Last Updated : 30 Mar, 2014 03:27 PM

 

Published : 30 Mar 2014 03:27 PM
Last Updated : 30 Mar 2014 03:27 PM

பெண் நூல்: குழப்பத்தைக் களையும் சட்ட வழிகாட்டி

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குள்ளேயே இருக்கும்போது, அது பிரம்மாண்டமாகத்தான் தெரியும். அதை விட்டுத் தள்ளி நிற்கும்போதுதான் பிரச்சினையின் உண்மையான வீரியம் பிடிபடும். இப்படி, பெண்கள் தங்களைச் சூழ்ந்திருக்கிற பிரச்சினைகளில் இருந்து தள்ளி நின்று தீர்வு காண வழிகாட்டுகிறது வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி எழுதியிருக்கும் ‘சட்டம் உன் கையில்’ புத்தகம்.

மூடப்பட்டிருக்கும் வீட்டின் ஜன்னல்கள் அடைபட்டு இருக்கும்போது, விசாலமாகத் திறக்கிற கதவைப் போலவே, பெண்கள் தங்கள் குடும்பத்திலும் அலுவலகத்திலும் சந்திக்க நேர்கிற பிரச்சினைகளுக்கு, சட்ட ரீதியிலான தீர்வுகளை முன்வைக்கிறார் ஆசிரியர்.

திருமணம், அது சார்ந்த குடும்ப உறவுகளில் இருந்து தொடங்குகிறது சட்டத்தின் விளக்கம். ஒவ்வொரு சட்டத்தைக் குறித்து விளக்கும்போதும், அது தொடர்புடையை வழக்குகளை வைத்தே விவரித்திருக்கிறார். அது போன்ற வழக்குகளின் போக்கும், முடிவும் ‘நமக்கு மட்டும்தான் இப்படிப்பட்ட பிரச்சினை நடக்கிறதோ?’ என்ற அவநம்பிக்கையைத் தகர்த்து, ‘நம்மாலும் நிச்சயம் எதையும் எதிர்கொள்ள முடியும்’ என்ற நம்பிக்கையைத் தருகின்றன.

குடும்பம், அலுவலகம் என்று மட்டுமே பெண்களின் எல்லையைச் சுருக்கிவிடாமல், ஈவ் டீசிங், பெண்களை இழிவாகச் சித்தரித்தல், இணைய வெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், நுகர்வோர் பாதுகாப்பு என பலதரப்பட்ட தளங்களிலும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்களைத் தனியாகத் தெரியும்படி அச்சிட்டிருப்பது, வரவேற்கத்தக்கது.

சட்ட ஆலோசனைப் புத்தகம் என்றதுமே, பொதுமக்களின் அறிவுக்கு எட்டாத துறை ரீதியான வார்த்தைகளின் பயன்பாடு அதிகம் இருக்கும் என்ற கருத்தை வழக்கறிஞர் ஆதிலட்சுமி தகர்த்திருக்கிறார். அனைத்துத் தரப்புப் பெண்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் சட்டங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

எதிலுமே இழப்புக்கு வழிவகுக்காத ஆக்கபூர்வமான தீர்வுகளையும், அது சார்ந்த சட்டங்களைக் குறித்தும் சொல்லியிருப்பது பெண்களுக்கு நம்பிக்கை தரும். ‘வாழ்க்கை அவ்வளவுதானா?’ என்று குழம்பித் தவிக்கும் பெண்களுக்கு, இந்தப் புத்தகம் நிச்சயம் நல்வழி காட்டும்.

ஆசிரியர்: ஆதிலட்சுமி லோகமூர்த்தி, வெளியீடு: சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-4. விலை: ரூ.100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x