Published : 23 Sep 2013 10:35 AM
Last Updated : 23 Sep 2013 10:35 AM

காமுவுக்கு கிருஷ்ணனும் ஒரு பிள்ளை!

உழைக்கத்துடிப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பார்கள். அதற்கு அக்மார்க் உதாரணமாய் அறுபது வயதிலும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கிறார் கிருஷ்ணன்!

திண்டுக்கல் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். சிறுவயதில் போலியோ தாக்கியதால் இரண்டு கால்களும் முடமாகிப் போனவர். கால்கள்தான் ஊனமே தவிர, உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணமும் துடிப்பும் கூடுதலாகவே இருந்தது கிருஷ்ணனுக்கு. இவருக்கு எப்படி வேலை கொடுப்பது என்று மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டுக்கு அருகிலேயே ஒரு லேத் பட்டறையில் கிருஷ்ணனுக்கு வேலை கொடுத்தார்கள். கொடுத்த வேலையை சிரத்தையாய் செய்தார். அன்றைக்கு ஆரம்பித்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை. ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள்’ என்பார்கள். இதை நிஜமாக்கி இருக்கிறார் கிருஷ்ணனின் மனைவி காமு. முப்பது வருடங்களாக கணவருக்கு பின்னால் நிற்கிறார் காமு!

கிருஷ்ணனுக்கு ஐந்து பிள்ளைகள். காமுவுக்கு மட்டும் கூடுதலாய் இன்னொரு பிள்ளை. அது கிருஷ்ணன்! காலையில் கிருஷ்ணனுக்கு பணிவிடைகள் செய்து, அவரை மூன்று சக்கர சைக்கிளில் தூக்கி உட்காரவைத்து, பழநி ரோட்டில் உள்ள ஜாகிர் உசேன் ஒர்க்‌ஷாப்பில் கொண்டுபோய் இறக்கி விடுகிறார் காமு. மாலையில் வேலை முடியும் நேரத்தில் மறுபடியும் கடைக்கு வந்து அவரை அழைத்துச் செல்கிறார். ஒர்க்‌ஷாப் வருமானத்தை வைத்தே தனது மூன்று மகள்கள், இரண்டு மகன்களை கரையேற்றி இருக்கிறார் மனிதர். வயோதிகம் அவரது செவிக்கும் சோதனை வைத்ததால் கேட்கும் திறனையும் இழந்துவிட்டார் கிருஷ்ணன். ஆனாலும், தன்னம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை.

இனி கிருஷ்ணன்..

"பத்து வயசு இருக்கும் போது போலியோ அட்டாக் வந்திருச்சு. என் ஊனத்தைப் பார்த்து, நல்லா பழகிட்டு இருந்த நண்பர்களே ஒதுங்க ஆரம்பிச்சிட்டாங்க. அது என்னை ரொம்பவே பாதிச்சிருச்சு. ஊனமாகிப் போனது என் குத்தமான்னு பல நேரங்கள்ல உள்ளுக்குள்ள புழுங்கியிருக்கேன். அதேநேரம், இவங்களுக்கு முன்னால நானும் ஒரு மனுஷனாகி நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் கட்டி நாலஞ்சு புள்ளைங்கள பெத்து நல்லபடியா வாழ்ந்து காட்டணும்னு வைராக்கியமும் வளந்துச்சு. இருபது வயசுல, வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு லேத் பட்டறையில வேலை குடுத்தாங்க. தகடுகளை வெட்டி சைஸ் பண்ற மாதிரியான எளிதான வேலைகளைத்தான் முதல்ல குடுத்தாங்க.

கொஞ்சம் கொஞ்சமா இன்னும் சில வேலைகளையும் கத்துக்கிட்டேன். சம்பாதிக்க ஆரம்பிச்சதும் என்னை யும் மதிச்சு எனக்கு பொண்ணு குடுத்தாங்க. இன்னைக்கி நான் தன்னம்பிக்கையோட தலை நிமிந்து நிக்கிறேன்னா அதுக்கு காரணம் என்னோட காமு. இவ இல்லைன்னா நான் என்னைக்கோ செத்து சுண்ணாம்பு ஆகிருப்பேன். என்னைய தொட்டுவந்துட்டு இவ பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சம் இருக்காது’’

நீளமாய் பெருமூச்சு விட்டவர், தொடர்ந்தும் பேசினார்..

“எப்படியோ உருண்டு பிரண்டு அஞ்சு புள்ளைங்களயும் கரையேத்திட்டேன். பசங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு அப்புறம் தனியா போயிட்டாங்க. அவங்களே கூலி வேலைக்குப் போறாங்க. இதுல நம்மள என்னத்த கவனிக்கிறது. அதனால, நாங்களும் அவனுகள குத்தம் சொல்றதில்லை. எனக்கு என் காமு இருக்கா. இவளுக்கு உடம்புக்கு சரியில்லாம போனா, லேத் பட்டறை தோழர்களே வீட்டுக்கு வந்து என்னைய கூட்டிட்டுப் போவாங்க.

வேலைக்குப் போனா தினப்படி120 ரூபாய் சம்பளம், கவுருமெண்டு பென்ஷன் ஆயிரம் ரூபாய் இத வைச்சி வண்டி ஓடுது. அரசாங்கத்துல என்ன மாதிரி ஆளுங்களுக்கு மூணு சக்கர மோட்டார் சைக்கிள் குடுக்குறாங்க. அப்படியொரு மோட்டார் சைக்கிள் கிடைச்சா, காமுக்கு அலைச்சல் குறையும்’’ அக்கறையோடு சொன்னார். “கால் இல்லைன்னா என்ன.. நம்பிக்கை இருக்கு. கூடவே என் காமு இருக்கா. எதையும் சமாளிப்பேன்” தீர்க்கமான நம்பிக்கையுடன் சொன்னார் கிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x