Published : 16 Apr 2017 01:14 PM
Last Updated : 16 Apr 2017 01:14 PM
அந்த வசந்த காலத்தில் எந்தப் பறவையின் கீதமும் கேட்கவில்லை. என்னவாயிற்று? வலசை சென்றுவிட்டனவா? அதற்கான காலம் இது இல்லையே! அல்லது பூமியை விட்டே மறைந்துவிட்டனவா? அப்படியாகத்தான் இருக்க வேண்டும். மனிதச் செயல்களால், மரங்களும் நதிகளும் மலர்களும் மலைகளும் மண்ணும் மனங்களும் மாசடைந்து, மரத்துப் போய்விட்டன. சின்னப் புழுவுக்கும்கூட இடம் தராத அளவுக்கு மனிதர்களின் பேராசை, உலகைக் குறுக்கிக்கொண்டே வருகிறது. இப்படியான நிலையில், இனி இங்கு வாழ்வதில் அர்த்தமில்லை என்று அந்த இறகு தேவதைகள் நினைத்திருக்கும். அதனால்தான் நம்மை விட்டு, வானத்துக்கே சென்றுவிட்டன.
அமெரிக்காவில் அப்படியொரு காலம் இருந்தது. அறுபதுகளில் வளர்ந்துவந்த மக்கள்தொகைக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சியும் வேகமடைந்தது. அந்த வளர்ச்சியைக் கொண்டு விவசாயத்தைப் பெருக்கவும் நிர்பந்தங்கள் ஏற்பட்டன. அதனால் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளும் களைக்கொல்லிகளும் விற்பனை செய்யப்பட்டன. விளைவு, மண் மலடானது; விதைகள் உயிரற்றுப் போயின; நீர் நஞ்சானது. ‘விவசாயிகளின் நண்பன்’ என்று கருதப்பட்ட புழுக்கள் மாண்டன. அந்தப் புழுக்களை உணவாகக் கொண்ட பறவைகளும் இறந்தன. இதனால் அந்த வசந்த காலத்தில் ராபின் பறவைகள் பாடவில்லை. பறவைகள் இல்லாத உலகில் மனிதன் எப்படி வாழ முடியும்? இந்த ஆபத்தைப் பற்றி முதன்முதலில் குரல் எழுப்பியவர் ரேச்சல் கார்சன். மவுன வசந்தத்தின் முதல் குரலாக அவரது எழுத்து அமைந்தது.
வாழ்வும் பணியும்
1907-ம் ஆண்டு மே 27-ம் தேதி அமெரிக்காவில் பிறந்தவர் ரேச்சல் கார்சன். நினைவு தெரிந்த நாள் முதல் கல்லூரியில் சேரும் வரை, தன்னை ஓர் எழுத்தாளராக இந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இயற்கை, அவருக்கு வேறு விதமான திட்டங்களை வைத்திருந்தது. இயல்பிலேயே மரம், செடி, கொடிகள், புழுக்கள், பறவைகள் மீது ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார். இயற்கையை அதன் ஒவ்வோர் அணுவிலும் ரசித்துப் பார்ப்பவராகவும், அதன் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்தார்.
இதனால், கல்லூரியில் இலக்கியத் துறையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, உயிரியல் துறையில் சேர்ந்தார். கடல்சார் விஞ்ஞானியாக அடையாளம் பெற்றார். அறிவியல் துறையில் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த அந்தக் காலத்தில் ஒரு பெண், அதுவும் ஆண்களே தேர்வு செய்ய யோசிக்கும் கடல்சார் துறையில், விஞ்ஞானியாகப் பட்டம் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
விஞ்ஞானியாகப் பணியாற்றினாலும், அவருக்குள்ளிருந்த எழுத்தார்வம், அவரைவிட்டு மறைந்துவிடவில்லை. 1941-ம் ஆண்டு ‘அண்டர் தி ஸீ விண்ட்’ எனும் அவரது முதல் புத்தகம் வெளியானது. பத்து வருடங்கள் கழித்து 1951-ம் ஆண்டு வெளியான ‘தி ஸீ அரெளண்ட் அஸ்’ என்ற அவரது இரண்டாவது புத்தகம், மிகச் சிறந்த அறிவியல் எழுத்தாளராக உலகுக்கு அவரை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து ‘தி எட்ஜ் ஆஃப் தி ஸீ’ என்ற மூன்றாவது புத்தகம் வெளியானது. அந்தப் புத்தகம் கடலின் வாழ்க்கை வரலாறாகக் கருதப்படுகிறது. அந்த அளவுக்குக் கடலின் தன்மைகள் குறித்தும், அதில் உள்ள உயிர்கள் குறித்தும் ஆழமாக, அறிவியல் துறை சாராதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருந்தார்.
கவித்துவமான நடையும் துல்லியமான அறிவியல் தகவல்களும் கொண்ட அவரது படைப்புகள் ‘தேசிய புத்தக விருது’, ‘ஜான் பர்ரோ பதக்கம்’, ‘நியுயார்க் உயிரியல் கழகத்தின் தங்கப் பதக்கம்’ உள்ளிட்ட பல விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்தன.
கடைசி புத்தகம்… முதல் பதிவு
சுற்றுச்சூழல் குறித்து மிக ஆழமாகப் பேசிய, சாதாரண மக்களிடமும் ரசாயனங்களின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல் புத்தகமாக இன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் போற்றப்படும் ‘சைலன்ட் ஸ்பிரிங்’ (மவுன வசந்தம்) எனும் புத்தகம் ரேச்சல் கார்சன் எழுதிய கடைசிப் புத்தகம். பூச்சிக்கொல்லிகளில் பெருமளவு பயன்படுத்தப்படும் டீ.டீ.டி. (டைக்ளோரோ டைஃபினைல் டிரைக்ளோரோ ஈத்தேன்) எனும் ரசாயனத்தைப் பற்றி மிக விரிவாகப் பேசிய முதல் புத்தகம் இது.
இந்த ரசாயனம் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், இந்த ரசாயனத்தைப் பயன்படுத்தாமல் பயிர்களைத் தாக்கும் ஒரு பூச்சியினத்தை, வேறு பூச்சியினத்தைக் கொண்டு அழிப்பது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்தும் ரேச்சல் கார்சன் விவாதித்திருந்தார். இந்தப் பூச்சிக்கொல்லிகள் பறவைகளை, மனிதர்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை வரலாற்றுப் பதிவுகளிலிருந்தும், சமகாலத்தில் இதர நாடுகளில் மேற்கொள்ளப்படும் முறைகளை உதாரணங்களாக எடுத்துக்காட்டியும் விளக்கியிருந்தார். அமெரிக்காவின் அணுசக்தி சோதனைகளிலிருந்து வெளியாகும் கதிரியக்கத்தன்மை கொண்ட ரசாயனத்தைப் பற்றித்தான் இந்தப் புத்தகத்தில் முதன்மையாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புத்தகம் ‘மவுன வசந்தம்’ எனும் தலைப்பில் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
ஆணாதிக்கமும் இயற்கையும்
இந்தப் புத்தகம் வெளியான உடனேயே அரசு அதிகாரிகளிடமிருந்தும் பூச்சிக்கொல்லித் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்தும் பல எதிர்ப்புகள் வந்தன. புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்குகள் தொடரப்பட்டன. கொலை மிரட்டல்கள் வந்தன. அவர் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தால், அவரின் நடத்தை குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் ரேச்சல் கார்சன் எதற்குமே அசைந்துகொடுக்கவில்லை.
ஆண் விஞ்ஞானிகளே ரேச்சலை மிகக் கடுமையாக விமர்சித்தார்கள். ‘இயற்கை எனும் பெண் மீது ஒரு ஆண் எப்படி தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்’ என்று அவர் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த வகையில், ‘சூழலியல் பெண்ணியம்’ குறித்துப் பேசிய முதல் நபராக ரேச்சல் கார்சன் திகழ்கிறார். அவரின் கடைசிப் புத்தகமான ‘மவுன வசந்தம்’, சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய முதன்மையான ஆவணமாக இப்போதும் போற்றப்படுகிறது. இந்தப் புத்தகமே அமெரிக்காவிலும் பிறகு உலகெங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
தன் வாழ்நாள் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பணியாற்றிய அவர், புற்றுநோய் காரணமாகத் தன் 56-வது வயதில் இறந்தார். சுற்றுச்சூழல் எழுத்து அல்லது பசுமை இலக்கியம் என்ற துறைக்கு வித்திட்ட பெருமை எக்காலத்திலும் அவரது பெயரை உச்சரிக்க வைத்துக்கொண்டிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT