Published : 14 Oct 2013 02:22 PM
Last Updated : 14 Oct 2013 02:22 PM
இன்று என்ன சமையல் என்பதைவிட இன்று அலுவலகத்துக்கு என்ன உடை அணிந்து செல்வது என்பதற்குத்தான் அதிக நேரம் செலவாகும். அதைத் தவிர்க்க இதோ சில குறிப்புகள். இவற்றைப் பின்பற்றினாலே போதும், உங்கள் அலுவலகத்தில் நீங்கள்தான் ஃபேஷன் ஐகான்.
பெண்மையின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத் தவறியும் மறந்துவிடக் கூடாது. நேர்த்தியான ஆடை அலங்காரம்தான் அலுவலகத்தில் உங்கள் மதிப்பை அதிகரிக்கும், தேவையில்லாத தொல்லைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
நீங்கள் அணிந்திருக்கும் உடைதான் உங்கள் மீதான மதிப்பீட்டை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதால் உடை விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதா என்பதும் முக்கியம். உங்களுக்குப் பொருந்தாத உடையை அணிந்துவிட்டு, நாள் முழுக்க அதிலேயே கவனம் இருந்தால் அலுவலக வேலைகளில் நிச்சயம் தொய்வு ஏற்படும். அதனால் எந்த உடையில் நீங்கள் மிக சௌகரியமாக உணர்கிறீர்களோ அதையே அணியுங்கள்.
கச்சிதமாக உடையணிவது தவறில்லை. ஆனால் அதற்காக மிக இறுக்கமாக ஆடையணிவது தவறு. அதேபோல தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணிவதும் தவறு. உங்களுக்குப் பொருத்தமான, சுத்தமான, அயர்ன் செய்யப்பட்ட ஆடைகளை அணியுங்கள். கலைந்த தலையும் சுருக்கம் நிறைந்த ஆடையுமாக அலுவலகத்துக்குள் நுழைந்தால் சக ஊழியர்களின் கேலிக்கு ஆளாக நேரிடலாம்.
அலுவலகச் சூழலுக்கு உகந்த ஆடைகளை அணிவது அவசியம். எப்போதும் ஃபார்மல் மற்றும் செமி ஃபார்மல் ஆடைகளையே தேந்தெடுத்து அணியுங்கள். சாஃப்ட்வேர், பீ.பி.ஓ மற்றும் மீடியா துறைகளில் இருக்கிறவர்கள் பேண்ட்-ஷர்ட் மற்றும் பேண்ட்-சூட்டை அணியலாம். கழுத்தைச் சுற்றி சில்க் ஸ்கார்ஃப் அல்லது ஸ்டோல் அணியலாம். அதேபோல ஃபார்மல் ஸ்கர்ட்-ஷர்ட் மற்றும் காட்டன் புடவையும் கண்ணியமான இமேஜைத் தரும். மற்றவர்கள் சல்வார் அல்லது சுரிதார் அணிந்து செல்லலாம். உங்கள் அலுவலகம் அனுமதித்தால் வீன் எண்ட்களில் ஜீன்ஸ்-டாப் அணியலாம்.
அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றபடி சிம்பிளாக ஆக்ஸசரீஸ் அணிய வேண்டும். சின்ன பிரேஸ்லெட் மற்றும் மெல்லிய மோதிரம் உங்கள் கம்பீரத்தைக் கூட்டிக் காட்டலாம். பகட்டாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கைகளில் டஜன் கணக்கில் வளையல்களை அடுக்குவதும், காது அறுந்துவிடும் அளவுக்கு மெகா சைஸ் கம்மலை அணிவதும் கூடாது. அதிக சத்தம் வராத கொலுசு அணியலாம். கொலுசு மற்றும் வளையல்களில் இருந்து எழும் சத்தம் பிறரது கவனத்தை ஈர்க்காத வண்ணம் இருக்க வேண்டும். கழுத்தையொட்டி மெல்லிய செயினும் விரும்பினால் அதில் சிறிய டாலரும் கோர்த்து அணியலாம். நகைகள் அணிந்து செல்ல வேண்டியது முக்கியம் என்றால் முத்துக்கள் பதித்த மாலையை அணியலாம். இது எந்தவித ஆடைக்கும் பொருந்திப் போவதுடன் உங்கள் தோற்றத்தையும் உயர்த்திக் காட்டும்.
பெரிய அளவிலான ஹேண்ட் பேகை விட உங்கள் பொருட்களை வைக்கப் போதுமான அளவில் இருக்கும் சின்ன ஹேண்ட் பேக் நல்லது. அதேபோல மணிகள் கோர்க்கப்பட்ட ஃபேன்ஸி ஹேண்ட் பேக்குகளைத் தவிர்க்க வேண்டும்.
சோர்வு தரும் வெளிர் நிறங்ளைத் தவிர்ப்பது நல்லது. அதற்காக கண்ணை குருடாக்கும் பளீர் நிறங்களுக்கும் ஆதரவு தரக்கூடாது. உங்களை பெப்பியாக காட்டும் பிங்க் மற்றும் மஞ்சள் நிறங்களையும் தவிர்க்க வேண்டும். கறுப்பு, வெள்ளை, கிரே, நேவி போன்ற நிறங்கள் நல்லது.
எளிமையான சிகையலங்காரம் உங்கள் மதிப்பைக் கூட்டும். நீளமான கூந்தல் இருந்தால் சாதாரண பின்னலே போதுமானது. இல்லையெனில் வெறுமனே ரப்பர் பேண்ட் மட்டும் அணியலாம். இன்ச் கணக்கில் மேக் அப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஹேர் ஸ்பிரே மற்றும் பெர்ஃபியூம் வகையறாக்களையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மெல்லிய நறுமணம் தரும் பெர்ஃபியூம் போடுவதும் தனி ஸ்டைல்!
ஆடையும் அலங்காரமும் எப்படி உங்கள் இமேஜை முன்னிருத்துகிறதோ அதேபோல உங்கள் சுத்தமும் உங்களின் மதிப்பீட்டை மாற்றும். சுத்தமான நக பராமரிப்பு, அலைபாயாத கூந்தல், மூக்கை உறுத்தாத பாடி ஸ்பிரே போன்றவையும் உங்கள் மீதான பிறர் பார்வையை மாற்றும். உங்கள் வயதும் அதற்கேற்ப நீங்கள் அணிகிற உடையும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போக வேண்டும், கவனம் தேவை.
இப்போது புரிகிறதா? ஆள் பாதி, ஆடை பாதியை எப்படி செயல்படுத்துவது என்று!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT