Last Updated : 30 Apr, 2017 03:53 PM

 

Published : 30 Apr 2017 03:53 PM
Last Updated : 30 Apr 2017 03:53 PM

முகம் நூறு: விவசாயத்தை வழிநடத்தும் விஞ்ஞானப் பெண்கள்!

விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது. இந்தத் தருணத்தில் தமிழகத்தின் மண் சார்ந்த விவசாயத்துக்காக ஆய்வு மேற்கொண்டு தேசிய விருது பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள் மூன்று விஞ்ஞானிகள்.

விவசாயத்தில் எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், மண் இல்லாத விவசாயத்தை நோக்கிய பயணம் சவாலானது. மண்தான் உயிர்ச் சங்கிலியின் ஆதாரம். அப்படிப்பட்ட மண்ணையும் அதில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளையும் அவை எவ்வாறெல்லாம் விவசாயத்தை மேம்படுத்தும் என்பதையும் ஆய்வு செய்துவருகிறார்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சித்தேஸ்வரி, ஜெகதீஸ்வரி, மாலதி ஆகியோர்.

சித்தேஸ்வரி, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரி யராகவும் நுண்ணூட்ட ஆய்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். அவருடன் உதவிப் பேராசிரியர்கள் ஜெகதீஸ்வரியும் மாலதியும் பணிபுரிகிறார்கள். மூவரும் தமிழகத்திலுள்ள 22 மாவட்டங்களில் மண் மாதிரிகளைச் சேகரித்து, நுண்ணூட்டச் சத்துகள் விவரப் பட்டியலைத் தொகுத்து வருகிறார்கள். இவர்களது ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிப் பணிகளையும் பாராட்டி, இந்திய மண்ணியல் துறை நிறுவனம் தேசிய விருதை வழங்கியுள்ளது. இந்த மூவர் குழுவால் வேளாண்மைப் பல்கலைக்கழக மண்ணியல் துறையின் ஒருங்கிணைந்த நுண்ணூட்ட ஆய்வு மையம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்ல, துத்தநாகம் குறித்த ஆய்வுக்காகச் சிறந்த விஞ்ஞானி என்ற எஸ்.என்.ரானடே விருதும் சித்தேஸ்வரிக்குக் கிடைத்துள்ளது.

தமிழகத்துக்கான பணி

ஒருங்கிணைப்பாளர் சித்தேஸ்வரிக்குச் சொந்த ஊர் பெருந்துறை. விவசாயப் பின்புலம் இல்லாத குடும்பம். விவசாயத்தின் மீதான ஆர்வமே தன்னைப் பணியில் ஈடுபடவைத்திருக்கிறது என்கிறார்.

“1967-ம் ஆண்டுக்கு முன்பு மண்வள ஆய்வு அதிகமாக இல்லை. அதற்குப் பிறகுதான் ஒவ்வொரு பகுதியாக மண் மாதிரிகளைச் சேகரித்து, என்னென்ன நுண்ணூட்டச் சத்துகள் இருக்கின்றன, எவையெல்லாம் தேவை என்று விவசாயிகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

2005-க்குப் பிறகு ஜி.பி.எஸ். வசதி வந்திருக்கிறது. மண் மாதிரி எடுத்து, அதில் இருக்கிற சத்துகள் குறித்து எடுத்துச் சொல்லி, கூடுதலாக என்னென்ன சத்துகள் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்தால் மகசூல், லாபம், மண்வளம் கூடும். விவசாயத்தை மட்டுமல்ல, இந்த மண்ணையும் பாதுகாக்கிற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. மற்ற ஆய்வுகளைவிட, நுண்ணூட்டச் சத்துக்கான ஆய்வு ரொம்பவும் நுணுக்கமானது. தொய்வில்லாமல் வேலை நடந்தால் மட்டும்தான், நல்ல முடிவுகளைக் கொடுக்க முடியும். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும்

22 மையங்கள் இருக்கின்றன. விவசாயி களுக்குக் கொடுக்கிற பரிந்துரைகள், தொடர்ச்சியான ஆய்வுகள் என்று இந்தியாவிலேயே நம் மையம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு மண் மாதிரி வரைபடம் வெளியிட வேண்டும். அந்த வரைபடம் தமிழக விவசாயிகளுக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும்” என்று சித்தேஸ்வரி சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

