Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

யாருக்கும் நேரக்கூடாத கொடுமை

கடந்த வாரம் ‘பெண் இன்று’ இணைப்பில் பத்திரிகைத் துறையில் இருக்கும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப் படித்து அதிர்ந்தேன். ஆனால் அதே செய்தியைப் படித்த என் நண்பர்கள் சிலர், ‘அந்தப் பொண்ணுக்கு எதுவுமே நடக்கலை. இதுக்கு ஏன் இவ்ளோ ஆர்ப்பாட்டம்?’ என்றார்கள். என்ன மனநிலை இது? பாலியல் தொல்லை என்பதற்கு இவர்கள் வரையறுத்து வைத்திருக்கும் எல்லைவரை சென்று, ஒரு பெண் துயரப்படத்தான் வேண்டுமா? அந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணின் புகாருக்கு எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை என்பதுதான் என் கோபத்தை அதிகரித்தது.

ஊரில் நடக்கிற அநீதிகளைத் தோலுரித்துக் காட்டுகிற பொறுப்பும் கடமையும் இருக்கிற பத்திரிகைத் துறையிலேயே இப்படி நடக்கும்போது, தனியார் நிறுவனங்களிலோ, அரசு அலுவலகங்களிலோ வேலைபார்க்கும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

நான் தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறேன். என் தோழிக்கு நேர்ந்த கொடுமை, யாருக்கும் நடக்கக்கூடாதது. அவளுடையது காதல் திருமணம். அன்பான கணவன், அழகான குழந்தைகள் என்று எந்தச் சிக்கலும் இல்லை என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவள் கண்ணீருடன் அந்தச் சம்பவத்தைச் சொன்னபோது மனம் அதிர்ந்தது.

அக்கறையால் வந்த அவஸ்தை

அவள் அனைவரிடமும் கலகலப்பாகப் பழகும் இயல்பு கொண்டவள். உடன் பணிபுரிகிறவர்கள் மீது அக்கறை கொண்டவள். யாருக்காவது உதவி தேவைப்பட்டால், தானாகவே முன்வந்து செய்துவிடுவாள். ஆனால், இந்த அக்கறையைத் தன் மீதான தனிப்பட்ட கரிசனமாக நினைத்துவிட்டான் ஒருவன். அவள் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்குக்கூட இரட்டை அர்த்தம் கற்பித்துக் கொண்டிருக்கிறான். அவள் மீது ஒருதலையாகக் காதலை வளர்த்துக்கொண்டது மட்டுமில்லாமல், தன் விருப்பத்தை அவளிடம் வெளிப்படுத்தியும் இருக்கிறான். அவனது நடவடிக்கையால் அதிர்ந்துபோன என் தோழி, அவனுடைய அணுகுமுறையைக் கண்டித்திருக்கிறாள். அதைக் கேட்டும் திருந்தாத அவன், அவளுக்குத் தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்புவதும், காதல் மொழிகள் பேசுவதுமாக இருந்திருக்கிறான்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல், அவனைப் பற்றி மேலதிகாரிகளிடம் புகார் செய்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறாள் என் தோழி. தன் வேலை போய்விடுமோ என்று பயந்தவன், தன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறான். அவனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவளுடைய வாழ்க்கையைச் சீர்குலைத்துவிடுவதாகச் சவால்விட்டிருக்கிறான். எப்படியோ அவள் கணவரைச் சந்தித்து, அவரிடம் என் தோழியைப் பற்றித் தவறாகச் சொல்லியிருக்கிறான்.

என் தோழியும் கணவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டவர்கள் என்பதால் லேசான சண்டையுடன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் தோழியின் சின்னச்சின்ன தவறுக்கெல்லாம், அவள் கணவன் அவளைக் குத்திக்காட்டுவதாகச் சொல்லிப் புலம்புகிறாள். நின்றால், நடந்தால், நன்றாக உடுத்தினால் என எடுத்ததற்கு எல்லாம் இவளைக் குறைசொல்கிறாராம். “நீ இப்படி நடந்துகொள்வதால்தான் அவனவன் உன்னைப் பற்றி தவறாகச் சொல்கிறான்” என்று தொடர்ந்து ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறாராம். என்ன செய்வது? மற்றவர்களிடம் அக்கறை காட்டப் போய், எந்தத் தவறும் செய்யாமல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என் தோழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x