Published : 05 Jun 2016 03:19 PM
Last Updated : 05 Jun 2016 03:19 PM
திருமண உறவுக்குள் நிகழும் வல்லுறவு குறித்து, மே 29-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். ‘திருமண உறவில் எல்லாமே புனிதம்தானா?’ என்ற கேள்விக்கு வெட்டியும் ஒட்டியும் எழுதிக் குவித்துவிட்டனர் வாசகர்கள். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு…
பெண்ணின் விருப்பத்தை உணர்ந்து அதன்படி நடக்கும் ஆண் மகன் கம்பீரமானவன். அதை விட்டுவிட்டு பெண்களை போகப் பொருளாக நினைத்து நினைத்த நேரத்தில் மனைவியை ஆள நினைப்பதும், அவருடைய விருப்பத்துக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொள்வதும் கண்டிக்கத்தக்கது.
- தாரா ரமேஷ், புதுச்சேரி.
திருமண உறவில் எல்லாமே புனிதம்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கணவன் தன் காமத்தைத் தீர்க்கக் கூடிய ஜடப் பொருளாக மனைவியைப் பார்க்காமல் மனைவிக்கும் உணர்வுண்டு என்பதை உணர்ந்தால்தான் திருமண நோக்கை நிறைவேற்றியதாக அர்த்தம். ஆணாதிக்க வேகத்தில் பெண்மையைச் சீரழிப்பது நல்லதல்ல.
- வே. ஈஸ்வரன், ராஜபாளையம்.
பேசி சரிசெய்ய முடியாத விஷயமே இல்லை. கணவன் நெருங்கும்போது, தனக்கு விருப்பம் இல்லையென்றால் மனைவி அதைத் தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும். கணவரின் மனது காயப்படும் என்று தயங்கக் கூடாது. ஆனால் எப்போதும் ஒரே காரணத்தைச் சொல்லித் தட்டிக்கழிக்க முடியாது. தங்கள் தவறுகளுக்கு எப்போதும் அடுத்தவரையே குற்றம் சாட்டுவதில் ஆண்கள் சமர்த்தர்கள்.
- எஸ். மங்கையர்கரசி, நெய்வேலி.
முறையான பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்த்துகிறது பாலியல் சமத்துவமின்மை. வக்கிரமான பாலுறவுக் காட்சிகளைத் திரைப்படங்கள் மற்றும் இதர ஊடகங்களின் மூலமாகக் காணும் மனித மனம், இயல்பான உறவுக்கு மாறாக நடந்துகொள்ள எத்தனிக்கும்போது பாதிப்படைவது பெண்களே. பெண்கள் பாலுறவு சார்ந்த தங்கள் விருப்பத்தையும், குறிப்பாகப் பாலுறவுப் போதாமையையும் தோழிகளிம்கூட பகிர்ந்துகொள்ள முடியாத சூழல்தான் இன்றும் நிலவுகிறது. ஆணின் விருப்பங்களே அரங்கேறுகின்றன. தாம்பத்யம் என்பது இரு கை ஓசை என்பதை இருபாலரும் உணர வேண்டும். விருப்பம், விருப்பமின்மையை இருவருமே மென்மையான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.
- கு. ரவிச்சந்திரன், ஈரோடு.
திருமண உறவின் மீது புனிதம் என்ற போர்வை போர்த்தப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. திருமணத்துக்கு முன் ஆண், பெண் இருவருக்குமே உரிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் மனதளவில் நெருங்குகிறபோதுதான் தாம்பத்யம் சீராக இருக்கும். உலகின் உயிர்ச் சங்கிலி அறுபடாமல் இருக்க உதவுகிற தாம்பத்தியத்தைச் சரியானபடி புரிந்து நடக்க வேண்டும்.
- ஆர். பீர்முஹம்மது, தலைஞாயிறு.