உதவிப் பேராசிரியர் ஜெகதீஸ்வரி, “போரான் சத்து தொடர்பாக நான் ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன். மற்ற சத்துகளைவிட போரான் ஆய்வு கடினம். ஒரு புள்ளி அதிகமானாலும் மண்ணுக்கு விஷமாகிவிடும். காலிஃபிளவர் போன்ற பயிர்களுக்கு இந்தச் சத்துதான் தேவை. அதனால் போரானைத் தவிர்க்க முடியாது. இந்தத் துறையைப் பொறுத்தவரை உடலுழைப்பு, ஆய்வு இரண்டும் தேவை. நாங்கள் மூவரும் ஒரு பக்கம் குடும்பப் பொறுப்புகளை கவனித்துக்கொண்டு இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கான ஆய்வுகளைச் செய்துவருகிறோம்” என்று சொல்கிறார். இவர் மதுரை மாவட்ட விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்.

சவால்களைக் கடந்த பயணம்

“ஆய்வைவிட, ஆய்வு முடிவுகளை நிரூபிக்க விவசாயிகளை நேரடியாகச் சந்திக்கும் அனுபவம் சவாலானது. காலம் காலமாகப் பயிரோடு வாழ்கிற விவசாயிக்கு அனுபவப்பூர்வமான அறிவு அதிகம். அதோடு அறிவியலும் இணைகிறபோது விவசாயம் செழிப்பாக இருக்கும். எடுத்த எடுப்பிலேயே நம் பரிந்துரைகளைச் சொல்லி விவசாயிகளை நம்பவைக்க முடியாது. செயல் விளக்கத் திடல் அமைத்து நாங்களும் விவசாயம் செய்ய வேண்டும். செயல் விளக்கம் மூலம் நிரூபித்தால் மட்டுமே விவசாயிகள் நம்புவார்கள். ஒருமுறை நம்பிக்கை வந்துவிட்டால் அதுவே நிலைத்துவிடும். உங்கள் மண்ணில் இந்தச் சத்து குறைவாக இருக்கிறது, அதற்கு இதைப் பயன்படுத்துங்கள், இந்தப் பயிர் விதையுங்கள் என்று சொன்னால் போதும். அதை நம்பி விவசாயம் செய்வார்கள். குழந்தைகள் மாதிரி இருக்கிற விவசாயிகளைச் சரியாக வழிநடத்த வேண்டும். அந்தப் பொறுப்பு எங்களுக்கு ரொம்பவும் அதிகம்” என்று பொறுமையாகச் சொல்கிறார் உதவிப் பேராசியர் மாலதி.

உடலுழைப்பு மட்டுமே கடினமல்ல, அறிவு சார்ந்த தளமும் கடினமானதுதான். இரண்டிலும் பெண்கள் தடம் பதிக்கிறார்கள். படித்த பெண்கள் விவசாயத்துக்கு வரவேண்டும் என்பதில் மூவரின் எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கின்றன. விவசாயத்தில் பெண்கள் இருந்தால், உற்பத்தித் திறன் கூடும். காலத்துக் கேற்ற பயிர் செய்யும் நுட்பம் மேலோங்கும்.

“நுண்ணூட்டச் சத்து ஆய்வு மண்ணுக்கானது மட்டுமல்ல. மண் மூலம் தாவரத்துக்கும், தாவரத்திலிருந்து கால்நடைக்கும், கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும் நுண்ணூட்டச் சத்துகள் கொண்டு செல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் உலக அளவில் ஆய்வுகள் நடக்கின்றன. அதில் எங்களது பங்கும் நிச்சயம் இருக்கும். அது சவால்கள் நிறைந்த, சவால்களைக் கடந்த பயணமாக இருக்கும். பெண்கள் என்ற முறையில் ஊக்கமும் கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளுமே எங்களுக்குத் தேவை. அவை சாத்தியமென்றால், இந்த வேலையே உயரத்தைத் தேடித் தரும். தனியாக அதைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை” என்கிறார்கள் இந்த விவசாய விஞ்ஞானிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x