Published : 26 Feb 2017 11:35 AM
Last Updated : 26 Feb 2017 11:35 AM

முகங்கள்: இது ரசூல் பீமா சபதம்!

அழியும் நிலையில் இருக்கும் பாரம்பரிய கோழி இனத்தைக் காப்பேன் என்று சபதம் எடுத்திருக்கிறார் ரசூல் பீமா. இவர் செயல்படுத்திவரும் கோழி வளர்ப்பு நுட்பங்களையும் ஈடுபாட்டையும் பார்க்கும்போது விரைவில் சபதத்தை நிறைவேற்றிவிடுவார் என்று நம்பிக்கை வருகிறது.

“நாங்க ரொம்ப வருஷமா திருநெல்வேலி டவுன் பகுதியிலதான் இருக்கோம். நான் பிளஸ் டூ வரை படிச்சிருக்கேன். என் கணவர் சொந்தமா மிட்டாய் கம்பெனி நடத்திட்டு இருந்தார். நஷ்டம் ஏற்பட்டதால அந்தத் தொழிலை விட்டுட்டு, வேற வேலைக்குப் போனார். அப்போ வீட்ல கொஞ்சம் பணக் கஷ்டம். குடும்பம் நிமிர நானும் ஏதாவது செய்யலாமேன்னு தோணுச்சு. எங்க தாத்தா வீட்ல சின்ன இடத்துல கோழி வளர்த்ததைப் பார்த்திருக்கிறேன். அதனால நானும் கோழி வளர்க்க முடிவுசெஞ்சேன்” என்று சொல்கிறார் ரசூல் பீமா.

ஆரம்பத்தில் தனக்குக் கோழி வளர்ப்புக் குறித்து எதுவும் தெரியாது என்று சொல்லும் இவர், நோயின் தாக்கத்தால் ஏராளமான கோழிகளைக் காவு கொடுக்க நேரிட்டது என்று வருத்தத்துடன் சொல்கிறார்.

“அதிலும் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு ஏராளமான கோழிகள் இறந்தன. பெரிய நஷ்டம் ஏற்பட்டுச்சு. அதனால எங்க வீட்ல இருக்கறவங்க, கோழி வளர்ப்பை மூட்டை கட்டிப் போனச் சொன்னாங்க. ஆனா எப்படியாவது கோழி வளர்த்து சாதிக்கணும்னு நான் விடாப்பிடியா நின்னேன்” என்று சொல்லும் ரசூல் பீமா, அதன் பிறகு முறைப்படி கோழி ஈடுபட முடிவெடுத்து, அதைச் செயல்படுத்தினார்.

ராமையன்பட்டியிலுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார். கோழி வளர்ப்பு குறித்த அத்தனை அம்சங்களையும் ஒருமாத இலவசப் பயிற்சியில் கற்றுக்கொண்டார். கோழிப் பண்ணைகளுக்குச் சென்று பண்ணையாளர்களின் கோழி வளர்ப்பு அனுபவங்களைத் தெரிந்துகொண்டார்.

அந்த அனுபவங்களின் உதவியுடன் வீட்டிலுள்ள சிறிய இடத்தில் தற்போது கோழிகளை வளர்த்து, வருமானம் ஈட்டிவருகிறார் ரசூல் பீமா.

“பயிற்சி மூலமாகத்தான் கோழிகளைப் பராமரிப்பதும் இரை தயாரிப்பதும் நேர்த்தியாகச் செய்யமுடியுது. இதனால் கோழிகள் நோயால் இறப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. கோழிக் குஞ்சுகளைப் பாதுகாப்பதும் பிரத்யேகமாக இரை தயாரிப்பதும் கொஞ்சம் சிரமமான வேலைதான். கலப்பின கோழிகள், தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகள் போன்றவற்றைவிட பாரம்பரிய நாட்டுக் கோழிகளை உருவாக்கி, நல்ல விலைக்கு விற்பனை செய்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. பல இடங்களில் அலைந்து திரிந்து பாரம்பரிய நாட்டுக் கோழி முட்டைகளை வாங்கி வந்து, அடை காக்க வைத்து, நாட்டுக் கோழிகளை உருவாக்கிவருகிறேன். வருமானம் மட்டுமே முக்கியமில்லை, பாரம்பரிய நாட்டுக் கோழி இனத்தை அழியாமல் காப்பதுதான் முக்கியம்” என்கிறார் ரசூல் பீமா.

நாட்டுக் கோழிகளுக்குத்தான் அடைகாக்கும் தன்மை இருக்கிறது. ஆண்டுக்கு 100 முட்டைகள்வரை நாட்டுக் கோழிகள் மூலம் பெறமுடியும். கலப்பினக் கோழிகளில் ஆண்டு முழுவதும் முட்டைகளைப் பெறலாம். ஆனால் அவற்றை அடை காக்க வைக்க முடியாது.

“நாட்டுக் கோழி இனங்களை அழியவிடக் கூடாது. அவற்றைக் காட்சிப் பொருளாக மாற்றிவிடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கும் இந்தக் கோழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும். நான் பெரிய அளவில் பண்ணை அமைக்கவில்லை. எதிர்காலத்தில் அப்படி அமைக்கும் திட்டம் இருக்கு. இப்போ இறைச்சிக்காக நாட்டுக் கோழிகளையும் முட்டைகளையும் நிறையப் பேர் எங்க வீட்டுக்கே வந்து வாங்கிட்டுப் போறாங்க. இதனால ஓரளவுக்கு வருமானம் கிடைக்குது. உழைத்துச் சாப்பிடுவதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. என் பிள்ளைகளுக்கும் இந்தத் தொழிலைக் கற்றுத் தருவேன்” என்கிறார் ரசூல் பீமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x