Published : 12 Jun 2016 01:00 PM
Last Updated : 12 Jun 2016 01:00 PM
(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்தியச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருவராக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)
இந்தியா ஒரு ஆச்சரியக் குறி. எத்தனை முறை பார்த்தாலும் புதுப்புது ஆச்சரியங்களால் மனதைக் கொள்ளையடிக்கிறது. இந்தியவின் வடமேற்கு திசையில், பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ராஜஸ்தான் நோக்கிப் பறந்தேன். பரந்து விரிந்த பாலைவனங்கள், ஒட்டகங்கள், வரலாற்றின் கம்பீரத்தைச் சொல்லும் கோட்டைகள், பிரமாண்ட அரண்மனைகள், குளிர்ச்சி நிறைந்த ஏரிகள், ஊரெங்கும் வியாபித்திருக்கும் செந்நிற ஒளி என ராஜஸ்தான் வண்ணங்களின் தொகுப்பாகக் காட்சியளிக்கிறது.
அற்புதாஞ்சலில் ஓரிரவு
குஜராத்தில் இருந்து ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள அபு மலையை நோக்கி மைக்கியை விரட்டினேன். அபு மலையின் (மவுண்ட் அபு) பழைய பெயர் ‘அற்புதாஞ்சல்’. ஆறுகளும் அருவிகளும் ஏரிகளும் சிற்றோடைகளும் அபு மலையைப் பசுமையால் நிரப்பியிருக்கின்றன. அடர்காடுகளும் உயர்மரங்களும் நிறைந்த அபு மலை, அற்புதமாகக் காட்சியளிப்பதால் ‘அற்புதாஞ்சல்’ என அழைக்கப்பட்டிருக்கலாம்.
வெயில் பிரதேசமான ராஜஸ்தானில் இருக்கும் ஒரே மலைப் பிரதேசம் என்பதால் அபு மலையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. வெள்ளைப் பளிங்குக் கற்களில் கட்டப்பட்டுள்ள ஜைன கோயில்களும், ஜெய்ப்பூர் மகாராஜாவின் அரண்மனையும், விஷ்ணு பாத தடம், நாக்கி ஏரி ஆகியவையும் மனதை ஈர்க்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 1722 மீட்டர் உயரத்தில் உள்ள குரு ஷிங்கார் சிகரத்தில் இருந்து பார்க்கும்போது, ராஜஸ்தான் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. அன்றிரவு அபு மலையில் உறங்கிவிட்டு, அதிகாலையில் பாவப்புரி ஜைன கோயில் நோக்கிப் புறப்பட்டேன்.
பனிமூட்டம் கலையும் வேளையில் மலையழகை ரசித்துக்கொண்டே பயணிக்கையில் மனம் இறகைப் போலப் பறந்தது. செந்நிறப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள பாவப்புரி ஜைன கோயிலின் வரவேற்பு வளைவே பிரமாண்டமாக இருந்தது. மனிதர்களை மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களையும் நம்மைப் போல நேசிக்க வேண்டும் என ஆங்காங்கே எழுதப்பட்டிருந்தது. கோயிலின் உட்புறத்தில் கால்நடைகள் ஆங்காங்கே அடைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கால்நடைகளுக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவு, கோயிலின் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.
உழைப்பில் ஒளிரும் ஜோத்பூர்
அங்கிருந்து பிஷாங்கர் வழியாக ராஜஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான ஜோத்பூருக்குப் புறப்பட்டேன். செஞ்சூரிய ஒளியால் நிறைந்திருக்கும் இந்நகரம் ‘சூரிய நகரம்’ என அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயரின் ஆட்சியில் அப்போதைய ராஜஸ்தானின் தலைநகரமாகவும், அதற்கு முன்பு மார்வாரி அரசாட்சியின் தலைநகரமாகவும் ஜோத்பூர் இருந்தது. அரண்மனைகளும் கோட்டைகளும், கோயில்களும் நிரம்பியுள்ள ஜோத்பூரில் மார்வாரி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.
தொழில் வகுப்பினராக அறியப்படும் மார்வாரிகள், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பரந்திருக்கிறார்கள். மார்வாரியுடன் ராஜஸ்தானி, இந்துஸ்தானி, உருது உள்ளிட்ட மொழிகளைக் கலந்து 23 வகையான மொழிகளை இந்த மக்கள் பேசுகிறார்கள். மதச் சடங்குகளிலும், கலாச்சார நிகழ்வுகளிலும் அதிக ஈடுபாடு கொண்ட மார்வாரிகள் புத்திசாலித்தனமாக உழைக்கக்கூடியவர்கள் என மானுடவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஜோத்பூர் மலையில் உள்ள பிரமாண்ட மெஹ்ரன்கார்ஹ் கோட்டை, இந்தியாவின் கம்பீரமான அரண்மனைகளில் ஒன்றான உமைத் பவன், பிரமாண்ட ஏரி அரண்மனை, அழகிய தோட்டங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்கின்றன. ஜோத்பூரை அடுத்துள்ள தார் பாலைவன மணல் வெளி ஒட்டகங்களாலும், தலைப்பாகை அணிந்த மனிதர்களாலும், ஈச்ச மரங்களாலும் நிரம்பியிருக்கிறது. இங்குள்ள பெரும்பாலான ஒட்டகங்கள் எலும்பும் தோலுமாக, பார்க்கவே பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன.
ஆச்சரியமூட்டும் புல்லட் பாபா கோயில்
ஜோத்பூரில் இருந்து பாலி நகரம் வழியாக ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் நோக்கிப் பறந்தேன். பாலி நகரத்தில் தேசிய நெடுஞ்சாலையோரமாக உள்ள கோயிலில் ஏராளமான வாகன ஓட்டிகள் பயபக்தியுடன் வழிபட்டுக்கொண்டிருந்தனர். அங்கு நின்றிருந்த கிஞ்சல் கினி என்ற லேடி பைக்கரிடம் கேட்டபோது, “இது புல்லட் பாபா கோயில்” என்று சொல்லிவிட்டு, கோயில் உருவானது குறித்து மக்களிடையே புழங்கிக்கொண்டிருக்கும் ஒரு கதையையும் சொன்னார்.
பாலியைச் சேர்ந்தவர் ஓம் பன்னா ரத்தோர் சிங் (24). இவர் தனது ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை உயிராக நேசித்தார். 1988-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இந்த இடத்தில் நிகழ்ந்த விபத்தில் ஓம் பன்னா பலியானார். போலீஸார் ஓம் பன்னாவின் ராயல் என்ஃபீட் புல்லட்டைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். மறுநாள் காலை காவல் நிலையத்தில் அந்த புல்லட் திடீரென மாயமானது. போலீஸார் ஊரெங்கும் தேடிவிட்டு வந்து பார்த்தால், அந்த புல்லட் இந்த இடத்தில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் புல்லட்டை மீண்டும் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று, அதில் இருந்த பெட்ரோல் அனைத்தையும் காலி செய்துவிட்டு, சங்கிலியால் கட்டிவைத்தனர். ஆனால் மறுநாளும் புல்லட் தானாக இந்த இடத்தில் வந்து நின்றது. இது பற்றித் தகவல் அறிந்த ஊர் மக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். அப்போது ஓம் பன்னா தனது குடும்பத்தாரின் கனவில் வந்து தனது புல்லட்டுக்கு அதே இடத்தில் கோயில் கட்டுமாறு கூறினார். அதன்படி அவரது புல்லட்டுக்குக் கோயில் கட்டப்பட்டு வணங்கப்படுகிறதாம்.
இந்தத் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகன ஓட்டிகளும் இங்கு வந்து பயபக்தியுடன் புல்லட்டை வணங்குகிறார்கள். பூசாரி மந்திரித்துத் தரும் கயிற் றை வாகனத்தில் கட்டிக்கொண்டால் விபத்தே ஏற்படாது என நம்பப்படுகிறது.
கிஞ்சல் கினி சொன்ன தகவல்களைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.
பாலைவனமான சமூகம்
ஜெய்ப்பூரை அடைந்தபோது எனது கல்லூரித் தோழி வைசாலி பட்டும் ஜெய்ப்பூர் வி2000 ரைடர்ஸ் கிளப் நண்பர்களும் என்னை மாலையிட்டு வரவேற்றார்கள். கடந்து வந்த பயணம் பற்றி அன்றிரவு முழுவதும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். ராஜஸ்தானில் பிரசித்தி பெற்ற மக்ஹன்பேடா, மாவா கச்சோரி சாப்பிட்டேன். ராஜஸ்தானியர்கள் பொதுவாகத் தங்களது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், உணவு முறையையும் பேணிக் காப்பவர்கள். பட்டினி யால் உயிரே போனாலும் தங்களது உணவைத் தவிர வேறு உணவு சாப்பிட மாட்டார்கள். இங்கிருந்த பீட்ஸா, பாஸ்தா கடைகளில் போய் யாருமே சாப்பிடாததால் ராஜஸ்தானில் பீட்ஸா கடைகள் மூடுவிழா கண்டன.
ஜெய்ப்பூரில் ஏராளமான அரண்மனைகளும், மாபெரும் கோட்டைகளும், ஜைன கோயில்களும், கண்கவர் பூங்காக்களும், வண்ண வண்ண பளிங்குகளால் கட்டப்பட்ட கட்டிடங்களும் மிளிர்கின்றன. கொளுத்தும் வெயிலில் ராஜஸ்தானிய பாரம்பரிய கம்பளி, சால்வைகள், விரிப்புகள், தோலில் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் விற்பனையாகின்றன.
பாலைவன தேசமான ராஜஸ்தானில் மழைப் பொழிவின் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் பாரம்பரியக் கைத்தொழிலும், குடிசைத் தொழிலும் காணாமல் போய்விட்டன. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பிறப்பு சதவிகிதத்திலும், சமூகக் கட்டமைப்பிலும் பெண்களின் நிலை பாதாளத்தில் கிடக்கிறது. விவசாயத்துக்குப் புத்துயிரூட்ட இஸ்ரேல் நாட்டு முறைப்படி சொட்டுநீர் பாசனத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருகிறார்கள். அடிப்படை நீதியற்று, ஏற்றத்தாழ்வுகளுடன் பாலைவனமாகக் கிடக்கும் சமூகத்தைக் காக்க எந்தத் திட்டத்தையும் காண முடியவில்லை. ஆனால் முதல்வர் வசுந்தரா ராஜே, “பாலைவன தேசத்தைச் சோலைவனமாக மாற்றுவோம்” என பேனர்களில் சிரிக்கிறார்.
(பயணம் தொடரும்)
தொகுப்பு: இரா.வினோத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT