Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM
நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதில் புடவைகளுக்கு நிகர் வேறெதுவும் இல்லை. எப்போதுமே இருவகையான புடவைகள் மக்கள் மத்தியில் பிரசித்திப் பெற்றிருக்கும். ஒன்று பாரம்பரிய புடவைகள். மற்றொன்று சமகாலத்தைப் பிரதிபலிக்கும் புடவைகள். தென்னிந்தியர்கள் முழுநீளப் புடவை அணிவது போல வட இந்தியாவில் லெஹிங்கா எனப்படும் பாவாடை போலவே தோற்றமளிக்கும் புடவைகளை அணிவார்கள். அனார்கலி போல இருக்கும் கலிதார் புடவைகளும் வட இந்தியப் பாரம்பரியம்தான். குஜராத்திகளும் பெங்காலிகளும் குர்தி போல இருக்கும் மாஷர்ஸ் புடவைகளை அணிவார்கள். இதுபோன்ற பாரம்பரிய புடவை களில் மாற்றம் ஏதும் இருக்காது என்பதால் அவற்றை எங்கேயும் எப்போதும் அணியலாம்.
ஆனால் சமகால புடவைகள்தான் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப புடவை அணிவதில்தான் நம் திறமை அடங்கியிருக்கிறது. புடவைகள் என்றாலே ஒன்று பட்டுப்புடவை அல்லது செயற்கை இழைகள் கொண்ட புடவை என்றுதான் பலரும் ரகம் பிரித்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் நாம் நினைத்துப் பார்க்காத ரகங்களிலும் இப்போது புடவைகள் தயாராகின்றன. கிரேப், வெல்வெட், ஜூட் சில்க் போன்ற ரகங்களில் புடவை அணிந்தால், அனைவரின் கவனமும் நம் மீதுதான்.
ஆளுக்கு ஏற்ற ஆடை
உடலமைப்புக்கு ஏற்ற மாதிரி ரகங்களில்தான் ஆடை அணிய வேண்டும். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் ஹெவி சில்க், புரோகேட், காஞ்சிபுரம் பட்டு போன்ற ரகங்களில் புடவை அணியலாம். இது அவர்களின் தோற்றத்துக்குக் கம்பீரம் கூட்டும். சணல் என்றதுமே பலருக்குக் கட்டை பைகளும் மிதியடியுமே நினைவுக்கு வரும். ஆனால் பாலீஷ் செய்யப்பட்ட சணலில் நெய்யப்பட்டு வரும் புடவைகள் கண்கவரும் விதத்தில் இருக்கும். இவற்றை மாலைநேர விருந்துகளுக்கு அணிந்து சென்றால், அந்த இடத்தில் நாம்தான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருப்போம். கொஞ்சம் பூசினாற்போல் உடலமைப்பு கொண்டவர்களாக இருந்தால் எடைகுறைந்த ஷிபான், கிரேப், ஜார்ஜெட் ரகங்களை அணியலாம்.
மாயம் செய்யும் நிறங்கள்
ஆடை ரகங்களைப் போலவே நிறங்களுக்கும் நம் தோற்றத்தை மாற்றிக்காட்டும் வல்லமை இருக்கிறது. ஒல்லியாக இருப்பவர்கள் அடர் நிறங்களில் புடவை அணிந்து செல்லலாம். அது அவர்களின் தோற்றத்தைப் பளிச்சென்று எடுத்துக்காட்டும். பூசினாற்போல் இருக்கிறவர்கள் அடர் நிறங்களைத் தவிர்த்து வெளிர் நிறங்களில் புடவை அணிய வேண்டும். இந்த நிறங்கள் உடலின் தொப்பையைக் குறைத்துக் காட்டும். மற்றக் குறைபாடுகளும் மறைந்தே போகும்.
ஒல்லியாக இருக்கிறவர்கள் பெரிய பார்டர் வைத்த புடவைகள் அணிந்தால், அவர்கள் தோள்பரப்பை அந்த பார்டரே நிறைத்துவிடும். அது அத்தனை எடுப்பாக இருக்காது. அதனால் இவர்கள் சின்ன பார்டர் வைத்தப் புடவைகளை அணிவது நல்லது. குண்டாக இருக்கிறவர்கள் பெரிய பார்டர் வைத்த புடவைகளை அணிவதால் அவர்கள் தோற்றத்தில் கம்பீரம் கூடும்.
ஒல்லியாக இருக்கிறவர்கள் குட்டி குட்டி பூக்களோ, டிசைனோ இருக்கிற புடவைகளை அணியலாம். குண்டாக இருக்கிறவர்கள் பெரிய பெரிய டிசைன் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் புடவைகள் அணியலாம். இது அவர்களின் தோற்றத்தைக் கொஞ்சம் குறைத்துக் காட்டும்.
புடவை கட்டுவதில் மாற்றம் தேவை
தினமும் கட்டுகிற புடவை வித்தியாசமாகத் தெரியவேண்டுமா? அது மிக எளிது. புடவை கட்டும் விதத்தில் கொஞ்சம் மாற்றம் செய்துவிட்டால் போதும். பொதுவாக புடவையுடன் சேர்ந்தே வருகிற அட்டாச்டு பிளவுஸைத்தான் பலரும் அணிகிறார்கள். அதைத் தவிர்த்து, தனித்துத் தெரிகிற அடர் நிற பிளவுஸ் அணிந்தால் பளிச்சென்று இருக்கும். புரோகேட், வெல்வெட் போன்ற ரகங்களில் பிளவுஸ் அணிவதும் சிறப்பான தோற்றத்தைத் தரும். எம்ப்ராய்டரி, ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்த பிளவுஸையும் அணியலாம். இவையும் சாதாரண புடவைக்குச் சிறப்பான தோற்றம் தரும்.
சிலர் மிக நீளமாக முந்தானையை விட்டிருப் பார்கள். பின் செய்யாமல், ஃப்ரஸ்ட் ஃப்ளீட் விட்டால் இது நன்றாக இருக்கும். புடவையை மடித்து பின் செய்து மாட்டியிருக்கிற பட்சத்தில் நீளமான முந்தானை அத்தனை எடுப்பாக இருக்காது. அதனால் முந்தானையின் நீளத்தை ஓரளவுக்குக் குறைக்கலாம். சிலர் புடவை கட்டி முடித்ததும் உயரமான குதிகால் வைத்த செருப்பை அணிவார்கள். அதனால் புடவை காலுக்கு மேல் உயரமாகத் தூக்கியிருப்பது போலத் தெரியும். இதைத் தவிர்க்க ஹீல்ஸ் போட்ட பிறகு புடவை கட்டலாம்.
நிறங்களுக்கும் நம் மனநிலைக்கும் சம்பந்தம் உண்டு. எனவே உற்சாகம் தரும் பளிச் நிறங்களில் புடவை அணியுங்கள். அது உங்களை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT