Published : 26 Mar 2017 12:36 PM
Last Updated : 26 Mar 2017 12:36 PM
குற்றம் சாட்டப் பட்டவரை நீதி விசார ணைக்கு உட்படுத்தி, அவரது அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து, முறையான விசாரணைக்குப் பின்னர் தண்டனையளிப்பது வரை காவல் துறையும் நீதித்துறையும் சிறைத்துறையும் ஒவ்வொரு கட்டமாகக் காக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவர் குற்ற வழக்கில் சாட்சியம் மட்டும்தானா? அந்தச் சாட்சிக்குப் பாதுகாப்பு என்ன? பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு என்ன?
வாழ்க்கையே போர்க்களம்
ருக்மணியும் ராணியும் நெருங்கிய தோழிகள். ருக்மணி, தன் தாய்மாமாவைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரது குடிப்பழக்கமும் வன்முறையும் எல்லோருக்கும் தெரியும். ருக்மணிக்கு ஒரு மகள் பிறந்தாள். அளவுக்கதிகமான குடியால் கணவரால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை. அந்தக் கோபம் தினமும் வன்முறையாக வெடித்தது. குழந்தைக்கு இரண்டு வயதானபோது வேலைக்குப் போக ஆரம்பித்தார் ருக்மணி. முதல் தேதியானால் கம்பெனி வாசலில் வந்து பணம் வாங்கிச் செல்வதும் தொழிலாளர்களிடம் கடன் வாங்குவதும் வாங்கிய கடனை ருக்மணியிடம் வசூலிக்கச் சொல்வதும் வாடிக்கையானது.
அடியும் உதையும் ருக்மணிக்குப் பழகிவிட்டன. இப்போதெல்லாம் கணவரைப் பார்த்து ருக்மணி அஞ்சுவதில்லை. கணவர் சந்தேகப்பட ஆரம்பித்தார். இருவரும் பிரிந்துவிட்டனர். ஒருநாள் கம்பெனி வாசலில் வந்து ருக்குமணியைத் தன்னுடன் வாழவருமாறு அழைத்தார். அவர் மறுத்தார். ஆசிட் ஊற்றிவிட்டு ஓடிவிட்டார். ருக்மணிக்கு 18 மாதங்களில் 12 அறுவை சிகிச்சைகள் நடந்தன. ராணிதான் குழந்தையைப் பார்த்துக்கொண்டார். அழகான முகம் விகாரமாகி, கழுத்திலிருந்து காதுவரை தசைகள் இறுகிப் பலவித சங்கடங்களுக்கு ஆளானார் ருக்மணி.
வழக்கு போடப்பட்டது. ருக்மணியின் கணவர் 7 மாதங்களுக்குப் பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். 10 ஆண்டுகள் வழக்கு நடந்தது. ருக்மணியின் மகளுக்குத் திருமணமும் ஆனது. மகள் திருமணத்துக்கு வர வேண்டும் என்று தூது அனுப்பினார் குற்றவாளி. வேலை இல்லாமல் மருத்துவமனையும் நீதிமன்றமுமே வாழ்க்கை என்று அலைகிற நிலையில் தன் கணவருக்காக உறவினர்கள் தூது வருவதை நினைத்து ருக்மணி வேதனைப்பட்டார்.
ருக்மணியை மாவட்ட சட்ட உதவி ஆணையத்துக்கு அழைத்துச் சென்றார் ராணி. அதன் பிறகுதான் இந்தச் சமூகத்தின் மீது ருக்மணிக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டோர் இழப்பீடு நிவாரணத் திட்டம் 2013 பற்றி அறிந்துகொண்டார். 2013-ல் கொண்டுவரப்பட்ட கிரிமினல் நடைமுறை சட்டத் திருத்தமானது பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகை தருவதற்கான திட்டங்களைக் கொண்டுவந்து, நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டம் 2013, குற்றங்களால் பாதிக்கப்பட்டவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இழப்பீடு பெற வகை செய்கிறது.
1. 357A Cr.P.C பிரிவின்படி நீதிமன்றத்தால் இழப்பீடு வழங்கப்படும். பாதிக்கப்பட்டோர் மாநில அல்லது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
2. பாதிக்கப்பட்டவர், குற்றம் நடந்ததும் புகாரும் மனுவும் அளிக்க வேண்டும். அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் புகார் மனு அளிப்பது அவசியம்.
3. காவல் துறையின் புலன் விசாரணையிலும் நீதிமன்ற வழக்கு விசாரணையிலும் பாதிக்கப்பட்டவர் ஒத்துழைப்பு தர வேண்டும்.
4. பாதிக்கப்பட்டவர் மீதான குற்றம், இந்த மாநில எல்லைக்குள் நடந்திருக்க வேண்டும்.
5. பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பீடு, அவர்கள் அடைந்த பாதிப்பு, பொருட்சேதங்கள், மருத்துவச் செலவுகள், மறுவாழ்வுக்கான காலத்தில் அத்தியாவசிய பொருளுதவி அல்லது குற்றத்தால் இறப்பு ஏற்பட்டால் இறுதிச் சடங்குகளுக்குச் செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்கப்படும்.
6. கால கெடுவுக்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
7. இந்தத் தொகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கண்காணிப்பில், சரியான நபருக்கு, சரியான அளவில், குறிப்பிட்ட காலத்தில் இழப்பீடு வழங்கப்பட்டதா என்பதைச் சரிபார்த்து தரப்பட வேண்டும். இந்த இழப்பீடானது, நீதிமன்றம் வழக்கு விசாரணையை முடிக்கும்போது தீர்ப்பிலேயே சொல்லப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றாலும் அல்லது விடுதலையானாலும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு தரப்பட வேண்டும்.
ருக்மணி மீது அமில வீச்சு நடத்தப்பட்டபோது இப்படிப்பட்ட இழப்பீடு தரும் திட்டங்கள் இல்லை. ஆனாலும் ராணியின் கணவர் போட்ட மேல்முறையீடு நடந்து முடியும் தறுவாயில் இருப்பதால் அந்த மேல்முறையீட்டு நீதிமன்றம் ருக்மணிக்கு இழப்பீடு வழங்கலாம். இழப்பீடு தவிர, அமில வீச்சுக்கு ஆகும் மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்றும் சட்டம் தற்போது சொல்கிறது.
இடைக்கால நிவாரணமாக மூன்று லட்சம் ரூபாய் வரை ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவருக்குத் தரலாம் என்று இந்தத் திட்டம் சொல்கிறது. காரணம் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர் இடைக்கால இழப்பீடுகளைப் பெற்றால் மட்டுமே பிழைக்க முடியும். அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் இரண்டு, மூன்று ஆண்டுகள் மிகக் கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் குற்றத்தால் உயிரிழத்தல், உடல் பாகங்களை இழத்தல் போன்றவற்றுக்கு 3.5 லட்சமும், குற்றங்களால் ஏற்படும் மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் வரையும் இழப்பீடு வழங்க இந்தத் திட்டம் வகை செய்கிறது. சமூகத்தில் ஏற்படும் விழிப்புணர்வுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ப சட்டங்களும் மாறிவருகின்றன.
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT