Published : 15 Apr 2017 04:29 PM
Last Updated : 15 Apr 2017 04:29 PM

வாசகர் வாசல்: வட்டத்தை விட்டு வெளியே வாங்க!

என்னைப் போன்று நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, நடுத்தர வயதுப் பெண்களின் ஆசைகள் நிறைவேறுகின்றனவா?

1982-ல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தேன். அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் சென்றவர்கள் என்பதாலும் உள்ளூரில் கல்லூரி இல்லாததாலும் நான் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. வேலைக்குப் போகும்போது அப்பா, “கேட்டைப் பூட்டிட்டு உள்ளேயே இரு, நாங்க வந்த பிறகு திறக்கணும். உனக்கு ஒண்ணும் தெரியாது” என்று தினமும் சொல்வார். ஒருமுறை பெங்களூருவுக்குப் பெரியப்பாவுடன் சென்றபோது, “டிபன் வாங்கிட்டு வரேன். பஸ்ஸை விட்டு இறங்காதே. உனக்கு ஒண்ணும் தெரியாது” என்றார்.

திருமணம் முடிந்து சென்றபோது எல்லோரும், “தேனி பக்கத்திலிருந்து இவ்வளவு தூரம் பெண்ணைக் கொடுத்திருக்கிறோம். அவளுக்கு ஒண்ணும் தெரியாது. பார்த்துக்கோங்க” என்று என் கணவரிடம் சொன்னார்கள்.

தனிக்குடித்தனம் சென்றவுடன் அலுவலகத்துக்குக் கிளம்பிய கணவர், “சென்னை உனக்குப் புதுசு. அக்கம் பக்கம் வீட்டாருடன் எங்கும் போகாதே. உனக்கு ஒண்ணும் தெரியாது” என்றார். இரண்டு குழந்தைகள் பிறந்தன. கணவரின் வேலை நிமித்தமாகப் பல ஊர்களுக்குச் சென்றேன். திருமணமான 1985 முதல் 2010 வரை என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. மெட்ராஸ் சென்னை ஆனது. குழந்தைகள் அமெரிக்காவுக்கும் டெல்லிக்கும் படிக்கப் போனார்கள்.

குழந்தைகள் தொலைவிலிருந்து பேசும்போது, “என்ன செய்றீங்க?” என்று கேட்டால் “சும்மாதான் இருக்கேன்” என்பேன். “எப்படிச் சும்மா இருக்க முடியுது உங்களால்? ஏதாவது கத்துக்கோங்க. படிங்க. உங்களுக்குப் பிடிச்சதைச் செய்யுங்க” என்பார்கள். 46 வயதுக்குப் பிறகு செய்ய என்ன இருக்கிறது என்பேன். கற்றுக்கொள்ள வயது தடையில்லை என்பார்கள்.

சென்னைக்கு வந்த புதிதில் பைக் ஓட்டும் பெண்களைப் பார்த்து பிரமித்தேன். ஒரு ஸ்கூட்டி வாங்கினோம். எனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுக்கும்படி கணவரிடம் கேட்டேன். “சைக்கிள் ஓட்டத் தெரியுமா?” என்றார். நான் இல்லை என்று சொன்னதும் கஷ்டம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். விழுந்தாலும் பரவாயில்லை, புது ஸ்கூட்டி போனாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து, நானே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அண்ணாசாலையில் விழுந்து கால் உடைந்தது. அரை லட்சம் ரூபாய் செலவானது. ஆனாலும் குழந்தைகள் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டினார்கள்.

இப்போது நான் ஸ்கூட்டி ஓட்டாத சாலைகளே இல்லை! கார் டிரைவிங், யோகா, பகவத்கீதை, கைத்தொழில், பத்திரிகைகளுக்கு எழுதுவது என்று ஐம்பது வயதில் எனக்கான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

நான் பெரிய அளவில் சாதிக்கவில்லைதான். ஆனால் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வந்ததும் எனக்கான வாழ்க்கையை எனக்குப் பிடித்த மாதிரி மாற்றிக்கொண்டதால் ஏதோ சாதித்தது போல உணர்கிறேன்.

- எஸ்.மேகலா, சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x