Published : 13 Sep 2013 01:53 PM
Last Updated : 13 Sep 2013 01:53 PM
புது தில்லியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, சிரோஹி என்ற குக்கிராமம். மலைகள் சூழந்த, சிறிய ஏரிகள் கொண்ட எளிமையான கிராமம். ஆனால், அங்கு ஐந்து மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும். அது மட்டுமல்லாமல், அதிக மின் கட்டணம் வசூலிப்பது, தவறாக மின் கணக்கு காட்டுவது என பல பிரச்சனைகள் இருந்தன. ஆதனால் அங்குள்ள பல வீடுகளில் மின் இணைப்பு கொடுக்கவே முன் வரவில்லை. அக்கிராமத்தில், 206 வீடுகளில் மட்டுமே மின் இணைப்பு இருந்தன. இதனால், அங்குள்ள மக்களுக்கு சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இருள் வாழ்ககை.
இந்த நிலை, அந்தக் கிராமத்திற்கு கௌரி கோபால் அகர்வால் வரும்வரைதான்! 2012ஆம் ஆண்டு யதேச்சையாக சிரோஹிக்கு வந்தர் கௌரிக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப்போனது. அவ்வப்போது அங்கு சென்றுவந்தார். அந்தக் கிராமத்தின் அழகால் ஈர்க்கப்பட்ட கௌரி அக்கிராமத்தின் தேவைகளையும் மெல்ல மெல்லப் புரிந்துகொண்டார். கிராமத்தில் நிலவும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, மின்சார வசதி இன்மை இப்படிப் பல பிரச்சினைகள் இருப்பதைப் புரிந்துகொண்டார். அந்தக் கிராமத்தின் அழகு அதன் பிரச்சினைகளை மறைக்கும் போர்வையாக இருப்பதை உணர்ந்து வேதனை அடைந்தார்.
வெளியில் இருக்கும் அழகு கிராமத்தின் உள்ளேயும் இருக்க வேண்டும் என்று நினைத்த கௌரியின் மனதில் பல யோசனைகள். அவற்றையெல்லாம் செயல்படுத்த அவருக்குத் தடையாக இருந்தது வங்கியில் அவர் செய்துவந்த வேலை. கை நிறைய சம்பளம தரும் வேலையை விட்டுவிட்டு “ஸ்கில்ட் சமாரிடன் ஃபவுன்டேஷன்” என்ற அறக்கட்டளை யை நிறுவினார். நகர்ப்புற மக்களை வார இறுதிச் சுற்றுலாவாக இந்த அழகிய கிராமத்துக்கு அழைத்துவரும் பயணங்களை ஏற்பாடு செய்தார். கிராமத்தின் அழகிய சூழலையும் மாசுபடாத காற்றையும் பசுமையான மலையடிவாரத்தையும் ரசித்த நகரத்து மக்களிடம் அந்த கிராமத்து மக்கள் கலந்து பழக ஏற்பாடு செய்தார். கிராமத்தின் கைவினைக் கலைஞர்கள் செய்த அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பொருள்களை விற்கவும் ஏற்பாடு செய்தார். இதன் மூலம் அந்த கிராமத்தில் பணப் புழக்கம் ஏற்பட்டது. நம்பிக்கை துளிர்த்தது.
அறக்கட்டளை மூலம் அந்த கிராமத்துக்குத் தேவையான வேறு பல திட்டங்களையும், தொண்டுகளையும் நடத்திவந்தார். பல அடிப்படைப் பிரச்சனைகளுள் மிக முக்கியமான மின் பற்றாற்குறையை முடிவுக்குக் கொண்டுவர நினைத்த கௌரி, சூரிய மின்சாரத் திட்டம் என்ற தன் லட்சிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார். இங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சூரிய ஆற்றல் கொண்ட எல்.இ.டிக்கள் பொருத்தும் இத்திட்டத்தை எல்லைகளற்ற பொறியியலாளர்கள், இந்தியா (ணிஸீரீவீஸீமீமீக்ஷீs ஷ்வீtலீஷீut தீஷீக்ஷீபீமீக்ஷீs), மிஸீபீவீணீ என்ற அமைப்பிற்கும், பெக்டெல் நிறுவனத்திற்கும் தன் குழுக்களோடு விவரித்தார்.
மூன்று கட்டங்களில் நிறைவேற்றவிருக்கும் இந்தத் திட்டத்தை, இந்தக் கிராம மக்கள் மிகவும் வரவேற்கின்றனர். “இதை முதலில் எங்களால் நம்ப முடியவில்லை. எங்களுக்காக கௌரி நிறைய செய்திருக்கிறார். ஆனால் இந்த திட்டம் எங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். இது ஒவ்வொருக்கும் பலன் அளிக்கக்கூடியது. எங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க உதவும். எங்களால் இரவிலும் வேலை செய்ய முடியும்,” என்கிறார் கைவினை பொருட்கள் செய்யும் சவான். முதல் கட்டமாக, இத்திட்டத்தை 50 வீடுகளில் ஜூலையில் செயல்படுத்தத் தொடங்கினர். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் என்கிறது, எல்லைகளற்ற பொறியியலாளர்கள் அமைப்பு.
தங்களுக்காகப் பிறர் செய்யும் தொண்டாக இத்திட்டத்தை கிராம மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் கௌரி. எனவே இத்திட்டத்தில் மக்களையும் ஈடுபடுத்திவருகிறார். “இந்த திட்டத்திற்கு மக்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். அதே சமயம், இந்த திட்டத்திற்காக இவர்களிடமும் சில நிதிதொகையைப் பெற்றுக்கொள்வோம். எங்களுடைய நோக்கம் இந்த கிராமம் தங்களின் அடிப்படை வசதிகளை தாமே சுயமாக திட்டமிட்டு செயல்படுத்துவது தான். இதுபோன்ற திட்டங்களை மற்ற கிராமங்களுக்கும் செயல்படுத்த விரும்புகிறோம்,” என்கிறார் கௌரி.
எட்டுத் திக்கும் பரவட்டும் கௌரியின் நற்பணி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT