Published : 28 May 2017 12:23 PM
Last Updated : 28 May 2017 12:23 PM

இது எங்க சுற்றுலா: ஸ்வீட் ஸ்வீடன்!

விமானத்தைப் பக்கத்தில்கூடப் பார்க்காத நான் முதல் முறை தனியாகக் கிளம்பி, இரு விமானங்களில் பயணித்து ஸ்வீடன் சென்றேன். சென்னையிலிருந்து துபாய்வரை ஒரு பயணம். ஒரு மணி நேர இடைவெளியில் வேறு விமான நிலையம் செல்ல வேண்டும். குறைந்தது அரைமணி நேரம் ஆகும். விமானத்தைப் பிடிக்க வேண்டுமென்ற பயத்தில் காபிகூடக் குடிக்காமல், மூன்று பேருந்துகளில் பயணித்து, விமானத்தில் ஏறி ஆனந்தப் பெருமூச்சு விட்டேன். என்னை அழைத்துச் செல்ல மகனும் மருமகளும் வந்திருந்தார்கள்.

கடைவீதிக்குச் செல்லும்போது ஆப்பிரிக்கர், ஆஸ்திரேலியர், ஜப்பானியர், ரோமானியர் என்று பல நாட்டு மக்களையும் பார்த்தேன். ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் பேன்ட், டிஷர்ட் அணிந்திருந்தனர். பெரும்பாலும் அணிகலன்கள் அணியவில்லை. ஒரு சிலர் முத்துகளை அணிந்திருந்தனர். புடவையுடன் வெளியே சென்ற என்னைப் பார்த்த பலரும் இந்திய ஆடையா என்று வியப்புடன் கேட்டார்கள். சிலர் வணக்கம் செய்துவிட்டுப் போனதைப் பார்த்து நான் மகிழ்ச்சியில் திளைத்தேன். ஸ்வீடிஷ் மக்களுக்கு வெண்மை, செம்மை நிறத் தலைமுடி இருக்கும். மூன்று மாதக் குழந்தையை வெள்ளை முடியுடன் பார்த்தபோது வித்தியாசமாக இருந்தது.

வாசா அருங்காட்சியகம் சென்றோம். முன்னூறு ஆண்டுகள் கடலுக்கு அடியில் மூழ்கிவிட்ட கப்பலை வெளியே எடுத்து, சுற்றிலும் சுவர்கள் எழுப்பி அருங்காட்சியகமாக்கிவிட்டார்கள். ஏழு மாடிகள் கொண்ட அந்தக் கப்பலின் ஒவ்வொரு மாடியிலும் விதவிதமான சிற்பங்களைப் பார்த்து வியந்தோம்.

பின்லாந்து செல்லும் கப்பலில் ஒருநாள் முழுதும் இருந்தோம். கடற்கரை ஓரங்களில் உயர்ந்த மலைப் பகுதிகள் இருந்தன. அங்கு வசிக்கும் மக்கள் எங்கே செல்வதென்றாலும் படகில்தான் பயணிக்க வேண்டும். கப்பலில் தனித் தனியாக அறைகள் இருந்தன. பெரிய உணவு விடுதியும் இருந்தது. விதவிதமான பழங்களும் ரொட்டிகளும் சாப்பிட்டோம். தனியாக வெளிநாடு சென்றதும் பல விஷயங்களைப் பார்த்து அனுபவித்ததும் என் வாழ்நாள் சந்தோஷமாக மனதில் நிலைத்துவிட்டன.

- ஆனந்தி முத்தையா, சென்னை.



இரு சக்கர வாகனத்தில் ஏற்காடு!

பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் திடீர் தென்றலாக அமைந்தது இருசக்கர வாகனத்தில் சென்ற ஏற்காடு பயணம். ஆறாவது திருமண நாளன்று நான் எதிர்பார்க்காத வகையில் ஒரு பர்ஸையும் என்னைப் பற்றிய கவிதையையும் அன்பளிப்பாகக் கொடுத்தார் என் கணவர். முன்னறிவிப்பு இல்லாமல் என்னையும் மகளையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு சர்ரென்று புறப்பட்டார். அவருக்கு பைக் பந்தயங்களில் அலாதிப் பிரியம். மலையேற்றப் பயிற்சிக்காக ஒவ்வொரு வாரமும் ஏற்காடு செல்வது வழக்கம். இதனால் பழக்கப்பட்ட அந்தப் பாதையில் அரை மணி நேரத்தில் ஏற்காடு வந்தடைந்தோம்.

மான் பூங்கா, ஊஞ்சல் விளையாட்டு, படகு சவாரி போன்ற இடங்களுக்குச் சென்றோம். காட்டெருமை, புள்ளிமான், முயல், நரி, ஓநாய், கீரிப்பிள்ளை, புனுகு பூனை போன்றவற்றைப் பார்த்தோம். பழம்பெரும் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் குடும்பத்தினரின் பங்களா பயணியர் விடுதியாக இருந்ததைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. எங்கள் படம் கொண்ட கீ செயின், மிளகாய் பஜ்ஜி, முட்டை ஃப்ரைடு ரைஸ், மலைகளின் அழகு, சில்லென்ற காற்று, என் கணவரின் அன்பு போன்றவை இந்தப் பயணத்தை சுகமான நினைவாக என்றும் நிலைத்திருக்க வைத்துவிட்டன.

- ராபியா, சேலம்.



சிறுமலை தந்த பேரானந்தம்!

திருச்சியிலிருந்து இரண்டு நாள் பயணமாகச் சிறுமலை கிளம்பினோம். 18 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டிச் சிறுமலை அடைந்தோம். மூன்றாவது வளைவைத் தாண்டியபோதே, சில்லென்ற காற்று வரவேற்றது. ஒருபுறம் மலைக்காடும் மறுபுறம் பள்ளத்தாக்கும் பரவசமளித்தன. மலையேறும் சாலை சீராக இருந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் உச்சியை அடைந்தோம்.

அங்கேயே பிறந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களே பெரும்பாலும் இருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் கவனம் சிறுமலை பக்கம் அதிகம் திரும்பாததால், மாசில்லாமல் இயற்கை அழகு கொஞ்சியது. தனியார் தங்கும் விடுதிகள் சிலவும் இருக்கின்றன. சிறுமலையில் பல்வேறு வகையான தாவரங்களும் விலங்கினங்களும் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் அருவியிலிருந்து தண்ணீர் வரும். நாங்கள் சென்றபோது நீர் இல்லை.

சிறுமலை வாழைப்பழம் புகழ்பெற்றது. பலாப் பழங்களும் காய்த்துக் கிடந்தன. காப்பிச் செடிகளும் மிளகுக் கொடிகளும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. இரவு மின்விசிறி இல்லாமல் இயற்கையின் குளிர்ந்த காற்றோடும் பூக்களின் நறுமணங்களோடும் வண்டுகளின் ரீங்காரத்தோடும் உறங்கினோம்.

காலை அகத்தியபுரம் கிளம்பினோம். அகத்திய முனிவர் பூஜை செய்ததால், அந்த இடத்துக்கு அகத்தியபுரம் என்று பெயராம். அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம் அகத்தியபுரம் வெள்ளிமலையில் அமைந்துள்ளது. அங்கு வருவோருக்குத் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது, ஆசிரமத்தில் தங்குமிடம் உண்டு. யார் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாம். குன்றுகளைச் சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை ஆசிரமம் ஊக்குவித்துவருகிறது.

சூரிய ஒளி பட்டதும் பாறைகள் வெள்ளியாக மின்னின! அகத்தியபுரத்திலிருந்து வெள்ளிமலை உச்சியை அடைய 45 நிமிடங்கள் ஆயின. சரியான படிகள் இல்லாததாலும் உயரமாக இருந்ததாலும் ஏறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால், மலையின் உச்சியை அடைந்தவுடன் இயற்கையின் படைப்பை எண்ணி மெய்சிலிர்த்தோம். எங்களைச் சுற்றிப் பச்சைப் பசேலென்று மலைகள். மலையிருந்து இறங்கவே மனமில்லை. எங்கு திரும்பினாலும் மருத்துவக் குணம் கொண்ட செடிகள். இந்த இலையைச் சாப்பிட்டால் பூச்சி விஷம் முறிந்துவிடும், அந்த இலையைச் சாப்பிட்டால் பாம்பு விஷம் இறங்கிவிடும் என்றார்கள்.

அங்குள்ள மனிதர்கள் அன்போடும் மரியாதையோடும் பேசுகிறார்கள். இருப்பதைக் கொடுத்து உபசரிக்கிறார்கள். சிறுமலைக் காடுகளும் மக்களும் இயற்கையின் மடியில் நிம்மதியாக இருக்கின்றனர்.

சிறுமலையில் ஏரி, சுற்றுலாத் தலங்கள், மக்கள் கூட்டம், கடைகள், பெரிய கோயில்கள் இல்லை. ஆனால் மன அமைதி கொடுக்கும் இயற்கையின் பேரழகு கொட்டிக் கிடக்கிறது. டவர் இல்லாததால் செல்போன் தொல்லையும் இல்லை.

கிளம்பியபோது ஆர்வம் காட்டாத குழந்தைகள், சிறுமலையிலிருந்து கீழே இறங்க மாட்டோம் என்றார்கள். அவர்களுக்காக இன்னொரு நாள் இருந்துவிட்டுத் திரும்பினோம்.

- சீதா வெங்கடேஷ், திருச்சி



திகட்டாத சிக்கிம்

பத்து ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தோடு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான சிக்கிம் சென்றுவந்தோம். சென்னை போன்று பரபரப்பின்றி அமைதியாக இருந்தது என் முதல் ஆச்சரியம். இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பட்டுச் சாலையான நாதுல்லா கணவாய் இரண்டாவது ஆச்சரியம். நம் இந்திய ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்களுக்கு அருகில் நின்றுகொண்டு எதிரேயுள்ள மலைகளின் அடிவாரங்களில் அமைந்துள்ள சீன ராணுவ முகாம்களை, இந்தியன் என்ற கர்வத்துடன் பார்த்தது அதற்கடுத்த ஆச்சரியம்.

1968-ல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த பாபா ஹர்பஜன் சிங் என்ற வீரர் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவிடம் இன்று, பொதுமக்கள் வழிபடும் கோயிலாக மாறிவிட்டது. தினமும் அங்கே ராணுவப் படுக்கையை விரித்துவைக்கிறார்கள். மறுநாள் காலை யாரோ இரவில் படுக்கையில் உறங்கி எழுந்தது போல் கலைந்திருக்குமாம். தினமும் காலையில் புதிதாக வைக்கப்படும் அவருடைய ராணுவ உடையும் பாலீஷ் செய்யப்பட்ட காலணிகளும் மாலையில் பார்த்தால் யாரோ உபயோகபடுத்தி விட்டுக் கழற்றியது போலிருக்குமாம். இதைக் கேள்விப்பட்டவுடன் அடிவயிற்றில் பயம் கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது.

வருடத்துக்கு ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் ஹர்பஜன் சிங்கின் நினைவுப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, பஞ்சாப் மாநிலத்திலுள்ள அவரது சொந்த கிராமமான குக்வாவுக்கு ரயிலில் அனுப்பிவைக்கப்படுகின்றன. இறந்துவிட்ட ஒருவரின் பெயரில் பயணச்சீட்டுப் பெறுவதும், அவரது பொருட்களை ரயிலில் பயணிக்க வைப்பதும் இந்திய ரயில்வே வரலாற்றில் மற்றோர் ஆச்சரியம்.

பனி மலைச் சூழலில் கொழுக்கட்டை போன்ற சூடான மோமோவும், இந்திய ராணுவத்துக்குப் பெருமை செய்யும் பாபா கோயிலும், அதிகாலை 4.30 மணிக்கு உதயமாகும் சூரியனும், மாலை 4 மணிக்கே வந்துவிடும் இருளும், விடுதி முகவரி தெரியாமல் குளிரில் தேடி அலைந்ததும், சுற்றுலாவில் அறிமுகமாகி, நண்பராகிவிட்ட திருப்பத்தூர் செந்தில் குடும்பத்தினரும் இன்றளவும் எங்களால் மறக்க முடியாதவை இப்படிப் பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய சுற்றுலா இது. மீண்டும் ஒருமுறை சென்றுவர ஆசையைத் தூண்டும் திகட்டாத அனுபவங்கள்.

- ஆ.முத்துலெட்சுமி நயினார், திருநெல்வேலி.



பச்மரி

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3555 அடி உயரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள பச்மரி (Pachmari), மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரே குளிர்வாசஸ்தலம். விந்திய சாத்புரா மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த இடம், சாத்புராவின் ராணி என்று அழைக்கப்படுகிறது. 1875-ல் ஜேம்ஸ் ஃபோர்ஸித் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட அழகின் இருப்பிடம்! உல்லாசச் சுற்றுலாவுக்கான அத்தனை விஷயங்களும்அளவின்றிக் கொட்டிக் கிடக்கின்றன.

பளிங்கு போல் விழும் அருவிகள், நெளிந்து ஓடும் நீரோடைகள், அடர்ந்த காடுகள், 1000 வருடத்துக்கு முந்தைய கலாச்சாரம் பற்றி அறியவைக்கும் குகை ஓவியங்கள், சிவாலயங்கள், அழகிய வேலைப்பாடமைந்த கண்ணாடி சன்னல்களுடனான தேவாலயங்கள், கோண்ட் பழங்குடி மக்களின் நடனம், மிதமான குளிர் என்று அத்தனையும் கண்ணுக்கும் மனதுக்கும் பெருவிருந்து!

பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின்போது இங்கு வாழ்ந்ததன் அடையாளமாக ஐந்து பாண்டவர் குகைகள் உள்ளன. அதனால் பச்மரி (ஐந்து குகைகள்) என்று அழைக்கப்படுகிறது.

சாத்புரா நேஷனல் பார்க் வனவிலங்கு சரணாலயம், பிரியதர்ஷினி பாயின்ட், கண்ணைப் பறிக்கும் 150 அடி உயர பீ ஃபால்ஸ் (Bee Falls), டட்ச் ஃ பால்ஸ், ரஜத் ஃபால்ஸ், இரு உயர்ந்த மலைகளுக்கிடையே V வடிவ ஹண்டிகோ பள்ளத்தாக்கு, சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் அழகாகக் காட்டும் 4,400 அடி உயர தூப்கார், மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டு, மூன்று வாசல்களுடைய கோட்டை போல உயர்ந்து நிற்கும் ரீச்கரின் மிரட்டும் அழகில் நம்மையே மறந்துவிடுவோம். மஹாதேவ், ஜடாசங்கர், சவுராகர் போன்றவை பக்தர்கள் தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள்.

பச்மரிக்குப் பேருந்து வசதிகள் இல்லை. போபால், ஜபல்பூரிலிருந்து செல்லலாம். ஹௌரா- மும்பை ரயில் பாதையிலுள்ள பிப்பாரியா ரயில் நிலையத்தில் இறங்கி, வேன், ஜீப் மூலமாகப் போகலாம். தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன. வாய்ப்பு கிடைத்தால் அதிகம் அறியாத, மக்கள் கூட்டம் அதிகமில்லாத, அழகிய மாசில்லா பச்மரியை ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்.

- ராதா பாலு, திருச்சி.



கடல் பாதி மலை பாதி!

ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, Great ocean road பயணம் சிலிர்ப்பூட்டியது. ஒருபக்கம் அமைதியான கடல், மறுபக்கம் குளிர்ச்சியான மலை, நடுவிலிருந்த பாதையில் 200 கி.மீ. தூரம் பயணித்தோம். வழியில் கற்களை ஆங்காங்கே உயரமாக அடுக்கியிருந்தார்கள். நானும் கணவரும் கற்களை அடுக்கிவைத்தோம். பரந்து, விரிந்த கல் அடுக்குகளிடையே பிள்ளையார் வடிவில் அடுக்கப்பட்டிருந்த அடுக்கு எங்களைக் கவர்ந்தது!

- என்.கோமதி, நெல்லை.



வீரம் விளைந்த மண்!

நானும் என் கணவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஊரான கயத்தாறுக்குச் சென்றோம். ஆங்கிலேயருக்கு எதிராக வீர முழக்கம் எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையையும் செய்திகளையும் பார்த்தோம். ‘வானம் பொழியுது, பூமி விளையுது, உனக்கு எதுக்கு வரி’ என்ற வீர வசனம் நினைவில் வந்து, உற்சாகத்தை அளித்தன. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை எண்ணிப்பார்த்துப் பெருமிதம் கொண்டோம். கூட்டம் அதிகம் இல்லை. குழந்தைகளுக்கு வரலாற்றைச் சொல்லித்தர நினைப்பவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

- உஷா முத்துராமன், திருநகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x