Last Updated : 16 Apr, 2017 01:14 PM

 

Published : 16 Apr 2017 01:14 PM
Last Updated : 16 Apr 2017 01:14 PM

கண்ணீரும் புன்னகையும்: பிரசவ நலனும் அடிப்படை உரிமையே

பிரசவத்துக்கு முன்னரும் பின்னரும் பெண்களின் மருத்துவ நல உரிமை பாதுகாக்கப்படுவதற்கான நீதிமன்றத் தீர்ப்பை வாங்கித் தந்த ஜைதுன் மார்ச் 17-ம் தேதி காலமானார். ஜைதுனின் மகள் பாத்திமா கர்ப்பமாக இருந்தபோது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான அட்டையை வைத்திராததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் தெருவோர மரத்தடியில் மருத்துவர்களின் உதவியின்றி பிரசவிக்க நேர்ந்தது. இந்த அவலத்துக்கு எதிராக பாத்திமாவின் தாய் ஜைதுன் புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் ஹியூமன் ரைட்ஸ் லா நெட்வொர்க் அமைப்பின் உதவியுடன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக எண்ணற்றை போராட்டங்களைச் சந்தித்த பின்னர், பிரசவ மருத்துவ நலன் என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் அளித்தது. அந்தச் சமயத்தில் பிரசவ சமயத்தில் தாய்மார்கள் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் இறக்கும் சூழந்திலை இருந்தது. தற்போது அது 45 ஆயிரமாக குறைந்துள்ளது. ஜைதுன் என்ற வறிய பெண்மணி அதிகாரத்தை எதிர்த்து போராடிப் பெற்ற தீர்ப்புதான் இன்றும் பெண்களின் பிரசவ நலன் சார்ந்த உரிமைகளைக் கோருவதற்கான முன்னுதாரணமாக இன்றும் விளங்குகிறது.

திருநங்கை நடித்த விளம்பரம்

திருநங்கைகளை யதார்த்தமாகவும் மனிதாபிமானத்துடனும் அணுகும் புதிய விக்ஸ் விளம்பரம் பலரையும் கவர்ந்துள்ளது. எய்ட்ஸ் நோயால் தாயை இழந்த பெண் குழந்தை கவுரியைத் தத்தெடுத்த ஒரு திருநங்கையின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட விளம்பரம் இது. ஆறு வயதில் தாயைப் பறிகொடுத்த கதையைப் பேருந்துப் பயணத்தில் விவரிக்கத் தொடங்குகிறாள் கவுரி.

புதிய தாயாக வந்து தத்தெடுத்தவரைப் பற்றி பேசுகிறார். கடைசியில் அவர்தான் திருநங்கை காயத்ரி என்று தெரிகிறது. ஒரு அம்மாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பும் நெகிழ்வான சம்பவங்களும் இந்த விளம்பரத்தில் காண்பிக்கப்படுகின்றன. கவுரி, தன் அம்மாவைப் போன்றவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர் ஆவேன் என்று சொல்வதுடன் விளம்பரம் முடிகிறது. எல்லாருக்கும் இப்படியான அனுசரனையும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன.

தேசிய விருதுபெற்ற ஆதிவாசி இயக்குநர்

ஒடிஷாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் லிபிகா சிங் தராய்க்கு அவர் எடுத்த 20 நிமிடப் படமான ‘தி வாட்டர் பால்’க்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இவர் பரிபாடா பிராந்தியத்தைச் சேர்ந்த ஹோ பழங்குடி இனத்தவர். நகரப்புறத்துக் குழந்தை ஒன்று, கந்தாதர் அருவி பற்றிக் கேள்விப்பட்டு தனது பூர்விக ஊருக்கு வருகிறது. பருவநிலை மாறுதல்கள் அந்தப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைக் கண்டுணர்கிறது. லிபிகா சிங் தராய் பெறும் நான்காவது தேசிய விருது இது. ஒடிஷா மாநிலத்தில் இன்னும் நிலவும் செய்வினை, மூடநம்பிக்கைகள் தொடர்பான நடைமுறைகளைப் பற்றி இவர் எடுத்த 53 நிமிட ஆவணப்படமான ‘சம் ஸ்டோரிஸ் அரவுண்ட் விட்ச்சஸ்’ மிகவும் புகழ்பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x