Published : 19 Feb 2017 11:30 AM
Last Updated : 19 Feb 2017 11:30 AM

சட்டமே துணை: பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டா?

வள்ளிக்கும் வேணிக்கும் தங்கள் குடும்பத்தின் மேல் கடுங்கோபம். தங்கள் சகோதரர்கள் தங்களைப் பாசத்துடன் கவனித்த காலம் போய், சொத்து பற்றிப் பேசுவதாக இருந்தால் வீட்டுக்கு வராதீர்கள் என்று சொல்லும் காலம் வந்துவிட்டதே என்ற ஆற்றாமை அவர்களுக்கு.

அவர்களுடைய தாத்தாவுக்குச் சொந்தமான விளைநிலங்களை, வீட்டு மனைகளாக விற்க இருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தபோதுதான் வள்ளிக்கும் வேணிக்கும் வருத்தமும் கோபமும் ஏற்பட்டது. இருவருமே தங்கள் சகோதரர்கள் போலவே வசதியாக இருக்கிறார்கள். ஆனாலும் தாத்தாவின் சொத்தில் பேரன்களுக்கு இருக்கும் உரிமை, பேத்திகளுக்கு இல்லையா என்ற கேள்வியும் அவர்களுக்கு எழுந்தது.

பெண்களுக்குச் சொத்துரிமை சமமானது என்று இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு திருத்தியமைப்பட்டது. ஆனால் அந்தச் சொத்தில் 2005-க்கு முன்பே அப்பாவுக்கும் மகன்களுக்கும் பாகப் பிரிவினை ஆனதா, இல்லையா இன்றைக்கும் அது பொதுவாகக் கூட்டுக் குடும்பச் சொத்தாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது.

பெண்ணுக்குப் பாசம், ஆணுக்குப் பணமா?

வள்ளியும் வேணியும் சகோதரர்களிடம் பேசுவதற்காகச் சென்றனர். “ஏன் அண்ணா, பாட்டன் சொத்தில் உங்களைப் போலவே எங்களுக்கு உரிமை இருக்கு இல்லையா? எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் சொத்தை விற்க ஆரம்பிச்சிட்டீங்களே?” என்று கேட்டார் வள்ளி.

அண்ணன் அமைதியாக இருந்தார்.

“சொத்து வேணும்னா கோர்ட்டில் பார்த்துக்கலாம், பாசம் வேணும்னா வீட்டிலேயே பேசலாம்” என்று குரலில் சற்றுக் கோபத்தைக் கூட்டிச் சொன்னார் தம்பி. அப்போதும் அண்ணன் மவுனமாக இருந்தார்.

“அப்படின்னா பெண்களுக்குப் பாசம், ஆண்களுக்கு சொத்தா?” என்று கேட்டார் வேணி.

“காலகாலத்துக்கும் உங்களுக்கு ஒரு தாய் வீடு இருப்பது கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலத்தைவிட மதிப்பானது” என்றார் அண்ணன்.

பாட்டன் சொத்தில் பெண் வாரிசுகளும் பங்குதாரர்கள்தான் என்று இந்து வாரிசுரிமைச் சட்டம் சொன்னாலும் வள்ளிக்கும் வேணிக்கும் நடந்தது போலவே பல பெண்களுக்கும் நடக்கிறது. அதில் கணவன் வீட்டாரின் ஒத்துழைப்போடு பாகப்பிரிவினை வழக்குப் போட்ட பெண்களும் உண்டு. சகோதரிகளுக்குத் தெரியாமல் தந்தைக்கும் மகன்களுக்கும் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், சகோதரிகளுக்குச் சம பங்கு கிடைக்கவிடாமல் சட்டத்தின் கதவடைக்கவும் வழியுண்டு. மேலும் இந்துக் குடும்பங்களில் வாய்மொழி பாகப் பிரிவினை என்ற விஷயம் உண்டு. இதுபோன்ற சட்ட நுணுக்கங்களின் வாயிலாக பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு இல்லை என்று வழக்குகளில் கூறப்பட்டவையும் உண்டு. இருப்பினும் பெண்களுக்குப் பாட்டன் சொத்தில் சட்டப்படி சமபங்கு உண்டு என்பதே இன்றைய நிலை.

சமத்துவமே தீர்வு

ஒவ்வொரு வழக்கும் அதனுடைய நிலைமைக்கேற்ப ஆண் வாரிசுகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றத் தீர்ப்புகளைப் பொறுத்து வெற்றியும் தோல்வியும் அடைகிறது. பல வழக்குகள் இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்றம்வரை இன்னும் வந்து சேரவில்லை. நம் நீதித்துறையில் 10, 12 ஆண்டுகளில்கூடச் சொத்துரிமை வழக்குகள் இறுதி முடிவுக்கு வராத நிலையையே இது காட்டுகிறது. ஆனால் பெண்களுக்குப் பாட்டன் சொத்தில் பங்கு இல்லை என்ற நிலை முழுவதுமாக மாற்றப்பட்டுவிட்டது. தங்களுக்கு மட்டுமே சொத்து வேண்டும், அதுவே தங்களுக்கு அதிகாரமளிப்பவை என்று கருதும் ஆண்களும் உணர்வு ரீதியாக, உளவியல் ரீதியாகப் பெண்களை வென்றுவிடுகிறார்கள்.

சொத்து பற்றிப் பேசும் முன்பே சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குக் கோர முகங்களைக் காட்டுவதும்உண்டு. இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணப் போக்கும் பெருவாரியான ஆண்களுக்கு உண்டு. வளர்க்கும் போதே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவத்தைப் போதித்து இருவரும் சமமானவர்கள் என்ற எண்ணத்தை விதைப்பது அவசியம்.

தங்களுடைய தந்தை சகோதரிகளுக்கு ஏராளமான நகைகளைப் போட்டு, திருமணத்தை நடத்தி வைத்தார்கள் என்றும், ஆண்களுக்கு நகையும் திருமணச் செலவுகளும் கிடையாது என்றும் வாதிடுகிறார்கள் சகோதரர்கள். அது தவிர வளைகாப்பு, குழந்தை பிறப்பு, சடங்கு என்று காலத்துக்கும் சகோதரர்கள் சகோதரிகளுக்குச் செய்துகொண்டே இருப்பதாகவும் வாதிடுகிறார்கள்.

ஆண்களிடம் உள்ள சொத்துகள் பெண்களுக்கு எனவும், பெண்களிடமுள்ள நகை, பரிசுகள், கல்யாணச் செலவுகள் எல்லாம் ஆண்களுக்கு எனவும் மாற்றுவதற்குத் தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டுப் பாருங்கள். எதற்கு மதிப்பு அதிகம் என்பதும் பெண்களின் நகைகளைக் காரணம் காட்டி ஏமாற்றுவதும் தெளிவாகப் புரியும். சட்டங்கள் சமத்துவத்தைத் தன்னிடத்தே வைத்திருந்தாலும் அவற்றை நடைமுறைபடுத்திக்கொள்ளவும் நீதியை நாடுவதற்கும் பெண்கள் முன்வந்தால் மட்டுமே சொத்துரிமைகள் பெண்களுக்குக் கிடைக்கும்.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x