Published : 25 Sep 2016 11:36 AM
Last Updated : 25 Sep 2016 11:36 AM
பால் (Sex ), பாலினம் (Gender ) ஆகிய சொற்களைக் கேட்டிருப்போம். இவை பற்றிய தெளிவான அறிவு பெற்றிருக்கிறோமா என்பது கேள்விக்குறியே. ‘பால்’ என்பது பிறப்பால் வருவது. இது உடற்கூறியல் சார்ந்த சொல். ஆண், பெண் என்ற இருபாலினத்தவரின் உடல் அடிப்படையிலான அடையாளத்தைச் சுட்டும் சொல் ‘பால்’ என்பதாகும். ’பால்’ வேறுபாடு இயற்கையானது; பிறப்பில் அமைவது.
‘பால்’, ‘பாலினம்’ என்பவை இயற்கைப் பாகுபாடுகள் என்றாலும் ஆண், பெண் பாலினங்களுக்கான குணங்களுக்கான வரையறைகள் சமூகவியல் சார்ந்தவை. ஒருவரை ஆணாகவோ, பெண்ணாகவோ சமூக ரீதியாக அடையளப்படுத்தும் செயல் இது. ஆண்மை குணங்கள், பெண்மை குணங்கள் என்பவற்றை உள்ளடக்கியது. இந்த வரையறைகள் இயற்கையானவை அல்ல. மனிதனால் கட்டமைக்கப்பட்டவை. வீரம், தீரம், தைரியம் இவை ஆணுக்கான பண்புகளாகவும் மென்மை, அடக்கம், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை பெண்ணுக்கான பண்புகளாகவும் உருவகப்படுத்தபட்டன.
ஆண், பெண் இரு பாலாரில் ஆண்கள் ஆண்மைப் பண்பைப் பின்பற்றக் கற்பிக்கப்படுகிறார்கள். பெண்கள் பெண்மைப் பண்புகளைப் பின்பற்றக் கற்பிக்கப்படுகிறார்கள். இவ்விரு சாராரும் அந்தந்தப் பாலினப் பண்புகளை உடையவர்களாக இருந்தால் மட்டுமே பிறரால் மதிக்கப்படுகின்றனர். ஆண் நடத்தையைப் பெண்ணும், பெண் நடத்தையை ஆணும் பின்பற்றும்போது அவர்கள் சமூகத்தின் எள்ளலுக்கும் தூற்றலுக்கும் ஆளாகிறார்கள்.
வேறுபாட்டை வளர்க்கும் சாதனங்கள்
பால்சார்பு நடத்தைகள் குடும்பம், பொது இடங்கள், ஊடகங்கள், பள்ளிக்கூடங்கள் இவற்றின் மூலம் கற்பிக்கப்படுகின்றன. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வளரும் குழந்தைகளின் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சராசரியாக ஒரு குழந்தை ஒரு நாளில் ஆறு மணி நேரம் தொலைகாட்சியைப் பார்க்கச் செலவிடுகிறது. தொலைக்காட்சி பால்சார்பு நடத்தைகளை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரங்களிலும், நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பால்சார்பு நடத்தைகள் கற்பிக்கப்படுகின்றன. கதாநாயகன், நாயகியைக் காப்பவனாகவும், நாயகி வில்லன்களால் தூக்கிச் செல்லப்படும் போது அவன் சண்டையிட்டு மீட்கும் வலிமையுடையவனாகவும் காட்டப்படுகிறான். கதாநாயகி குடும்பம் பேணுபவளாகவும், நாயகன் என்ன தவறு செய்தாலும் அவனைப் போற்றுபவளாகவும் , சுயசார்பு இல்லாதவளாகவும், அனைத்தும் கணவனே என்று வாழ்பவளாகவும் காட்டப்படுகிறாள். விதிவிலக்காக வரும் சில நாடகங்களில் பெண்ணைச் சுயசார்பு உடையவளாகக் காட்டி, அவளை எதிர்மறைப் பாத்திரமாக, தீவினையின் மொத்த உருவமாகப் படைத்துவிடுகின்றனர்.
கண்ணுக்குத் தெரியாத கட்டுமானங்கள்
பண்புகளில் மட்டுமல்ல, நடை, உடை, பாவனைகளில் ஆண் வேறு பெண் வேறு என்று சமூகம் கற்பிக்கிறது. ஆணுக்கு வேட்டி, சட்டை, பேண்ட் என்றும், பெண்ணுக்குச் சேலை பாவாடை-தாவணி, சுடிதார்-துப்பட்டா என்றும் வரையறுக்கிறது. நாகரிகம் வளர்ச்சிபெற்றிருக்கும் இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களின் உடைகளாகச் சொல்லப்பட்டிருக்கும் பேண்ட் வகைகளை அணிவது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், பெண்ணுக்கான உடைகளை ஆண்கள் அணிய முன்வருவதில்லை. அப்படி அணிந்தால் அவர்கள் பாலின மாறுபாட்டாளர்கள் என்று ஒதுக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு, சமூகம் கண்ணுக்குத் தெரியாத கட்டுமானங்களால் பெண்களைப் பின்னிப் பிணைத்துள்ளது. இத்தகைய செயற்கையான கட்டுமானங்களைப் பெண்கள் புரிந்துகொண்டு அதை விட்டு விலகி, வெளிவர முன்வர வேண்டும். பெண் பிறப்பு குற்றமானதல்ல . பெண்ணின் வளர்ப்பே குற்றமானது. பெண் சமூகம் மட்டுமன்றி ஒட்டுமொத்தச் சமூகமும் இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT