Last Updated : 31 Jul, 2016 11:05 AM

 

Published : 31 Jul 2016 11:05 AM
Last Updated : 31 Jul 2016 11:05 AM

எங்க ஊரு வாசம்: குழந்தைகளைக் காத்த மலையன் தாலி!

கல்யாணம் பேசி முடித்தாகிவிட்டது. இனி தாலி செய்ய வேண்டும். ஐந்தாறு கல்யாணங்கள் சேர்ந்து நடப்பதால் நகைசெய்யும் ஆசாரியை ஊருக்குள்ளேயே வரவழைத்துவிடுவார்கள். தாலி செய்யும் அன்று அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து, குலவையிட்டு, சாமி கும்பிட்டு ஊரெல்லாம் அந்தப் பொங்கலை வெற்றிலை பாக்குடன் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவார்கள். மாப்பிள்ளைகளைன் தங்கைகள் அதாவது மணப்பெண்ணின் நாத்தனார்தான் தாலி செய்ய வேண்டுமென்பதால் அவர்களுக்குச் சிறப்பு அழைப்பிதழ் உண்டு.

நாத்தனார் உரிமை!

இந்த நாத்தனார்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பெரிய தாம்பாளத்தில் நிறைய நெல், கருப்பட்டி, தேங்காய், பூ ஆகியவற்றை வைப்பார்கள். அவற்றின் மேல் தாலிக்குண்டான பணத்தையும் வைத்து ஊர் அம்மன் கோயில் மஞ்சள் காப்புடன் கொண்டுபோய் தாலிசெய்ய வந்திருக்கும் ஆசாரியை வணங்கி, அவரிடம் கொடுத்துவிட்டு வருவார்கள். சில வசதியான பெண் வீட்டார், நாத்தனார்கள் தாலி செய்யும்போது இவர்கள் தங்கள் பங்குக்கு, ‘சிறகு, பொன்கட்டி’ என்று செய்யச் சொல்வார்கள். கல்யாணத்தின்போது தாலியை மட்டும் மஞ்சள் கயிற்றில் முடிந்து கட்டுவார்கள். பிறகு சிறிய மறுவீடு, பெரிய மறுவீடு என்று இரண்டு மறுவீடு வைப்பார்கள்.

மறுவீட்டு விருந்து

சிறிய மறுவீடு என்பது கல்யாணமான மூன்றாவது நாள் மாப்பிள்ளை வீட்டுக்குக் கூட்டிபோய் பால், பழங்கள் சாப்பிட்டுவிட்டு அப்போதே திரும்பி பெண் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். பெரிய மறுவீடு என்பது மாப்பிள்ளை மூன்று மாதம் வரையிலும் பெண் வீட்டில் விருந்து சாப்பிட்டு முடித்தபின் ஊருக்கெல்லாம் விருந்துவைத்து பண்டம், பலகாரங்களோடு ஊர்கூடிப் பெண்ணைக் கொண்டுபோய் மாப்பிள்ளை விட்டில் விட்டுவிட்டு வருவார்கள். அப்போதுதான் மறுதாலி என்று இந்தத் தாலியோடு ‘சிறகு, பொன்கட்டி’ ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி, பெண்ணின் கழுத்தில் போடுவார்கள். இவற்றைச் செய்ய வசதியில்லாதவர்கள் அடுத்தவர்களிடம் இரவல் வாங்கி, புதுப்பெண்ணின் கழுத்தில் கட்டிவிட்டு வருவார்கள். மூன்று மாதம் கழித்து இரவல் நகையைக் கொடுத்துவிட வேண்டும்.

நகை செய்ய வரும் ஆசாரிக்கு அவருக்கான தேவைகளைக் கவனிப்பதோடு கல்யாண வீட்டுக்காரர்களின் வீடுகளில் விருந்து சாப்பாடும் உண்டு. அதோடு அவ்வப்போது பால், மோர், பானகம் ஆகியவற்றைக் கொடுப்பார்கள்.

இந்தத் தாலி செய்யும் வேலையோடு, ‘மலையன் தாலி’ செய்யும் வேலையும் உண்டு. அந்தக் காலத்தில் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள் போர் என்று வரும்போது கிராமங்களைச் சூறையாடுவதோடு கன்னிப் பெண்களிலிருந்து பத்து வயதுப் பெண் பிள்ளைகளைக்கூட தூக்கிக்கொண்டு போய்விடுவார்களாம். அப்படிப்பட்டவர்கள் பிறர் மனைவிகளை, அதாவது கழுத்தில் தாலி அணிந்திருக்கும் பெண்களை மட்டும் தங்கள் விரலால்கூடத் தொடுவதில்லையாம்.

அவர்களின் இந்தச் செய்கையைத் தெரிந்துகொண்ட இந்தக் கிராமத்துக்காரர்கள் இந்த ‘மலையன் தாலி’யைச் செய்து ஐந்து வயதுப் பெண் குழந்தைகளின் கழுத்தில் போட்டு விடுவார்கள். அதற்குப் பெரிதாகச் செலவாகாது. சிறி சிறு தகரங்களைத் தாலி வடிவில் செய்து அதில் சிறு துளையிட்டு அதில் கயிற்றைக் கோர்த்து விடுவார்கள். ‘மலையன்’ என்பது கிருஷ்ணனுக்கான மறு பெயர். கிருஷ்ணன் யாதவர்களின் குல தெய்வம். அதனால் எல்லப் பெண்களும் அவருக்கு உரிமையானவர்கள் என்ற அர்த்தத்தில்தான் இந்தத் தாலியைச் சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்குப் போட்டுவிடுவார்கள். இந்தத் தாலியை அந்தப் பெண்களின் கல்யாணத்தின்போதுதான் கழற்றுவார்கள். அதுவரை இந்த ‘மலையன் தாலி’ பெண்களைப் பாதுகாக்கும் கருவியாக இருந்தது.

வீடு நிறைய குழந்தைகள்

ஒவ்வொரு வீட்டிலும் ஏழு, எட்டு என்று வதவதவென்று அண்டியும் சவலையுமாக நிறைய குழந்தைகள் இருந்ததால் அதிலும் எத்தனை ஆண், பெண் என்று பெற்றோரே சில சமயம் குழம்பி விடுவார்கள். காரணம் அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்ததால் சின்னம்மா, அத்தை, பாட்டி என்று நிறையப் பெரியவர்கள், நூறு வயது கொண்டவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் திடகாத்திரமாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாகத் திருமணம் ஆனவர்களின் குழந்தைகளைப் பெற்றவள் மூன்று அல்லது நான்கு மாதம் வரைதான் தன் மடியில் வைத்துப் பால் கொடுத்துப் பராமரிப்பாள். பிறகு பெரியவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டுக் காட்டு வேலைக்குப் புறப்பட்டுவிடுவாள். அப்படிப் போகும்போது பெரிய, பெரிய செறட்டைகள் நிறைய தங்களின் பாலைக் கறந்து அதில் அந்த ஆண்டு விளைந்துவந்த புதுப் பச்சை நெல்லைக் கொஞ்சம் போட்டுவிட்டுப் போவார்கள். இதனால் மதியம்வரை பால் கெடாது. அந்தப் பாலைப் புகட்டித்தான் குழந்தைகளைப் பெரியவர்கள் வளர்ப்பார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிய பிறகு இந்த மலையன் தாலியைச் செய்வார்கள்!

பாரததேவி,கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: arunskr@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x