பால்ய விவாகம் நடைபெற்ற காலத்திலும் அதற்குப் பிறகான காலகட்டத்திலும் பெண் என்பவள் படுக்கையறையில் பொம்மை, பிரசவ அறையில் பிள்ளை பெற்றெடுக்கும் இயந்திரம். ஆனால் இன்று கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்களைச் சுய சிந்தனையுடன் வைத்திருக்கிறது. திருமண உறவிலும் அது ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கால காலமாக ஏற்றப்பட்ட விஷம் ஒரே நாளில் இறங்கிவிடாது. திருமண உறவு குறித்துப் பேசுவதே பெருங்குற்றம் என்ற நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை.
ஒரு மனைவி, தன் அந்தரங்கக் காதல் உணர்வைக் கணவனிடம்தானே வெளிப்படுத்த முடியும்? அதில் என்ன தவறு இருக்கிறது? ‘என்னிடம் இவ்வளவு காதல் வைத்திருக்கிறாளே’ என்று கணவன் சந்தோஷப்பட வேண்டுமே தவிர, ‘அலைகிறாள்’ என்ற வக்கிர வார்த்தை எதற்கு? தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியால் இன்று பாலுறவுக் காட்சிகளை எளிதில் பார்க்க முடிகிறது. அதன் விளைவாக மாறுபாடான நெருக்கத்தை ஆண்கள் விரும்பினால், துன்புறுவது பெண்களே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இருவரும் ஒரே பார்வையில் காதலை அணுகினால் என் விருப்பம் முதன்மை, உனக்கு எதுவும் தேவையில்லை என்ற எண்ணத்துக்கே இடமில்லை.
- வே. தேவஜோதி, மதுரை
தாம்பத்யம் என்பது கணவன், மனைவி இருவருக்குமே மகிழ்ச்சியளிக்கும் விஷயம். ஆனால் அதைப் பெண்கள் ஏதோ ஆண்களுக்குத் தானமாகத் தருவதுபோல எழுதியிருக்கிறீர்கள். பெண்களை ஆண்கள் திருமண வல்லுறவு செய்கிறார்கள் என்பது பாட்டி காலத்து கதை. இப்போது அப்படிச் செய்யும் துணிச்சல் எந்த ஆணுக்கும் கிடையாது. அம்மா வீட்டுக்கு அனுப்பவில்லை, நகை வாங்கித் தரவில்லை போன்ற சில்லறை காரணங்களுக்கெல்லாம் ‘வேண்டாம்’ என்று சொல்லும் பெண்களே அதிகம். ஆணின் காதலைப் புரிந்துகொள்ளாமல், ‘அத்துமீறல்’ என எங்கள் காதலைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
- எஸ். ஜமால்பாஷா, சேலம்.
தனக்குத் தேவை ஏற்படும்போதெல்லாம் தனக்கு இன்பம் தரும் மனநிலைக்கு மனைவி மாற வேண்டும் என ஓர் ஆண் நினைப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம். நிர்பந்திக்கப்படுகிற அந்த உறவில் அவள் அனுபவிக்கிற வலியை அவள் மட்டுமே அறிவாள். நான்கு சுவற்றுக்குள் நடக்கிற விஷயத்தை எந்த நிலையிலும் வெளியே சொல்லாத பெண்கள், சட்டம் அனுமதித்தாலும் தங்களது அந்தரங்க உறவைப் பற்றி புகார் செய்வார்களா? அப்படியே கூச்சத்தை விட்டு சொன்னாலும் அதற்குப் பிறகு அவளது வாழ்க்கை, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவை குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது. பெண்ணை மதித்து, அவளது உணர்வுகளுக்கு உரிமையளிப்பது ஒவ்வொரு ஆணின் கடமை.
- லலிதா சண்முகம், திருச்சி.
திருமண உறவில் எல்லாமே புனிதம்தானா என்ற சந்தேகம் ஒரு பெண்ணுக்கே வருவது வேதனைக்குரியது. புரிந்துகொள்வதும் விட்டுக்கொடுப்பதும்தான் திருமண உறவின் புனிதத்தை வளர்க்கும் என்று பெரும்பாலான பெண்கள் புரிந்துவைத்திருப்பதால்தான், ‘கணவன் தன்னுடன் வல்லுறவு கொண்டான்’ என்று எந்தப் பெண்ணும் வழக்கு தொடர்வதில்லை. கணவனின் கொடுமை தாங்காமல் விவாகரத்து கோரியவர்கள்கூட வல்லுறவைப் பிரதான அம்சமாக எடுத்துக்கொண்டதில்லை. மனைவியின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்காமல் கணவன் நடந்துகொள்கிறபோது புனித எண்ணம் இல்லாமல் போய்விடுகிறது.
- கே. ஜனார்தனன், மோகனூர்.
மனைவியை பாலியல் வல்லுறவு மூலம் கொடுமைப்படுத்தும் கணவனை சைக்கோ வகையில்தான் சேர்க்க வேண்டும். இந்தவகை ஆண்கள் பொது இடங்களில் ரொம்ப ‘யோக்கிய சிகாமணி’ போலவும் மனைவியை மதிப்பதாகவும் காட்டிக்கொள்வதிலேயே அது போலித்தனம் என்பதும் நடிப்பு என்பதும் தெரிந்துவிடும். பெண்ணைக் கொடுமைப்படுத்தும் இதுபோன்ற கொடூரர்களைப் பற்றித் துணிந்து வெளியே சொல்ல வேண்டும். ஆலோசனையும் அறிவுரையும் அவர்களை மாற்றவில்லை என்றால் நிச்சயம் சட்டத்தின் துணையை நாட வேண்டும்.
- பா. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.
திருமண வல்லுறவும் கிரிமினல் குற்றமே. இதை வெளியே சொன்னால் அவமானம் என்று நினைக்காமல் நெருங்கிய உறவுகளிடம் இதைச் சொல்லி, கணவன் மன நல ஆலோசனை பெற வழிவகை செய்யலாம். கணவன் என்ற போர்வையில் வக்கிரங்களை அரங்கேற்றுகிறவர்களை எக்காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ளக் கூடாது. கொடுமை கண்டும் அமைதி காப்பது பெண்களின் சகிப்புத்தன்மையல்ல, கோழைத்தனம். அச்சத்தைப் புறந்தள்ள வேண்டும். வறுமைக்கும் குடும்பச் சூழலுக்கும் பயந்து நித்தமும் செத்துப் பிழைப்பதைவிட கொடூர புத்திகொண்டவரை முற்றிலும் ஒதுக்கிவிட்டு வாழலாம்.
- பொன். கருணாநிதி, கோட்டூர்.
நம் சமூகம் பெண்ணுக்குப் பாலுணர்வு உண்டு என்பதையும் அவளுக்கும் அது சார்ந்த தேவையுண்டு என்பதையும் மறுக்கிறது. பண்புள்ள பெண்கள் பாலுறவு நாட்டமற்றவர்கள் என்பது பரவலான நம்பிக்கை. எனவே பெண்கள் தங்கள் பாலுணர்வுத் தேவையைக் கணவனிடம் முன்வைக்க முடியாது. பெரும்பாலான வீடுகளில் தனியறையோ தனிமையோ இல்லாத சூழலில், தன் தேவையை முன்வைப்பதோ, பேசுவதோகூட இயலாத காரியமாகிவிடுகிறது பெண்ணுக்கு.
பிடிக்காத ஒன்றை மறுக்கலாம் என்றால் நம் குடும்ப அமைப்பில் அதற்கும் வழியில்லை. “என்னை வேண்டாம்னு எவன்கிட்டே போற?” என்ற கேள்வி வரும். அல்லது “நீ இல்லைன்னா என்ன? வேற ஆளே இல்லையா?” என்று கிளம்பிப்போய்விடுவானோ என்ற பயம் பெண்ணுக்கு வரத்தான் செய்யும். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கொட்டிக் கிடக்கும் பாலுணர்வைத் தூண்டும் படங்கள், அவற்றைப் பார்க்கிற ஆண்களுக்கு பாலியல் கல்வியைக் கற்றுத் தருவதற்குப் பதிலாக வக்கிரத்தையே விதைக்கின்றன.
பெண்கள் தங்கள் வலிகளை, சிரமங்களை வாய் திறந்து பேச வேண்டும். தேவைப்பட்டால் கணவன் – மனைவி இருவரும் துறை சார்ந்த நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம்.
- தனசீலி திவ்யநாதன், திருச்சி.
திருமணத்துக்குள் அனைத்தும் புனிதம் என்ற கண்ணோட்டம் மாற வேண்டும். ஒருவனின் நடத்தையில் வாழ்க்கைச் சூழலும், கல்வியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அவளும் தன் சகஜீவிதான் என்பதை ஓர் ஆண் உணர்வது அவன் சூழலாலும் கல்வியாலும்தான். அதை உணரவைக்கும் வகையில் கல்வி அமைய வேண்டும்.
ஒருவனைப் பண்பாளனாக மாற்றும் பொறுப்பு குடும்பத்தின் மேல் விழுகிறது. இந்த நிதர்சனத்தைக் குடும்பம் உணர வேண்டும். பெண் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் அதை தெளிவுற அறியப்படுத்த வேண்டும்.
- ம.ஹரிதா, அரியலூர்.
காமம் என்பது இருபாலருக்கும் பொது என்றாலும் இயற்கையிலேயே ஆணுக்கு கூடுதல். ஆண்களைப்போல் அவ்வளவு எளிதில் காம இச்சைக்குப் பெண் ஆட்படுவதில்லை. மனைவியாக இருந்தாலும் அவளுடைய சம்மதம் இல்லாமல் கணவன் தொடுவதை அவள் விரும்புவதில்லை. நிர்பந்தத்தின் பேரில் அதை அனுமதிக்கும் பெண்களே அதிகம். ஆண் சற்று கூடுதல் பொறுப்புடனும், பொறுமையுடனும் நடந்துகொள்வது உத்தமம்.
- கேசவ் பல்ராம், திருவள்ளூர்.
நமது இந்தியக் குடும்பங்களில் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ ஒரு பெண் துன்பப்படும்போது கணவன் பெரும்பாலும் அவளுக்கு ஆறுதலாக இருப்பதில்லை. மாறாக அவளது உணர்வைக்கூடப் பொருட்படுத்தாது அவளை வல்லுறவுக்கு வற்புறுத்தும் அவலச் சூழலே இங்கு நிலவுகிறது. அதற்கு இணங்க மறுத்தால் அவளைக் கேவலப்படுத்தக்கூட அவன் தயங்குவதில்லை. மேலும் வெளியே முறைகேடான உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்கிறான்.
அதைத் தட்டிக் கேட்டால் அவள் இணங்க மறுத்தது அங்கு குற்றமாக்கப்படுகிறது. உடல்ரீதியான தனது விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்தும் பெண் ‘ஒரு மாதிரி'யாகவே பார்க்கப்படுகிறாள். திருமணம் என்ற உறவின் மூலம் அவள் பெரும்பாலும் பலியிடப்படுகிறாள்.
திருமண வல்லுறவு என்பதே பலருக்குக் கேலியான சொற்றொடராக இருக்கும். ஆனால் அது தரும் மனவேதனை அனுபவித்தவர்களுக்கே தெரியும். திருமண வல்லுறவுக்குக் காதல் என்று பெயர் சூட்டுவது மிகத் தவறு. பெண்கள் தங்களது எதிர்ப்பை நிச்சயம் வெளிப்படுத்த வேண்டும். இது போன்ற உணர்வு ரீதியான கொடுமைகளைத் தவிர்ப்பதும், தடுப்பதும் பெண்களின் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தங்களது ஆண் குழந்தைகளை வளர்க்கும்போது பெண்களை மதிக்கக் கற்றுத்தர வேண்டும். அவர்களது உரிமைகளைத் தட்டிப் பறிக்காமல் தோழமை உணர்வுடன் பழகச் சொல்லித்தர வேண்டும். இத்தகைய மாற்றங்கள் திடீரென ஒரே நாளில் நடந்துவிடாது. காலப்போக்கில்தான் நடக்கும். ஆனால் அதற்கான முயற்சிகளைப் பெண்கள் ஒருபோதும் கைவிடக் கூடாது.
- தேஜஸ், காளப்பட்டி.
தன் தாயை மதிக்கும் எந்த ஆண் மகனும் மனைவியிடம் கீழ்த்தரமாக நடந்துகொள்ள மாட்டான். வீட்டில் நல்ல சூழ்நிலையில் வளரும் ஒருவன் திருமண உறவின் புனிதத்தைப் புரிந்துகொள்வானே தவிர, மனைவியைக் கட்டாயப்படுத்தவே மாட்டான்.
- உஷாமுத்துராமன், திருநகர்.
திருமண வல்லுறவுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அப்படி இயற்றும் போதும் உளவியலாளர், சட்ட நிபுணர் போன்றோரின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும். மேலும் அந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அதைவிட முக்கியம். இந்த இரண்டையும்விட முக்கியமானது கணவன், மனைவிக்கிடையேயான புரிந்துகொள்ளுதல். பாலியல் உறவு என்பது ஆண்களுக்கு உடலின் தேவை சார்ந்ததாகவும், பெண்களுக்கு மனம் சார்ந்ததாகவும் இருப்பது இயற்கையின் படைப்பு. மனைவியை உண்மையாக நேசித்தால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை வெளியே தேடும் அவசியம் இருக்காது.
- மாதேஷ்
நம் குடும்பத்தில் பெண்ணுக்குச் சம உரிமையைக் கொடுக்க முன்வருவோம். பிறகு அடுத்தவர் குடும்பத்தைப் பற்றிப் பேசுவோம். நான் அப்படி இருக்க என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன். முறையான பெண் சுதந்திரம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
- இமானுவேல்.
பெண் பிள்ளை ஆணுக்கு எந்த வகையிலும் குறைந்தவள் இல்லை என்பதைச் சொல்லித் தந்து வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கண்டுகொள்ளாமல் இருக்கும் பெற்றோர், பெண்ணுக்கு அதே சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. திருமணத்தில் இருவருக்கும் சம பொறுப்பு உண்டு என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். பாலுறவு எப்போதும் யாரிடமும் வற்புறுத்தி நடக்கக் கூடாது. பிறகு மனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வேறுபாடு?
- சிவா
ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவர் இடத்தில் வைத்துப் பார்த்தாலே இந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். பெண்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் தொடுவதே தவறு. புரிதல்தான் புனிதம்.
- அருண் ராஜேந்திரன்
இந்தப் பிரச்சினையை எழுத்தில் வடிப்பது, தீர்வை முன்வைப்பது மிக மிகக் கடினம். ஆண்கள் மீது மட்டும் குற்றம் சுமத்தித் தப்பிவிட முடியாது. ஆண்கள், பெண்களின் தனித்துவ உணர்வுகளை மதிக்கும் அதே நேரத்தில் பெண்களும் ஆண்களின் தனித்துவ உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும். பெண்ணின் உணர்வுகளை மதிக்காமல், கட்டாயப்படுத்துவது தவறு.
- பாலா
ஆண், பெண் சமத்துவம், பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டம் எப்படியிருக்க வேண்டும் என்பதெல்லாம் பாடங்களாகப் பள்ளியிலேயே வர வேண்டும். யதார்த்தம், புனிதமாகச் சித்தரிக்கப்படும் முட்டாள்தனம் ஒழிய வேண்டும்.
- மோனிஷா
விழிப்புணர்வை யார், எங்கிருந்து தொடங்குவது? தனி மனிதனுக்குள் இருந்து மாற்றம் தொடங்க வேண்டும். எங்கு சித்தனை உதிக்கிறதோ, அங்குதான் விழிப்புணர்வு ஆரம்பமாகும். சிந்தனை, செயலாக, புலன்கள் வாயிலாக வெளிவந்த பிறகு விழிப்புணர்வு வந்து பயனில்லை.
- பாலன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT