Published : 28 May 2017 12:29 PM
Last Updated : 28 May 2017 12:29 PM
திரைத்துறையில் பெண் கலைஞர்கள் சந்திக்கும் பாகுபாடுகள் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்குத் தீர்வுகாண ‘உமன் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற முன்னோடி அமைப்பை மலையாள முன்னணி நடிகைகள் உள்ளிட்ட கலைஞர்கள் சமீபத்தில் தொடங்கியுள்ளனர். முன்னணி நடிகைகள், இயக்குநர்கள், படத் தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் இந்த அமைப்பில் இருக்கிறார்கள்.
இவர்கள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சென்ற மே மாதம் 18-ம் தேதி சந்தித்தனர். அப்போது, வேலையிடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதைத் தடுப்பதற்கான சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பு யூனிட்டிலும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அத்துடன் சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்குப், பேறு கால விடுப்பு, படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகளை ஒழுங்குபடுத்துதல் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.
பெண் திரைப்பட இயக்குநர்கள் விது வின்சென்ட், அஞ்சலி மேனன், எழுத்தாளர்கள் தீதி தாமோதரன், நடிகைகள் மஞ்சு வாரியார், ரீமா கலிங்கல், பார்வதி ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர். மலையாளத் திரைத் துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மனுல்ஜா வாடியாவின் பெண்கள்
இந்திய நாட்டார் ஓவியங்களால் தாக்கம் பெற்ற கிராஃபிக் ஓவியர் மனுல்ஜா வாடியா. இவர் ‘மேட்ரியாக்கியல் மெமரிஸ்’ என்ற தொடர் வரிசை ஓவியங்களை வரைந்துவருகிறார். பெண்கள் சேர்ந்து கழிக்கும் தனிப்பட்ட பொழுதுகள் இந்த வரிசையில் அழகிய ஓவியங்களாகின்றன. அழகு நிலையத்தின் வாயிலில் காத்திருக்கும் பெண்கள், இமைகளைத் திருத்திக்கொள்ளும் பெண்கள், வாஷிங்மெஷின் அருகே இருக்கும் பெண்கள், பீட்சா சாப்பிடும் பெண்கள் என இந்தியப் பழுப்பு நிறப் பெண்களை அடர் வண்ணங்களில் நாயகிகளாக்கியிருக்கிறார். இந்தியப் புராணங்கள், பாலிவுட் சினிமா மற்றும் ஓவிய பாணிகளின் தாக்கம் பெற்ற இவர் இந்த ஓவியத் தொடருக்காக அனுவல் சொசைட்டி ஆஃப் இல்லஸ்ட்ரேட்டர்ஸ் விருதையும் பெற்றுள்ளார்.
புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் உள்ளாடை
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஜூலியன் ரியாஸ் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு பிராவை வடிவமைத்துள்ளார். மார்பகப் புற்றுநோயால் தன் அம்மா பாதிக்கப்பட்டதைப் பார்த்த ஜுலியன் ரியாஸ் தனது 13 வயதிலிருந்து இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான உபகரணம் குறித்து ஆராய்ந்துவந்தார். இந்த உள்ளாடையை EVA என்று குறிப்பிடுகிறார் ஜூலியன். ஒரு வாரத்தில் ஒரு மணி நேரம் இந்த உள்ளாடையை அணிந்தால் போதும்.
மார்பின் வடிவம், நிறம், வெப்பநிலை ஆகியவற்றைக் கண்காணித்து மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகளைச் சொல்லிவிடும். அந்தத் தகவல்களை நாம் பயன்படுத்தும் லேப்டாப், மொபைல் போனில் உள்ள பிரத்யேக செயலிக்கு ப்ளூ டூத் வழியாக அனுப்பிவிடும். இந்தப் புதிய கண்டுபிடிப்புக்காக ஜூலியனும் அவரது நண்பர்களும் சேர்ந்து நடத்தும் ஹிகியா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு 20 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களை மார்பகப் புற்றுநோய் அதிகமாகப் பாதிக்கும் நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு அவர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கலாம்.
சானிட்டரி நாப்கினுக்கு வரி
நாடெங்கும் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வருகிறது. அதில் பொட்டு, குங்குமத்துக்கு வரி விலக்கு அளித்துள்ள மத்திய அரசு சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீதம் வரி விதித்துள்ளது. சானிட்டரி நாப்கின்களுக்கு முன்பு 14.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது. இப்போதைய நிலையில் 2.5 சதவீதம் வரி குறைக்கப்பட்டிருந்தாலும் பெண்களின் மாதவிடாய் சுகாதார நலன் சார்ந்த பொருட்களுக்கு வரி விதிப்பதைத் தவிர்க்க வேண்டுமென்று அசாமைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பெண்களில் 12 சதவீதம் பேரே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் சுகாதாரமற்ற நிலையில் பழைய துணிகள், சாம்பல் போன்ற ஆரோக்கியக் குறைவான பொருட்களைப் பயன்படுத்தும் நிலையில் சானிட்டரி நாப்கின்களுக்கு வரிவிதிப்பது அவர்களுக்கு ஆரோக்கியக் குறைவையே உருவாக்கும் என்றும் தனது மனுவில் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT