Published : 21 May 2017 12:09 PM
Last Updated : 21 May 2017 12:09 PM
நம் சமூகம் புராணங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஐவருக்கும் மனைவி, அழியாத பத்தினி’ என்று பாஞ்சாலியைப் புகழ்கிறது. முனிவரின் மனைவியை, முனிவரின் உருவத்திலேயே வந்து கவர்ந்த இந்திரனுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் அகலிகைக்குத்தான் சாபம்! ‘ஆட்டோகிராப்’ திரைப்படமாக இருந்தாலும், சிலப்பதிகாரக் காப்பியமாக இருந்தாலும் ஆண்களின் காதல் மட்டுமே கொண்டாடப்படும் அம்சமாகப் பொதுப் புத்தியில் பதிந்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக இரோம் ஷர்மிளாவாக இருந்தாலும் நிவேதாவாக இருந்தாலும் அவர்களுக்கென்று ஆசாபாசங்கள் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது இந்தச் சமூகம். இதில் பெரிய கொடுமை நிவேதாவின் குழந்தைகளே அவரின் உடலை வாங்க மறுத்ததுதான்.
இந்தியப் பெண்ணின் வாழ்க்கை அவள் சார்ந்த உறவுகளைப் பராமரிப்பதிலும் அவர்களுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்வதிலுமே கழிந்துவிடுகிறது. அவள் ஒரு முடிவை எடுக்கும்போது விபரீதங்கள் ஏற்படுகின்றன. பெண்ணை ஒழுக்கச் சிறையில் அடைப்பதன் மூலமாகத் தன்னுடைய ஒழுக்கமற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறது ஆண் மனம். நீ கணவனாக இரு, மகனாக இரு, மகளாக இரு, நீ வேறு, நான் வேறு. என்னுடைய விருப்பங்கள் வேறு என்ற தன் விருப்பத்தைக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு பெண் தெளிவுபடுத்த வேண்டும்.
- மலர்விழி, சென்னை
ஆண்டாண்டு காலமாகப் பெண் என்பவள் போகப் பொருளாகத்தான் ஆண்களின் பார்வையில் இருந்துவருகிறாள். அவளின் உரிமைகள் மறுக்கப்பட்டு ஆணின் உரிமைகள்தான் அவள் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. நவநாகரிக உலகத்திலும் ஆணின் பார்வையில் பெண் என்பவள் போகப் பொருள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால்தான் பலாத்காரம், உடல் சார்ந்த வன்முறைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு முறையிலும், ஆண்-பெண் உறவு குறித்த சரியான கற்பித்தலிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும். அதற்கு நாம் முதலில் தயாராக வேண்டும். ஆண்-பெண் இருவரும் உடலினால் மாறுபட்டவர்களே அன்றி உணர்வுகளினால் ஒன்றுபட்டவர்கள் என்பதைச் சிறுவயதிலேயே புரியவைத்துவிட வேண்டும். இருவரின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை நம் வீடுகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
- பி.கே. ஜீவன், கும்பகோணம்
ஆண், பெண் இருவருக்குமே எல்லா உணர்ச்சியும் பொது. ஆனால், பெண்ணுக்கும் ஆசைகள், உணர்ச்சிகள் உண்டு என்பதை ஆண்கள் உணரவே இல்லை.
- கே.கே.பி.வி.புலவன்
பெண் என்பவள் தியாகத்தின் மறு உருவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆதி காலத்திலிருந்தே போதித்து வந்துள்ளார்கள். பெண் படித்து, வேலைக்குச் சென்று, சாதனைகள் புரியும் இந்தச் சூழ்நிலையில்கூட அவள் மட்டுமே நிறைய தியாகம் செய்ய வேண்டியுள்ளது. இதில் திரைப்படங்களின் பங்கு மகத்தானது. அப்படி ‘கடமை’யில் இருந்து தவறிய பெண் வில்லியாக்கப்படுகிறார். எந்த வேலையும் பார்க்காத, பெண்ணைக் கேவலமாகக் கேலிசெய்து, ஊர் சுற்றும் கதாநாயகன்(?), பெண்ணின் ஆடை, நடத்தை, அவளின் பொறுப்பு போன்றவற்றைப் பற்றி மணிக் கணக்கில் பாடம் நடத்துகிறான். இந்த அவலத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
தாம்பத்ய வாழ்க்கையில் உடல் தேவை என்பது எப்போதும் ஆணின் விருப்பமாகவே இருப்பது நம் சமூகத்தின் சாபக்கேடு. தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் பெண் மிக எளிதாக வெறிபிடித்தவள் ஆக்கப்படுகிறாள். பெண்ணியம் பேசுபவர்கள்கூட இந்தப் பிரச்சினையை வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள். மனைவியை இழந்த கணவனுக்கு மறுமணம் என்பது மிக இயல்பானதாக இருக்கிறது. அதுவே கணவனை இழந்த, கணவனைப் பிரிந்து வாழும் பெண் தனக்கான ஒரு துணையை ஏற்றுக்கொள்வது இன்னும் இழிவானதாகப் பார்க்கப்படுகிறது. சமூகத்துக்குப் பயந்துதான் நிவேதாக்கள் உருவாகிறார்கள். பெண்ணின் மறுமணம் அனைவராலும் இயல்பானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிவேதாக்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்திருக்கும்.
நமது சமூகத்தின் மிகக் கேவலமான ஆயுதம் ஒரு பெண்ணின் நடத்தை குறித்த விமர்சனங்களே. ஆண் எத்தனை பெண்களுடன் நட்பில் இருந்தாலும் தொடர்பில் இருந்தாலும் அது விமர்சனமாக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் சாதாரணமாக ஓர் ஆணுடன் பேசவே முடிவதில்லை. தான் எங்கிருந்தோ கண்காணிக்கப்படுகிறோம் என்ற எச்சரிக்கை உணர்விலேயே அவர்களது இயல்பு தொலைந்துவிடுகிறது.
- தேஜஸ், கோவை
கற்பெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்பதே சரியான கருத்து. ஜீவசுந்தரியின் கருத்தில் எனக்குப் பெரிதாக எந்த முரண்பாடும் இல்லை. விதவை மறுமணம், காதல் திருமணம், விவாகரத்து போன்றவற்றை எப்போது நம் சமூகம் தயக்கமின்றி ஏற்கும் வகையில் பக்குவப்படுகிறதோ, அப்போதுதான் ‘திருமணம் தாண்டிய உறவு’ என்று சொல்லப்படுபவை இல்லாமல் போகும். ஆணின் செயல்களைச் சமூகம் ஏற்று, அங்கீகரிக்காவிட்டாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், அதுவே பெண் என்று வரும்போது வாய் கூசாமல் பேசுகின்றனர். பெண்ணை உடைமைப் பொருளாக, சொத்தாகப் பாவிப்பதைச் சமூகம், அதிலும் குறிப்பாக ஆண் சமூகம் எப்போது நிறுத்துகிறதோ அப்போதுதான் மாற்றம் நிகழும்.
- ச.லெனின், சென்னை
நாட்டைத் தாயாக மதித்து ‘இந்தியத் தாய்’ என்று போற்றும் மக்கள், பெண் குலத்தையும் மதித்து அவர்களின் மாண்புகளைக் காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு பெண்ணுக்கு ஆண்கள் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இது பல நேரங்களில் விபரீதங்களில் முடிகிறது. எந்த நிலையிலும் ஆணுக்குப் பெண் அடிமையில்லை. பெண்ணுக்கென்று மனம் உண்டு, மானமும் உண்டு. கற்பும் புனிதமும் பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்ற பழைய பஞ்சாங்கம் இனி எடுபடாது. ஆண், பெண்ணை அடக்க நினைக்காமல், அன்புகூர்ந்து அரவணைத்து வாழும் இல்லறம்தான் இன்பம் பொங்கும் நல்லறம்.
- மனோகர், கோவை
என் மனைவி தினமும் ஓர் ஆணோடு இருசக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார் என்பது சுற்றத்தார் வாயிலாக எனக்கு வந்த செய்தி. என் மனைவியின் செயலை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவருடைய உற்ற துணைவனான என் பார்வையில் மட்டுமே உள்ளது. இந்தச் சமூகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். பெண்களின் நடத்தையை எப்போதும் உற்றுக் கவனித்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால், என் மனைவி இருசக்கர வாகனத்தில் வருகிறார் என்பதும், அவரை அழைத்து வருவது அவரது சகோதரன் என்பதும் சுற்றத்தார் அறியாத செய்தி. இதை ஒவ்வொருவரிடமும் சென்று விளக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அனைத்தையும் உற்று நோக்கும் சமூகத்தின் பார்வையை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது அவரவர் அறிவீனத்தைக் காட்டுகிறது.
- எஸ்.பிரபு, காமாட்சிபுரம்
எத்தனை யுகங்கள் ஆனாலும் பெண்கள் தியாகியாகவேதான் இருக்க வேண்டும் என்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டிய தருணம் இது. பெண்ணின் நடத்தை சார்ந்த விஷயங்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், சமூகத்தின் பார்வை, தனியாகப் பிரிந்து வாழும் பெண், திருமணமாகி வந்த பின் கணவன் வீட்டுச் சூழுல் போன்றவை பெண் உடைமைப் பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறாள் என்பதை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய தடைகளை மீறிப் பெண்கள் வெளிவருவது எப்போது?
- வசந்தா மாரிமுத்து, சென்னை
திரைப்படங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் உறவுகளைக் கொச்சைப்படுத்துதல், ஆழ்மனதில் வக்கிரம் வளர்க்கும் அனர்த்தமான தொனியில் பெண்களைச் சித்தரிப்பது போன்ற இழி செயல்களைக் கண்கூடாகப் பார்க்க நேரிடுகிறது. போதாக்குறைக்குச் சின்னத்திரையும் போட்டி போட்டுக்கொண்டு பெண்களைப் போகப் பொருளாக்குகிறது. இப்படிச் சமூகத்தைச் சீர்படுத்த வேண்டிய ஒவ்வொரு துறையும் வியாபார நோக்கில் சீர்கெட்டு இருப்பதாலேயே ஒரு பெண் எப்போதும் சமூகத்தில் சாக்கடைப் புழு போல நடத்தப்படுகிறாள்.
- எம்.சுதாமதி, தேனி
கணவனை இழந்த பெண்கள் படும் பாடு நம் சமூகத்தில் சொல்லி மாளாது. அவளது மறுமணம் ஒரு கிரிமினல் குற்றம் போலப் பார்க்கப்படுவதைவிடக் கொடுமையான விஷயம் எதுவும் இல்லை. முதலில் விதவைப் பெண்கள் துணிச்சலுடன் தங்களுக்கு விதிக்கப்படும் சில அடையாளங்களைத் தூக்கியெறிய முன்வர வேண்டும். மற்றப் பெண்களைப் போல பூவுடனும் பொட்டுடனும் வலம்வர வேண்டும். உடன் கட்டை ஏறும் வழக்கத்தைச் சட்ட ரீதியாகத் தடை செய்த அரசு, விதவைகளுக்கு நிகழும் சில மோசமான கொடுமைகளுக்கு எதிராகக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். நவீன உலகில் எத்தனையோ மாற்றங்களை அனுபவித்துவரும் நாம், இந்த மாதிரி மாற்றங்களையும் மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும். விதவைப் பெண்களுக்கான அரசு வேலைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்.
- பொன்.கருணாநிதி, கோட்டூர்
பெண்கள் தங்கள் திறமைகளின் எல்லைகளை விரிவுபடுத்தும் ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணிக்கப்பட்டு ஆண்களின் அணுகுமுறையால் எதிர்வினைகளை எதிர்கொள்கிறார்கள். பெரும்பாலான ஆண்களால் பெண்களின் துணிவை, முன்னேற்றத்தை, சாதுரியத்தை, திறமையைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அதை அடித்து நொறுக்க மிகப் பலமான ஆயுதமாக நடத்தை சார்ந்த அவதூறுகளைக் கையில் எடுக்கிறார்கள். பெண்ணை உடைமைப் பொருளாகப் பார்க்கும் இந்தச் சமூகம் கணவன் இறந்தாலோ, கைவிட்டாலோ அவளது ஆசைகள் புதைகுழிக்குள் புதைக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத விதியை முன்னிறுத்துகிறது. மீறி தன் ஆசைகளை, தேவைகளை வெளிப்படுத்தினால் அவள் மீது வீசியெறியப்படும் கந்தகச் சொற்கள் அவளைக் கொஞ்சம், கொஞ்சமாக பொசுக்கி விடுகின்றன. அவளின் சுயவிருப்பம், சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது.
- மலர்மகள், மதுரை
நல்ல ஆழமான யதார்த்தமான கேள்விகள். ‘நானும் அடிமைச் சமூகத்தின் ஆண்தான் என்றாலும் எனக்கும் பெண்ணை அடிமையாகவே பார்க்கத் தோன்றுகிறது. என்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்’ என்று முடியும் அம்பேத்கரின் வாசகம் நினைவுக்குவருகிறது. ஓர் அடிமையே தன்னை அடிமை என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்கு மதம், சாதி போன்றவை நமக்குப் போதித்துள்ளன. அறிவைக் கொண்டு மட்டும்தான் மாற்ற முடியும். அறிவை வளர்த்துக்கொள்வோம்.
- ராஜன்
இத்தனை நாட்களாக யாரேனும் எழுத்தாளர்களோ, பட இயக்குநர்களோ, பொது வெளியில் இருப்பவர்களோ பெண்ணின் மெல்லிய உணர்வுகள் பற்றிப் பேசுவார்களா என காத்திருந்தேன். ‘கள்ளக்காதல்’ எனப் பலரால் கொச்சைப்படுத்தப்படும் பல நிகழ்வுகளுக்குப் பின்னால் அன்புக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் மனம் மட்டுமே இருக்கும். முப்பது வயதான எனது ஆண், பெண் நண்பர்கள் மூன்றாவது அல்லது நான்காவது காதலில் இருந்தாலும் அது புனிதமெனச் சமூகம் சொல்கிறது. அதே வேளையில் விவரமறியா வயதில் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பொருத்தமற்ற ஒருவரை ஒருவிதமான கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டு, அந்த வாழ்க்கை தோல்வியடைந்தாலும் அந்த வயதிலேயே வெறுமையான துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.
22 வயதில் கையில் பெண் குழந்தை இருந்தது. எனவே, இனி என் வழக்கை முழுவதும் அந்தக் குழந்தைக்காகத்தான். எனக்கென்று தனியாக விருப்பு வெறுப்பு இருந்ததால் என் குடும்பத்தாலேயே நான் பாவியாகக் கருதப்படுகிறேன். இது போன்ற சூழ்நிலைகளில் இருக்கும் பெண்கள் மன வலிமை குறைந்து முதிர்ச்சியற்றவர்களாக இருந்தால் சில ஆண்களால் மனதளவிலும் உடலளவிலும் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டுச் சீரழியும் ஆபத்தும் அதிகம். அது போன்ற நேரத்தில் வாழ்க்கை மீது நம்பிக்கை குறைந்து மேலும் துன்பமயமாக மாறும். ஏனெனில் ஆணாதிக்கச் சமூகத்தில் பழி, பாவம், அவமானம் அனைத்தும் பெண்களுக்கே. என் மனக் குமுறல்களை தைரியமாக என் குடும்பத்தின் முன் வைத்தேன். தற்போது மனநல மருத்துவரிடம் சிகிச்சைபெறுகிறேன்.
- அஞ்சனா, சென்னை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT