Published : 11 Jun 2017 01:53 PM
Last Updated : 11 Jun 2017 01:53 PM
பிரம்மாண்ட தொடர்கள்
சினிமாவுக்கு இணையாகத் தமிழ் சீரியல்களின் படப்பிடிப்பும் பிரம்மாண்ட அரங்கம், பொருட்செலவு என்று மாறி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘அபூர்வ ராகங்கள்’ தொடரின் நாயகி ஸ்ருதி.
“சினிமாவில் எப்படி சர்வதேச அளவிலான படங்களோடு ஒப்பிட்டுக் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்களோ, அதைப்போல இந்தி, ஆங்கில சீரியல்களுக்கு இணையாக நாமும் வேகமாகவே வளர்ந்துவருகிறோம். ஆனால், இந்த வேகம் ஏதாவது ஒரே திசையை நோக்கியே நகர்கிறது. உதாரணத்துக்கு ஒரு பிரம்மாண்ட திகில் தொடர் வரவேற்பைப் பெற்றால் உடனே எல்லோரும் அதே பாணியைப் பின்பற்றுகிறார்கள். காதல், காமெடி, குடும்பம் என்று வெவ்வேறு களத்திலும் பிரம்மாண்டத்தைத் தொட வேண்டும். ‘தென்றல்’, ‘ஆபீஸ்’, ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’, ‘அபூர்வ ராகங்கள்’ என்று சமீபத்திய தொடர்கள் எல்லாமே எனக்குத் தனி அடையாளத்தை கொடுத்திருக்கின்றன. இதே மாதிரி அடுத்த புதிய தொடரும் இருக்கும், விரைவில் அறிவிப்பேன்!’’ என்கிறார் ஸ்ருதி.
பறந்து செல்ல வா!
சின்னத்திரை தொகுப்பாளினி சான்டனா, சேனல் நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல் ஃபேஷன் ஷோ, விளம்பரப் படங்கள், மாடலிங் என்று பரபரப்பாக சுற்றிவருகிறார்.
“ஒரே மாதிரி வேலை செய்வது எனக்குப் பிடிக்காது. என்னோட பொழுதுபோக்கு பயணம்தான். அதனால்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளினியா வலம் வந்தாலும் மாடலிங், ஃபேஷன் ஷோ என்று வெவ்வேறு சூழலிலும் தனித்து தெரியணும்னு ஓடிக்கிட்டு இருக்கேன். என்னோட இந்த மனநிலைக்குப் பக்க பலமா விரைவில் தொடங்கவிருக்கும் காவேரி நியூஸ் சேனலில் ‘பறந்து செல்ல வா’ என்ற புதிய நிகழ்ச்சி கிடைத்திருக்கிறது. பாண்டிச்சேரி, மூணாறு, ஏலகிரி என்று முக்கியமான இடங்களுக்குச் சென்று அங்கே உள்ள பண்பாடு பற்றிச் சொல்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதோடு ‘கலக்கல் கேட்ஜெட்’ என்ற வணிகம் சார்ந்த நிகழ்ச்சியையும் கையில் எடுத்திருக்கிறேன். ஜூலை மாதத்தில் சேனல் தொடங்கவிருக்கிறது. புதுமையான நிகழ்ச்சிகளுக்குக் காத்திருங்கள்!’’ என்கிறார், சான்டனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT