Published : 12 Feb 2017 12:12 PM
Last Updated : 12 Feb 2017 12:12 PM
பெண்களுக்கு வாசிப்பு மிகவும் அவசியம். அதிலும் தரமானவற்றையும் முக்கியமானவற்றையும் தேர்ந்தெடுத்துப் படிப்பது பெண்களின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிடும். அந்த வகையில் பெண்களின் முன்னேற்றத்தில் தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழான ‘பெண் இன்று’வுக்கு முக்கிய இடம் உள்ளது எனத் தன் உரையை உத்வேகமாகத் தொடங்கினார் சக்தி மசாலா நிர்வாக இயக்குநரும் சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலருமான சாந்தி துரைசாமி.
“குடும்பத்தைத் தாண்டி வெளி உலகம் உள்ளது. அங்கு சாதிக்கும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. குடும்பம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான்; அதுவே வாழ்க்கை அல்ல என்பதை நம்பினால் பெண்கள் அனைவரும் சாதிக்கலாம்” என்றார்.
“தி இந்து நாளிதழில் விவாதிக்கப்படாத விஷயங்களே கிடையாது. அதிலும் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக இணைப்பிதழைத் தொடங்கியதே ஆண்களுக்கு நிகராக வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார் வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர்.
அவரைத் தொடர்ந்து பேசிய வேளாளர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கமலவேணி, “ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்று சொல்வார்கள். ஆனால் ஞாயிறும் நமதே ஞாலமும் நமதே என்று நிரூபிக்க வருகிறது ஞாயிறுதோறும் பெண் இன்று. அதை வருடத் தொகுப்பாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள்விடுகிறேன்” என்றார்.
பூரணம் என்பதே மாயை
செய்ய நினைப்பதற்கும் நடைமுறைக்குமான இடைவெளிதான் மன அழுத்தத்துக்குக் காரணம். அந்த மன அழுத்தத்தைச் சமாளிக்க மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அத்தியாவசியம். அதற்கான வழிகாட்டலை இயல்பான கலந்துரையாடல் மூலமாகத் தந்தார் மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. மனச்சோர்வு, பதற்றம் வருவது ஏன் என்கிற சந்தேகத்தை வாசகிகள் எழுப்பியபோது, “சில வருடங்களுக்கு முன்பு ஒரு சோதனை ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு குழுவினரிடம் ‘நீங்கள் வசிக்கும் பகுதிக்கு சுனாமி வரப்போகிறது’ என்கிற எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டது.
அந்தச் செய்தியைக் கேட்டு அவர்கள் அடைந்த பீதியும் பயமும் அளவிடப்பட்டன. இந்த ஆய்வின் முடிவு, எதிர்பாராத நேரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையோடு ஒப்பிடப்பட்டது. சுனாமி தாக்கிவிடுமோ என நினைத்து அஞ்சியவர்களின் சிக்கல்தான் பெரிதாக இருப்பதாக அந்த ஒப்பீட்டில் தெரியவந்தது. ஆக, நிஜத்தைக் காட்டிலும் கற்பனைதான் அபாயகரமானது. நாளை நடக்கப்போவதை நாளை பார்த்துக்கொள்ளலாம். இன்று நம்முடையது என எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்” என்று விளக்கம் அளித்தார்.
“எனக்கு எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கணும். அப்படி இல்லை என்றால் அதிக கோபம் வருகிறது. அதைக் கட்டுப்படுத்த வழி உண்டா?” எனக் கேட்ட கல்லூரி மாணவியிடம், “முதலில் பூரணத்துவம் என்பதே மாயை. நிறைவேறாத ஆசைகள், பிடிக்காத சூழலினால்தான் கோபம் உண்டாகிறது. அப்படி அதிகப்படியாக கோபப்படும்போது கண்ணை மூடி பத்துவரை எண்ணுங்கள் என்பார்கள். ஆனால் வெறுமனே எண்களை எண்ணுவதைவிட உங்களுக்குப் பிடித்தமான அல்லது முற்றிலும் புதிதான வேறொரு விஷயத்தை அந்த நேரத்தில் நினைத்துப்பாருங்கள், கோபம் விலகும்” என்று ஆலோசனை வழங்கினார்.
தொட்டிச் செடிக்கு சிறகு
‘இன்றைய கல்வி பெண்கள் சுயசார்புடன் இருப்பதற்குக் கைகொடுக்கிறதா, இல்லையா?’ என்ற தலைப்பில் கலகலப்பூட்டும் பேச்சரங்கம் நடந்தது. அதில் பேசிய ஷண்முகப் பிரியா, “பெண்கள் சுயமாகச் சம்பாதிக்கவும், உழைத்துப் பெற்ற பணத்தை வைத்து வீட்டு பட்ஜெட் முதல் அத்தனையும் தீர்மானிக்கவும் கல்வி மட்டுமே சொல்லித் தந்திருக்கிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுயமாக முடிவெடுக்கும் துணிச்சலைப் பெண்ணுக்கு அளிப்பது கல்வி மட்டுமே” என்று வலுவாக வாதிட்டார்.
“வரதட்சிணைக் கொடுமையை அனுபவிக்கும் படித்த பெண்களை இன்றும் பார்க்கிறோம். பள்ளி, கல்லூரியில் உடன் படித்த தோழிகளுடன் பிற்காலத்தில் நட்பைக்கூடத் தொடர முடியாத நிலைதான் இன்றும் நீடிக்கிறது. அப்படியிருக்கக் கல்வி எந்தவிதமான சுயசார்பையும் தந்துவிடவில்லை. தொட்டிச் செடியைப் போலத்தான் ஒரு அளவுக்கு மேல வளர முடியாதபடி பெண்களை வைத்திருக்கிறது இன்றைய கல்வி” என்று எதிர்வாதத்தை முன்வைத்தார் நந்தினி.
“வீட்டுப் படி தாண்டவே அனுமதி மறுக்கப்பட்ட பெண்களுக்குச் சிறகுகள் சூட்டியது கல்வி மட்டுமே. இப்போதுதான் அவர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் உடனடியாக அவர்களுக்கு முழுவதுமாக சுயசார்பு இல்லாமல் போகலாம். ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக அது சாத்தியமாகும்” என்று பேச்சாளர்களின் வாதத்தை அலசி நடுநிலையான தீர்ப்பை வழங்கினார் விரிவுரையாளர் தனலட்சுமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT