Published : 11 Jun 2017 03:02 PM
Last Updated : 11 Jun 2017 03:02 PM

பெண் அரசியல் 8: அனைவரையும் வியக்கவைத்த மேற்கு வங்கம்!

பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து முதல் முறையாகக் கொல்கத்தா செல்லும் வாய்ப்பு 1990-ல் கிடைத்தது. மூன்றாவது அகில இந்தியப் பெண்கள் மாநாட்டுக்கான பயணம் அது. செயல்பாட்டாளர் மைதிலி சிவராமன், பேராசிரியர் சந்திரா இருவரும் தமிழகப் பிரதிநிதிகளின் குழுவுக்குத் தலைமை வகித்து எங்களோடு வந்திருந்தார்கள்.

இந்தியாவின் பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய, அவற்றில் எந்த மொழியில் பேசினாலும் அதை அப்படியே மொழிபெயர்க்கும் திறமைமிக்க பெண்களை அங்கே பார்த்தோம். பல மாநிலங்களில் நிலவிய ஆணாதிக்கம், மூடநம்பிக்கை, பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கும் அந்த மாநாடு வாய்ப்பளித்தது.

தொண்டரே அமைச்சர்!

நாங்கள் தங்கியிருந்த பகுதியில் எங்களுக்கு உதவி செய்வதற்காகச் சில பெண் தன்னார்வலர்களை மாநாடு நியமித்திருந்தது. சோப்பு, பற்பசை, மருந்து போன்றவற்றை வாங்கிவரும் பணியையும் எங்களை உரிய நேரத்தில் மாநாட்டு அரங்கிற்குள் அழைத்துச் செல்லும் பணியையும் அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அவர்களில் இளையவராக இருந்த ஒரு பெண்ணிடம் மட்டும் வேலைகளை ஏவிக்கொண்டிருந்தோம்.

மாநாட்டின் இறுதி நாளன்று தன்னார்வலர்களை மேடையில் அறிமுகப்படுத்திய வரிசையில் அந்த இளம்பெண்ணும் இடம்பெற்றிருந்தார். அதுவரை அவரைத் தொண்டராக அறிந்திருந்த நாங்கள் அவர் அந்த மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் என்ற அறிவிப்பைக் கேட்ட பிறகு மயங்கி விழாத குறையாக அதிர்ந்துபோய் நின்றோம். அமைச்சருக்கு உரிய எந்த ஆடம்பரமும் இன்றி அத்தனை எளிமையாகவும் இயல்புடனும் அவர் இருந்தார்.

அமைச்சர் என்றாலே ‘தானைத் தலைவரா’கவே இருப்பார் என்று அறிந்து பழக்கப்பட்டுப்போன எங்களுக்கு, ‘வாலண்டியர்’ என்ற அடையாள அட்டையை கழுத்தில் அணிந்துகொண்டு தொண்டராக வலம்வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தபோது வியப்பு ஏற்படத்தானே செய்யும்! இந்தச் சம்பவம்தான் இடது முன்னணி அரசின் மீதான கவனத்தை ஈர்த்தது.

தமிழகத்தின் அரசியல் கலாச் சாரத்துக்கும் மேற்குவங்கத்துக்குமான இடைவெளியைப் புரிந்துகொள்வதற்கு அந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மேற்குவங்க அரசியல்

தமிழகப் பெண்ணுரிமை முன்னோடியாக முழங்கிய பெரியாரைப் போன்று கணவரை இழந்த பெண்ணை உடன்கட்டையேற்றி கொல்லும் கொடிய பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜாராம்மோகன்ராய், இந்தியாவின் அடிமைத்தளையை ஒழிக்க நம்மிடம் விளங்கும் பெண்ணடிமைத்தனத்தையும் தீண்டாமையும் அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த சுவாமி விவேகானந்தர், எங்கோ ஒரு நாட்டிலே பிறந்து இந்தியா வந்தடைந்து இறுதிமூச்சுவரை சேவையே உயிரென வாழ்ந்த மனிதரில் புனிதர் அன்னை தெரசா இவர்களை உள்ளடக்கிய மேற்குவங்கத்தையும் அங்கே ஆட்சியிலிருந்த இடதுசாரிகளின் அரசியலையும் கவனிப்பதற்கு அந்த மாநாடு பெரும் உந்துசக்தியாக விளங்கியது.

வரலாற்றுப் பெருமைகளை அதன் பாரம்பரியத்தோடு முன்னெடுத்த விடுதலைப் போராட்ட வீரரும் கோடீஸ்வர குடும்பத்தின் செல்வங்களைத் துறந்து தொழிலாளி வர்க்கத்துக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டவருமான ஜோதிபாசுவின் தலைமையில் இடது முன்னணி அரசின் செங்கொடி பறந்தது உலகை வியக்கவைத்தது. 34 ஆண்டுகள் தொடர்ச்சியாகவும் 24 ஆண்டுகள் ஒருவரே முதலமைச்சராகவும் விளங்கிய இடது முன்னணி அரசின் சாதனையை இதுவரை எந்த முதலாளித்துவக் கட்சிகளாலும் முறியடிக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக எந்தவித ஊழல் கறையும் படியாத அப்பழுக்கற்ற ஆட்சிமுறை கம்யூனிச அமைப்புகளின் மீதிருந்த மதிப்பை என் போன்றோரிடம் உயர்த்தவே செய்தது.

இப்படியான நம்பிக்கைகளை உள்ளடக்கிய இடது முன்னணி அரசை ‘தீதி’ என்றழைக்கப்பட்ட எளிமையான பெண் 2011 தேர்தலில் தோற்கடித்தார் என்ற செய்தி நம்புவதற்குக் கடினமான ஒன்றாகவே வந்து சேர்ந்தது.

(முழக்கம் தொடரும்)

கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x