Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 02 Feb 2014 12:00 AM
சிறு வயதில் அக்கா, தங்கைகளுக்குள் போட்டியும், சண்டையும் இருப்பது இயல்புதானே. ஆனால் அப்படியொரு போட்டிதான் முருகேஸ்வரியின் கைகளில் தூரிகையைக் கொடுத்திருக்கிறது.
“எனக்கு சின்ன வயசுல இருந்தே படம் வரைவது பிடிக்கும். கலர் பென்சிலை எடுத்துக் கொண்டு எனக்குப் பிடித்ததை எல்லாம் வரைவேன். என் தங்கை கல்லூரியில் சேர்ந்தபோது அவர்களுக்கு ஆறு மாத ஓவியப் படிப்பும் இருந்தது. அதுவரை கலர் பென்சிலால் மட்டுமே வரைந்து கொண்டிருந்த எனக்கு, பிரஷ் பிடித்து அவள் படம் வரைவதைப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். நாமும் அவளைப் போலவே பிரஷ் வைத்து படம் வரைந்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு அப்போது வாய்ப்பே கிடைக்கவில்லை” என்கிறார் முருகேஸ்வரி.
தூரிகை பிடித்து ஓவியம் வரைவதைத் தன் வாழ்நாள் கனவாகவே வைத்திருந்தவருக்குத் திருமணம் முடிந்து, 10 ஆண்டுகள் கழித்துதான் அதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
“எனக்குக் கல்யாணமானது, இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அப்போதும் பிரஷ் பெயிண்டிங் மீது ஆர்வம் குறைந்தபாடாக இல்லை. என் விருப்பத்தை என் கணவரிடம் சொன்னேன். ‘உனக்குப் பிடித்ததைச் செய்’ என்று அவர் பச்சைக்கொடி காட்டினார். நாங்கள் அப்போது சிவகாசியில் இருந்தோம். அங்கே சில்வஸ்டர் என்னும் மாஸ்டரிம் முறைப்படி ஓவியம் வரையக் கற்றுக்கொண்டேன்” என்கிறவர், அதன் பிறகு இயற்கைக் காட்சிகளாக வரைந்து தள்ளியிருக்கிறார்.
பசுமை போர்த்திய மலைத்தொடர், மரங்கள் அடர்ந்த காடு, வழிந்தோடும் வெள்ளையருவி, நதியோரம் நிசப்தம் பேசும் வீடு, தண்ணீரில் முகம் பார்க்கும் தென்னை மரங்கள், பனி படர்ந்த பகுதியிலும் உயிர்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என்று இவர் வரையும் ஓவியங்களில் சர்வம் இயற்கை மயம்.
“ஒரு காட்சியைப் பார்த்த உடனேயே அந்த இடத்துக்குச் சென்று உட்கார்ந்து விட வேண்டும் என்று தோன்றினால் அதுதான் உண்மையான ஓவியம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். என் ஓவியங்களும் அப்படியொரு நினைப்பைப் பார்க்கிறவர்களின் மனதில் உருவாக்க வேண்டும். அதுதான் என்னை இன்னும் இன்னும் அழகான ஓவியங்களை நோக்கி நகர்த்துகிறது” என்று சொல்லும் முருகேஸ்வரி, தான் வரைந்த ஓவியங்களை தன் மகள் படிக்கும் பள்ளியில் காட்சிக்கு வைத்திருக்கிறார். அப்போது
அங்கு வந்த ஜெர்மன் மாணவிகளை இவருடைய ஓவியங்கள் வெகுவாகக் கவர்ந்துவிட்டனவாம்.
“மொழி தெரியாத மனங்களைக்கூட சிறந்த ஓவியங்கள் இணைத்துவிடுகின்றன. அந்த மாணவிகளின் பாராட்டு என் உற்சாகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார் முருகேஸ்வரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT