Last Updated : 18 Jun, 2017 11:36 AM

 

Published : 18 Jun 2017 11:36 AM
Last Updated : 18 Jun 2017 11:36 AM

ஒரு பிரபலம் ஒரு பார்வை - பிறப்பா, வளர்ப்பா?

பெண்கள் அடிப்படைக் கல்வி கற்கவும், வெளியில் சென்று வேலை பார்க்கவும் முன்பைவிட வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால், இது பெண்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிட்டதாக நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் உள்ள இடைவெளியும் கல்வி , வேலைவாய்ப்புகளில் இன்னமும் நிலவிவரும் வேறுபாடுகளும் திரும்பத் தலைதூக்கும் பெண் கருக்கொலை, வரதட்சிணை மரணங்கள், பாலியல் பலாத்காரம் போன்றவையும் பெண்களின் நிலையில் இன்னமும் நிறைய மாற்றங்கள் தேவை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

பெண்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் இரண்டாம் தர நிலை பற்றி, அவர்களுக்கு நேரக்கூடிய கொடுமைகள் பற்றிப் பேசுவதைத் தாண்டி சில அடிப்படை விஷயங்களைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

எங்கு தொடங்குகிறது?

சமீபத்தில் எனக்குத் தெரிந்தவர் ஒருவருடைய 5 வயது மகன், கடையில் சாக்லெட் வாங்கச் சென்றான். கடைக்காரர் பிங்க் கலர் பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டை எடுத்து நீட்டினார். உடனே அந்தப் பையன் கேட்டான், ‘கடைக்காரரே என்னைப் பாருங்க, நான் என்ன கேர்ளா…’

அந்த சாக்லெட்டை பிங்க் கலர் பொம்மையில் அடைத்துவைத்துப் பெண் குழந்தைகளுக்கும், நீல கலர் பொம்மையில் அடைத்துவைத்து ஆண் பையன்களுக்கும் தருவதை ஊக்குவிக்கும் நிறுவனம் என்ன மனநிலையுடன் செயல்படுகிறது?

அதேபோல, ஒரு வீட்டில் அப்பா, அம்மா, 6 வயதுப் பையன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பா செல்லமாக மகனைப் பார்த்து ‘ஐ லவ் யூ செல்லம்’ என்றிருக்கிறார். உடனே பையன் சொன்னான், ‘அப்பா நான் பையன். என்னிடம் நீ ஐ லவ் யூ சொல்லக் கூடாது’ என்று.

உடனே அப்பா சூழலை இயல்பாக்க, தன் மனைவியைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ என்றிருக்கிறார். உடனே பையன், ‘அப்பா கேர்ள்ஸ்தான் பாய்ஸ் கிட்ட ஐ லவ் யூ சொல்லணும். கேர்ள்ஸ் கிட்ட பாய்ஸ் ஐ லவ் யூ சொல்லக் கூடாது’ என்று கூறியிருக்கிறான்.

இந்த மாதிரியான மதிப்பீடுகள் எப்படி உருவாகின்றன? சமூகம் ஆணையும் பெண்ணையும் எப்படி இருவேறு பண்புகள் நிறைந்தவர்களாக உருவாக்குகிறது?

சுமத்தப்படும் அடையாளம்

1970-களில் ஆன் ஒக்லி என்ற பெண்ணியவாதி ஆண், பெண் பாலுறுப்புகளின் அடிப்படையில் அமைவது உடற்கூறு பாலினம் (sex) என்றும், சமூகக் கலாச்சார வரையறைகளின்படி ஆண், பெண்ணின் குணங்கள் வரையறுக்கப்படுவதைச் சமூகப் பாலினம் (Gender) என்றும் குறிப்பிட வேண்டுமென்றார்.

இந்தச் சமூக அடையாளத்தைக் குடும்பம், பாடப்புத்தகங்கள், ஊடகங்கள் என அனைத்தும் ஆண் ,பெண் மேல் வலிந்து சுமத்துகின்றன.

சமூகப் பாலினமாக்கப்படுத்தல் என்பது தொடர்ந்து நிகழும் ஒன்று. குழந்தை பிறந்தவுடன், ஆண், பெண் என்று உறுப்புகள் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறது சமூகம். கூடவே, அவர்கள் கைக்கொள்ள வேண்டிய பண்புகளையும் சத்தமில்லாமல் அவர்கள் மேல் சுமத்திவிடுகிறது.

இளம் குழந்தைக்குப் பொம்மை வாங்கும்போது, ஆண் குழந்தை என்றால் துப்பாக்கி, கார்,மோட்டார் எனவும், பெண் குழந்தை என்றால் சொப்பு சாமான், மென் பொம்மைகள் எனவும் வாங்கும் மனநிலை எங்கேயிருந்து வருகிறது? ஏதுமறியாத அந்தக் குழந்தைகளுக்கு ஆண், பெண் என்ற அடையாளத்தை வலிந்து சுமத்துவது நாம்தான்.

ஊடுருவும் அழகு கிரீம்

வளரும் பருவத்தில் ஆண், பெண் உடைகளில் பாகுபாடு காட்டப்படுகிறது. பெண் குழந்தை என்றால், அழகழகாக உடை உடுத்திப் பார்க்க நினைக்கிறார்கள். நல்ல ‘கவுனை’ அணியச் சொல்கிறார்கள். பிறகு ஆடினால், ஓடினால் கவுன் பாழாகும் என்கிறார்கள். ஆண் குழந்தைகள் போடுகிற டிரவுசரும் சட்டையும் அவர்கள் ஓடி, ஆட வசதியாக இருக்கின்றன. ஆனால், பெண் குழந்தைகளின் உடைகள் அவர்களுடைய செயல்பாட்டை / இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பெரிய, பெரிய பாவாடைகள், ‘கவுன்’கள் பெண் குழந்தைகளின் ஓட்டத்தைத் தடை செய்வதோடு, பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சிறுவயதிலேயே மனதில் பதிய வைத்துவிடுகிறது.

‘ஒல்லிதான் பெண்களுக்கு அழகு’, ‘பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும்’ என்பதும் மனதில் அறையப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து அடுத்தடுத்து உலக அழகிககள் தேர்ந்தெடுக்கப்பட்டது, நிறைய இளம் பெண்களிடம் கனவுகளை உருவாக்கிவிட்டது. உடல் எடை 50 கிலோவுக்குக் கீழ்தான் இருக்க வேண்டும் என்று உணவை ருசித்து, ஆரோக்கியமாகச் சாப்பிடுவதற்குப் பதில் கொறிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கூடவே சிவப்பழகு கிரீம்கள், ஏழைப் பெண்களும் வாங்குவதற்கு வசதியாக 5 ரூபாய் பாக்கெட்டுகளில் வர ஆரம்பித்துவிட்டன. அன்றாடக் கஞ்சிக்கு அல்லல்படும் பெண்கள்கூட, சிவப்பழகு கிரீம்களை வாங்குகிறார்கள். பெண்களின் இத்தகைய கோளாறுகளுக்குக் காரணம் சமூக மதிப்பீடுதான். பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைவிட, அழகாக இருக்க வேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கிறது.

வளர்ப்பில் வேண்டும் மாற்றம்

சகோதரிகள், அம்மா, பாட்டி என வீட்டின் மொத்தப் பெண்களும் ஆண்களுக்குச் சேவகம் செய்கிறார்கள். இதை அனுபவித்து வளரும் ஆண் மனது, பெண்கள் தனக்குக் கீழ் அடங்கியவர்கள் என்ற நினைப்பிலேயே வளர்கிறது, வாழ்கிறது. இதன் நீட்சியாகத்தான் தெருவில் பார்க்கும் பெண்களையும் மரியாதையில்லாமல் நடத்துகிறது.

வீட்டில் ஆண், பெண் பேதத்தோடு வளர்க்கப்படும் குழந்தைகளும், பாலின பேதத்தைச் சரியெனக் கருதும் ஆண்களும் பெண்களும் இருக்கின்றவரை எந்தவிதமான சமூகநீதியை எதிர்பார்க்க முடியும் அல்லது நிலைநாட்டிட முடியும்?

இப்படிப்பட்ட பார்வையின் அடிப்படையைப் புரிந்துகொண்டால்தான் ஆண், பெண் பாலின பேதம், வரையறைகளுக்கான அடிப்படையையும் புரிந்துகொள்ள முடியும்.

உடற்கூறால் அமைவது பாலினம், சமூகம் சுமத்துவது பேதங்கள் நிரம்பிய அடையாளம். குழந்தை பிறந்ததிலிருந்து உடலின் ஓர் உறுப்பை மட்டும் வைத்து ஒருவருடைய வளர்ப்பை , வாய்ப்பை, வாழ்க்கையைத் தீர்மானிப்பதைத் தடுக்கும்போது மட்டுமே, வளர்ந்த பிறகு பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆண் உருவாவதையும் , வன்முறையை வாய்மூடி ஏற்கும் நிலையில் பெண் இருப்பதையும் தடுக்க முடியும்.

கட்டுரையாளர், செயல்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x