Last Updated : 09 Apr, 2017 08:38 AM

 

Published : 09 Apr 2017 08:38 AM
Last Updated : 09 Apr 2017 08:38 AM

புதிய பகுதி: மாடியில் மூலிகைக் காடு

உலகம் முழுவதும் இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. செயற்கை உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பொருட்களால் ஏற்படுகிற உடல்நலச் சீர்கேட்டை இன்று பலரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இயற்கைச் சாகுபடி முறையில் விளைந்த காய்கறிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதனால் சிலர் வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைத்து, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடுகிறார்கள். தோட்டம் அமைக்க முடியாதவர்கள், மொட்டை மாடியில் மூலிகைச் செடிகளை வளர்க்கலாம்.

மற்ற பயிர்களைப் போல் இல்லாமல் பல மூலிகைச் செடிகளை நம் வீட்டில் இருக்கும் சிறு இடத்தில்கூட வளர்க்கலாம். எந்தவொரு பெரிய கவனிப்பும் இல்லாமல் வளர்ந்து நமக்கு அதிகமான பயன் அளிக்கும் சில மூலிகைச் செடிகளைப் பற்றி ஒவ்வொரு வாரமும் தெரிந்துகொள்வோம்.

தென் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் மிக சுலபமாக வளர்க்கக்கூடிய, அற்புதமான மருத்துவக் குணம் கொண்ட மூலிகைச் செடி கற்பூரவல்லி. இதை ஒரு தொட்டியில் தனியாகவும் மற்ற செடிகளுடன் கலப்புச் செடியாகவும் வளர்க்கலாம்.

முதன்முறையாக வளர்க்க நினைப்ப வர்கள் ஒரு தொட்டியில் 60% தேங்காய்நார்க் கழிவு (cocopith), 20% செம்மண், 20% மக்கிய எரு (காய்ந்த மாட்டுச்சாணம்), 10% மண்புழு உரம்/வீட்டுக் கழிவு உரம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். 100 மி.லி. பஞ்ச காவ்யா, 100 மி.லி. அமிர்தக் கரைசல் இரண்டையும் பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து மேலே சொன்ன கலவையில் ஊற்றி நன்றாகக் கலந்தால் செடி வளர்ப்பதற்கான செறிவூட்டப்பட்ட பயிர்வளர்ப்பு மண் கலவை தயார்.

நாற்று

உங்கள் நண்பர்கள் வீட்டில் கற்பூரவல்லிச் செடி இருந்தால் அவர்களிடமிருந்து பெறலாம். இயற்கை நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனங்களிலும் மூலிகை நாற்றுகள் கிடைக்கும். ஆறு அங்குல அளவுள்ள கற்பூரவல்லிச் செடியைக் கிள்ளி தொட்டியில் இரண்டு அங்குல ஆழத்தில் நட்டு வைத்துத் தண்ணீர் தெளியுங்கள். மூன்று முதல் ஆறு நாட்களில் வேர்பிடித்துவிடும். ஒரு மாதத்தில் நன்றாக வளர்ந்துவிடும்.

கற்பூரவல்லிச் செடியின் இலைகள் நீர்ச்சத்துடன் திடமாக இருக்கும். கற்பூரவல்லி இலைகளில் பஜ்ஜி செய்து கொடுத்தால் குழைந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சளி, தும்மல், கபம் இவற்றுடன் நீர், ஈரம் சார்ந்த நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்.

கற்பூரவல்லிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளின் மார்புச் சளி மட்டுப்படும். களைப்பால் வரும் தலைவலி, பருவ மாற்றத்தால் வரும் சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்கும் கற்பூரவல்லி பலன் தரும். ஆஸ்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கும் நல்ல பலன் கொடுக்கும். கற்பூரவல்லிச் சாற்றுடன் துளசி, நொச்சி வேம்பு ஆகியவற்றின் சாறு கலந்து தரையைத் துடைத்தால் கொசுத் தொல்லை நீங்கும்.

தண்ணீரில் சில துளிகள் கற்பூரவல்லிச் சாறு சேர்த்துக் குளித்தால் உடல் குளுமை பெறும், புத்துணர்வு அதிகரிக்கும். நாள் முழுதும் நல்ல மணம் நீடிக்கும். ஒருமுறை நட்டு வளர்த்தால் நீண்ட நாட்களுக்குப் பலன் கொடுக்கக்கூடியது.

கட்டுரையாளர், இயற்கை வேளாண் ஆர்வலர்.
தொடர்புக்கு: senkumarb2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x