில் சொல்லப்போனால் நூறு குற்றங்கள் நடந்தாலும் பத்துக்கும் குறைவான பெண்களே புகார் தர முன்வருகிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு சட்டம் இல்லை. இருந்திருந்தால் நிச்சயம் கோமதி தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஆசிரியர் மீதும் புகார் கொடுத்திருப்பாள். அந்தக் கேவலமான சீண்டல்களிலிருந்து அவள் விடுபட்டிருப்பாள். அது மட்டுமன்றி அந்த நபர் தன் வாழ்நாள் முழுவதும் வேறு எந்தப் பெண்ணிடமும் தவறாக நடக்க முயலாதவாறு ஒரு பாடமாகவும் இருந்திருக்கும் என்று கோமதி நினைத்தாள்.

எப்போதும் எதுவும் மாறாது என்றும் பெண்ணடிமைத்தனம் மாறவே மாறாது என்றும் எதிர்மறையாகப் பேசுபவர்கள் சமூகம் மட்டுமன்றி சட்டங்களும் மாற்றமடைகின்றன என்பதை உணர வேண்டும். அவற்றை அதிகமாகப் பயன்படுத்தும்போது மட்டுமே அதிலுள்ள போதாமைகள், குறைபாடுகள் உணரப்பட்டு மீண்டும் திருத்தங்களும் புதிய சட்டங்களும் கொண்டு வர வாய்ப்புகள் தோன்றும் என்பதை உணர வேண்டும்.

பெண்ணின் விருப்பம் முக்கியம்

இப்போது கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் கோமதி தன் கல்லூரியில் செயல்பட்டுவரும் பாலியல் வன்முறை குறித்த புகார் கமிட்டியில் இருக்கிறார். கல்லூரியில் விழிப்புணர்வுக்கான கூட்டங்கள் நடத்தும்போது, இந்த கிரிமினல் சட்டம் குறித்தும், அதைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் கோமதி பேசத் தவறுவதில்லை. மேலும் பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்முறை குறித்த குற்றத்தில் மிக முக்கியமானது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்று மட்டும்தான். உண்மையை உண்மை என்று அறைந்து சொல்லும் பெண்களே அவர்களின் அடிப்படை உரிமைகளைக் காத்துக்கொள்ள முடியும்.

“ஒரு பெண் விரும்பாதபட்சத்தில் ஒரு செயலோ நடவடிக்கையோ வார்த்தையோ பாலியல் தன்மை கொண்டதாக இருந்தால் அது பாலியல் துன்புறுத்தல்தான்” என்கிறது சட்டம். ஒரு பெண்ணிடம் ஆண் பாலியல் ரீதியான கோரிக்கையோ, செயலோ, வார்த்தைகளோ, வார்த்தைகளற்ற நடவடிக்கைகளிலோ ஈடுபடும்போது, அந்தப் பெண் அதை வரவேற்றால் அல்லது விரும்பினால் அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை அது பாலியல் வன்முறை அல்ல. அந்தச் செயலுக்கு எதிராகப் புகாரும் தரப்போவதில்லை. ஆனால், ஒரு பெண் தனக்கு விருப்பமில்லை என்று மறுக்கும் போதும், அதை அவர் வரவேற்காத நிலையிலும் அந்தச் செயலை ஓர் ஆண் தொடரும்போது அது பாலியல் குற்றமாகிறது.

ஒரு பெண்ணின் உணர்வு நிலையில் இருந்தும், உடல்-மன பாதிப்பின் அடிப்படையில் மட்டுமே அந்தச் செயல் பாலியல் குற்றம் எனக் கருதப்படும். பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறவருக்குக் குற்றம் செய்யும் நோக்கம் இருந்ததா இல்லையா என்பது பொருட்டல்ல என்பதே இதன் சிறப்பம்சம். மேலும் தொலைபேசி, ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் சீண்டினாலும் தொடர்ந்தாலும்கூட பாலியல் துன்புறுத்தல் சட்டப் பிரிவின் கீழ் புகார் தரலாம் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

வேண்டாம் என்று ஒரு பெண் மறுத்தால் அதற்கு ‘ஆமாம்’ என்று பொருள் என்ற பழங்கதையை ஆண்கள் இனியும் நம்பிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x