Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM
அசுர வாத்தியமான நாதஸ்வரத்தைக் கையாள்வது மாபெரும் கலை. இந்தக் கலையை கைவரப்பெற்று பிரகாசித்த பெண்மணி, நம் தலைமுறையில் மதுரை பொன்னுத்தாய். ஷேக் சின்ன மௌலானாவின் பெயர்த்தி சுபாணி காலிஷா உள்பட இன்றைக்கு நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த வரிசையில் பிரகாசித்துக்கொண்டிருக்கும் இளம் நட்சத்திரம், பாகேஸ்வரி பாலகணேசன்.
ஏழு வயதிலேயே நாதஸ்வரப் பயிற்சியை தன்னுடைய தந்தையிடம் தொடங்கியவர். இவரின் தந்தை பிரபல நாதஸ்வர வித்வான் சர்மா நகர் பி.வி.என். தேவராஜ். பத்து வயதிலேயே அரங்கேற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார் பாகேஸ்வரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
நாதஸ்வர கலைச்சுடர், வலையப்பட்டி நாதாலயா அறக்கட்டளையின் நாதஸ்வர காஷ்யப் விருது, டி.கே. சண்முகம் விருது, பாரதி விருது, காயிதே மில்லத் விருது, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை விருது, நாதஸ்வர இசைவாணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருப்பவர்.
பெண்களை நாதஸ்வரம் வாசிப்பதற்கு அனுமதிப்பது அரிய செயல். பிறந்த வீடும் புகுந்த வீடும் பாகேஸ்வரியின் கலையார்வத்துக்குத் தூண்டுகோலாக இருப்பது, இவருடைய திறமைக்கும் ஆர்வத்துக்கும் சான்று.
கணவருடன் இரட்டை நாயனம்
பாகேஸ்வரி கரம் பிடித்திருக்கும் பாலகணேசன், திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்வான் கலைமாமணி டி.ஆர்.பிச்சாண்டியின் மகன். இசைப் பேரறிஞர் மதுரை பொன்னுசாமிப் பிள்ளையின் மாணவன்.
திருவண்ணாமலைக்கு முன்னாள் குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் வந்திருந்தபோது,ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் இவர்களிடம், பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகளில் ஒன்றான எந்தரோ மகானுபாவரு... வாசிக்கச்சொல்லிக் கேட்டிருக்கிறார். அப்போது கணவருடன் சேர்ந்து இரட்டை நாயனமாக வாசித்ததைப் பெரும் பேறாக நினைக்கிறார் பாகேஸ்வரி.
தான் கற்ற நாதஸ்வரத்தை சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுக்கும் அரிய பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் பாகேஸ்வரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT