Published : 30 Mar 2014 03:41 PM
Last Updated : 30 Mar 2014 03:41 PM
மலேசிய விமானம் 239 பயணிகளுடன் மாயமாக மறைந்து போனது பற்றிக் கடந்த மூன்று வாரங்களாக உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் 77 ஆண்டுகளுக்கு முன் பல உலக சாதனைகளைப் படைத்த பெண் சாகச விமானியும், இதேபோலத்தான் தடயம் கண்டறிய முடியாமல் மறைந்து போனார். அவர் அமெலியா இயர்ஹார்ட்.
டீன் ஏஜில் ஒரு சாகச விமானக் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது, தானும் பறக்க வேண்டும் என்ற ஆர்வம் அமெலியாவுக்குத் துளிர்த்தது. அப்போது அவரைக் கடந்து சென்ற ஒரு சிறிய சிவப்பு விமானம், அவரது கண் முன்னே சரக்கென்று கீழ்நோக்கிப் பாய்ந்து மேலேறியபோது, ‘இப்போது என்னோட பாய்ச்சலை பார்' என்று அந்த விமானம் சொல்லிச் சென்றது போலிருந்தது. பயமும் உற்சாகமும் கலந்த மனநிலைக்குச் சென்ற அமெலியாவின் மனதில், ஒரு அக்கினிக் குஞ்சு விழுந்தது.
சாகச விமானி ஆவது என்ற தீர்மான உணர்வுடன் அமெலியா இருந்தாலும், முன்தீர்மானங்களும் நிதி நெருக்கடிகளும் அவரை எதிர்கொண்டன. ஆனால், எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சட்டகங்களை உடைத்தெறிந்தார்.
1921-ல் விமானத்தில் பறக்கக் கற்ற அமெலியா, அடுத்த ஆறு மாதங்களில் பணத்தைச் சேர்த்து, தன் முதல் விமானத்தை வாங்கி விட்டார். அது இரண்டு பேர் உட்காரக்கூடிய மஞ்சள் நிறக் கின்னர் ஏர்ஸ்டர். 14,000 அடி உயரத் துக்குப் பறந்த முதல் பெண் என்ற பெருமையை, அந்த விமானமே அவருக்குப் பெற்றுத் தந்தது.
அட்லாண்டிக் சாகசம்
இடையில் ஒரு நாள் அமெலியா வேலையில் மூழ்கியிருந்தபோது, திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது ஏதோ தவறான அழைப்பு என்றுதான் முதலில் அவருக்குத் தோன்றியது. ஆனால், எதிர்ப்புறத்தில் இருந்தவர், "அட்லாண்டிக் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண்ணாக மாற ஆசைப்படுகிறீர்களா?" என்று கேட்டபோது, மற்றப் பெண்களைப் போல அமெலியா ஆச்சரியத்தில் வாயைப் பிளக்கவில்லை. உறுதியாக, "ஆமாம்" என்றார். அவரை விமா னத்தில் அனுப்பத் திட்டமிட்ட குழுவில் புத்தகப் பதிப்பாளர் ஜார்ஜ் பி. புட்னமும் அடக்கம்.
விமானி வில்மர் பில் ஸ்டல்ட்ஸ், துணை விமானி-மெக்கானிக் லூயி கார்டான் இருவருடன் அந்தச் சாகசப் பயணத்தில் அமெலியா பறந்தார். அவர்கள் சென்ற விமானம் அமெரிக்காவின் நியூஃபவுண்ட்லாண்டில் புறப்பட்டு 21 மணி நேரத்தில் பிரிட்டன் வேல்ஸில் தரை இறங்கியது. இந்தத் திருப்பு முனைப் பயணம் உலகெங்கும் தலைப்புச் செய்தியானது. அதற்குக் காரணம், அதே ஆண்டில் இந்தச் சாதனையைப் புரிய முயற்சித்த 3 பெண்கள் மரித்துப் போயிருந்ததுதான்.
அப்போது விமானம் கண்டுபிடிக்கப்பட்டு 10-20 ஆண்டுகளே ஆகியிருந்ததால், அந்தக் காலத்தில் விமானத் தில் பயணிப்பதே மிகப் பெரிய சாகசமாகக் கருதப் பட்டது. இந்நிலையில் பெருங் கடல்களைத் தாண்டுவது என் பது அசாதாரணச் சாதனைதான்.
பறத்தலே வாழ்க்கை
அந்தச் சாதனைக்குப் பின் பறப்பது ஒன்று மட்டுமே அமெலியாவின் வாழ்க்கையாகிப் போனது. அட்லாண்டிக்கைக் கடக்கும் சாதனையின்போது நெருக்க மான ஜார்ஜ் புட்னமும் அமெ லியாவும் 1931-ல் திருமணம் செய்துகொண்டார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த முதல் பெண், தனியாகக் கடந்த இரண்டாவது நபர் ஆகிய சாதனைகளைப் புரிய அமெலியா தயார் ஆனார். அதற்குப் புட்னமும் முக்கியக் காரணம். நியூஃபவுண்ட்லாண்டில் தொடங்கிப் பாரிஸுக்குப் புறப்பட்டார். கடுமையான வடக்குக் காற்று, குளிர் நிலைமை, இயந்திரக் கோளாறு போன்றவற்றால் அயர்லாந்தில் லண்டன்டெரி என்ற புல்வெளியில் விமானத்தை அவர் தரையிறக்கினார்.
கடலைக் கடந்த விஷயம் வெளியே தெரிந்து, உலகப் பிரசித்தமடைந்தார். மதிப்புமிக்க ஃபிளையிங் கிராஸ் விருதை அமெரிக்க நாடாளுமன்றம் அவருக்கு வழங்கியது. அதைப் பெற்ற முதல் பெண் அமெலியா. "புத்திசாலித்தனம், ஒருங்கி ணைப்பு, வேகம், அலட்டிக் கொள்ளாததன்மை, மனஉறுதி ஆகியவை தேவைப்படும் வேலைகளில் ஆண், பெண் வித்தியாசம் கிடையாது என் பதை இந்தப் பயணம் உணர்த்தி இருக்கிறது" என்று அமெலியா அப்போது கூறினார். அதற்குப் பிறகு தனியாகப் பசிஃபிக் பெருங்கடலைக் கடந்தார்.
வாழ்க்கை லட்சியம்
1937-ல் அமெலியா தனது 40-வது வயதில் அழிக்க முடியாத, கடைசி சவாலுக்குத் தயார் ஆனார். உலகை விமானத்தில் சுற்றிய முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்த அவர் விரும்பினார். அதே ஆண்டில் அவரது முதல் முயற்சி, மோச மாகச் சேதமடைந்த ஒரு விமானத் துடன் முடிந்தது. அடுத்த முறை இரட்டை இன்ஜின் பொருத்தப் பட்ட விமானத்துடன் அமெலியா தயார் ஆனார். "இதுவே எனக்குள் ஒளிந்திருக்கும் கடைசி சிறந்த பயணமாக இருக்கும்" என்று புறப்படுவதற்கு முன் அவர் கூறினார்.
ஜூன் 1-ம் தேதி அமெலியாவும், வான் மாலுமி ஃபிரெட் நூனனும் மியாமியில் இருந்து 29,000 மைல் பயணத்தைத் தொடங்கினர். ஜூன் 29, நியூ கினியாவில் அவர்கள் இடைநின்றபோது 7,000 மைல்களைத்தான் கடந்திருந்தார்கள். துல்லியமற்ற வரைபடங்கள், வழிகண்டறிவதில் நூனனுக்கு பிரச்சினையை ஏற்படுத்தின. அவர்களுடைய அடுத்த இடைநிற்கும் இடம் ஹோலாண்ட் தீவு, மிகவும் சவாலானது.
அமெரிக்கக் கடலோரக் காவல்படை கப்பல் இடாஸ்கா, ஹோலாண்ட் தீவிலிருந்து அமெலியாவுடன் வானொலி அலைத் தொடர்பை வைத்து இருந்தது. கடலில் வழியறிய இரண்டு கப்பல்களும் நிறுத்தப் பட்டிருந்தன. அதற்குக் காரணம் பசிஃபிக் பெருங்கடலின் மையத் தில் இருந்த ஹோலண்ட் மிகமிக சிறிய தீவாக இருந்ததுதான்.
ஜூலை 2-ம் தேதி அமெலியாவின் விமானம் புறப்பட்டது. வானிலை அறிக்கைகள் சாதகமாக இருந்தாலும், மேகமூட்டமான வானம், மழையில் அவர்கள் சிக்கினர். வழக்கமாக விண்வெளி அடையாளங்களை வைத்துத் தடம் கண்டறியும் நூனன், அன்றைக்குச் சிரமப்பட்டார். அதிகாலை நெருங்க நெருங்க இடாஸ்காவை அமெலியா கூப்பிட்டார். ரேடியோ தொடர்பு மிகவும் சிக்கலாகவே இருந்தது.
ஜூலை 2-ம் தேதி அமெலியாவின் விமானம் புறப்பட்டது. வானிலை அறிக்கைகள் சாதகமாக இருந்தாலும், மேகமூட்டமான வானம், மழையில் அவர்கள் சிக்கினர். வழக்கமாக விண்வெளி அடையாளங்களை வைத்துத் தடம் கண்டறியும் நூனன், அன்றைக்குச் சிரமப்பட்டார். அதிகாலை நெருங்க நெருங்க இடாஸ்காவை அமெலியா கூப்பிட்டார். ரேடியோ தொடர்பு மிகவும் சிக்கலாகவே இருந்தது.
காலை 7.42 மணிக்கு "எரிபொருள் குறைகிறது, ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறோம்" என்று அமெலியாவிடம் இருந்து தகவல் வந்தது, காலை 8.45 மணிக்கு "நாங்கள் வடக்கு, தெற்காகப் பறக்கிறோம்" என்று அமெலியாவிடம் இருந்து செய்தி கிடைத்தது. அதற்குப் பிறகு எந்தச் செய்தியுமில்லை.
அதற்குப் பிறகு ஜூலை 19-ம் தேதி வரை 2,50,000 சதுர மைல் பரப்பில் அமெலியாவின் விமானத்தைத் தேடும் பணி நடந்தது. அன்றைய தேதிக்கு 40 லட்சம் டாலர் செலவில், வரலாற்றிலேயே மிகப் பெரிய தேடுதல் வேட்டையாக அது இருந்தது. ஆனால், எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
இன்று வரை அவர் பறந்த விமானம் மறைந்து போன தற்கான எந்தத் தடயமும் இல்லை. அதேநேரம் அமெலி யாவின் துணிச்சல், பார்வை, தகர்க்க முடியாத சாதனைகள் வான்வெளியிலும், பெண் உலகிலும் உயர்ந்து நிற்கின்றன.
ஒரு வேளை அந்தப் பயங்கரமான விமானப் பயணம், அவரது இறுதிப் பயணமாக மாறிவிட்டால், "நான் ஆபத்து களை நன்றாக உணர்ந்தே இருக்கிறேன். நான் பறக்க நினைத்ததற்கு, அதை நிச்சயம் செய்து முடிக்க வேண்டும் என்ற விருப்பம்தான் காரணம். ஆண்கள் முயற்சித்ததைப் போலவே, பெண்களும் புதிய விஷயங்களை முயற்சித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் அதில் தோற்றால், அது மற்ற பெண்களுக்கான சவாலாக மாற வேண்டும்" என்று அமெலியா கூறிச் சென்றதில் இருந்தே, அவரது துணிச்சல் மிகுந்த உத்வேகத்தை உணரலாம்.
மீரா நாயரின் சமர்ப்பணம்
அமெலியா என்ற பெயரில் புகழ்பெற்ற இந்தியப் பெண் திரைப்பட இயக்குநர் மீரா நாயர் இயக்கிய, அமெலியா இயர்ஹார்ட் பற்றிய சுயசரிதை திரைப்படம் 2009-ல் வெளியானது. அதில் ஹிலாரி ஸ்வாங்கும், ரிச்சர்ட் கிரேயும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அமெலியாவின் நினைவைப் பரவலாக்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT