Published : 26 Mar 2017 12:48 PM
Last Updated : 26 Mar 2017 12:48 PM

விவாதக் களம்: காலாவதியாகட்டும் சாதி

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணனின் மரணம், நம் சமூகத்தில் பரவியிருக்கும் சாதிப் பாகுபாட்டின் வெளிப்பாடு என்பதைச் சுட்டிக்காட்டி கடந்த மார்ச் 19-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். ‘இந்த மரணங்களுக்கு என்ன செய்யபோகிறோம்?’ என்ற விவாதத்தையும் முன்வைத்திருந்தோம். நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியக் கட்டுமானம் குறித்து பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரின் மனதுக்குள்ளும் பதுங்கியிருக்கும் சாதி உணர்வைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தனி மனித மாற்றமே சமூக மாற்றத்துக்கு வித்திடும் என்ற தீர்வைச் சிலர் பரிந்துரைத்திருக்கிறார்கள். வந்து குவிந்த கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை உங்கள் பார்வைக்கு…

சாதியால் தனி மனித உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமென்றால், அந்தச் சாதியை ஒழித்திட அனைவரும் முன்வர வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் ஒரு கலப்புத் திருமணத்தையாவது செய்ய வேண்டும். அதன் மூலம் சாதிப் பகை ஒழியும். வருங்கால சந்ததியினரிடம் சாதிப் பாகுபாடு ஏற்படாது. கலப்புத் திருமணம் செய்பவர்களை அரசு ஊக்குவித்து, அவர்களுக்கு அதிக சலுகைகள் அளிக்க வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதியைத் தடை செய்யவேண்டும்.

என்.உஷாதேவி, மதுரை

நான் பள்ளியில் சேர்ந்த பிறகுதான் ‘சாதி ' இருப்பதே தெரிந்தது. ‘நீ என்ன சாதி?' என்று ஆசிரியர் என்னிடம் கேட்க, நான் அம்மாவிடம் கேட்க, இப்படித்தான் அறிமுகமானது. ‘ஒன்றே குலம்’ என்று கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் முதலில் விண்ணப்பப் படிவங்களின் வாயிலாகச் சாதியைக் கேட்பதை நிறுத்தட்டும். அப்போதுதான் ஆரம்பத்திலேயே சாதியின் அனல் அடங்கும். உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பு என்று கூறப்படும் சமூகத்துக்கு உதவ நினைத்தால், நம் அரசாங்கம் வேறு ஆக்கப்பூர்வமான வழிகளைத் திறந்துவிடட்டும்.

முன்பு சிலரைப் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் கோயிலுக்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை. இப்போது நிலைமை நிறையவே மாறியிருக்கிறது. இனியும் மாறும் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். நம் கல்வி மனிதப் பண்புள்ளவர்களாக மாற்றுகிறதோ இல்லையோ, நல்ல சம்பளத்துக்கும் பதவிக்கும் கை கொடுக்கிறது. கல்வியைக் கையில் எடுத்து உயர் பதவிகளுக்கு வரும்போது ஆதிக்கச் சாதியினர் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கித்தான் போவார்கள்.

ஜே.லூர்து, மதுரை

சாதியை ஒழிப்பது எப்படி என்றவுடன் பள்ளிகளில் சாதியைக் கேட்கக் கூடாது என்பதைத் தீர்வாகச் சொல்லக் கூடாது. சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டவர்கள் யார், யார் என்று சாதியைக் கேட்டால்தானே கண்டுபிடிக்க முடியும்? வெள்ள நிவாரண உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதுதானே முறை? சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளால் இருள் நீக்கி கிராமத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனையை, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.

தாழ்த்தப்பட்டவர்கள் உயர் பதவிகளுக்குச் சென்றால் அனைவரும் மதிப்பார்கள். இன்னும் 50 வருடங்கள் சென்றால் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அப்போது செய்யும் தொழிலால் சாதியை அடையாளம் கண்டு இழிவு செய்யும் போக்கு மறைந்துவிடும். கலப்பு மணம் பெருகப் பெருக சாதி மறையும். கிராமப் பகுதிகள் நகரமயமாகும்போது சாதிக் கட்டுமானங்கள் தகர்ந்துவிடும்.

ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

சாதியை அறவே ஒழிக்க முடியாது. பள்ளிகளிலிருந்து கோயில்கள்வரை நீக்கமற சாதி நிறைந்திருக்கிறது. சாதிக்கேற்ற சுடுகாடுகள் இன்றைக்கும் உண்டு. எந்தத் தொகுதியில் எந்தச் சாதியினர் அதிகமாக இருக்கின்றனரோ அந்தச் சாதியைச் சேர்ந்த வேட்பாளரையே அந்தத் தொகுதியில் நிறுத்தும் வழக்கம் பெரும்பாலான கட்சிகளிடம் உள்ளது. நாட்டை ஆளவும் சட்டங்கள் இயற்றவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் 90% சாதியின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படியிருக்கும்போது சாதி எப்படி ஒழியும்? முதலில் பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் விண்ணப்பப் படிவங்களில் ‘சாதி’ என்ற கட்டத்தை அடியோடு நீக்குங்கள். சாதி சம்பந்தமாக ஏற்கெனவே உள்ள சட்டங்கள் காலாவதியாகிவிட்டன என்ற அறிவிப்பை அரசிதழில் வெளியிடுங்கள். ஓர் இரவில் காலாவதியாகிப் போன 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் போல சாதியும் காலாவதியாகட்டுமே!

கேசவ் பல்ராம், திருவள்ளூர்

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது கணித ஆசிரியர் எஸ்.சி. மாணவர்களை எழுந்து நிற்கச் சொன்னார். நானும் எழுந்து நின்றேன். ஆசிரியர் ஒரு மாணவனைச் சுட்டிக் காட்டி, ‘உனக்கு எல்லாம் இருந்தும் ஏன் படிக்காமல் இருக்கிறாய்? அவர்களைப் பார்த்தாவது கற்றுக்கொள்’ என்று சொன்னது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படித்த ஆசிரியரே இப்படிப் பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது. நான் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் சுற்றுலா சென்றபோது என் கணவரின் நண்பர் மனைவி, நான் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதை அறிய ஆர்வமாக இருந்தார். இறுதிவரை நான் சொல்லவில்லை. சாதியை ஒழிக்கக் கல்வியால்தான் முடியும் என்று என் தந்தை எப்போதும் சொல்வார். நம் பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுப்பதன் மூலம்தான் சாதியை ஒழிக்க முடியும்.

இளமதி, சீர்காழி.

சமூகத்தில் என்னதான் பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவற்றை எதிர்க்கும் நம்பிக்கையையும் தெளிவையும் மாணவர்களுக்கு நம் கல்விமுறைக் கற்றுத் தராதது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டு ஆறுதல் அளிக்கும் மார்க்கமாக எந்த ஒரு சக்தியையும் அவர்களுக்கு இந்தச் சமூகம் அடையாளம் காட்டாததும் பெரிய குறை. சாதியால் எதிர்கொள்ளக்கூடிய இன்னல்களுக்கும் மன அழுத்தத்துக்கும் மருந்து இடக்கூடிய இயக்கங்கள் சமுதாயத்தில் அரசு மூலமாகவும் கல்லூரிகள் மூலமாகவும் பெருக வேண்டும்.

‘எல்லாம் கடந்து போகும்' என்ற உயரிய மந்திரத்தை அவர்களுக்குள் விதைத்து, சாய்ந்துகொள்ளும் தூணாக நிற்கக் கூடிய சக்தியாக, நமது கல்வி முறையும் அடிப்படையில் மாற வேண்டும். சமூகத்தின் மீதான கோபத்தில் அன்பாகச் சீராட்டிய பெற்றோர்களுக்குத் தங்களின் இறப்பால் தரும் பெருந் தண்டனையையும் அந்தக் கொடுமையின் உக்கிரத்தையும் படிப்பே அவர்களுக்கு உணர்த்த வேண்டும்!

இரா.பொன்னரசி, வேலூர்.

கல்வி அடிப்படையில் முன்னேற்றம் கண்டால் பாகுபாடு உருவாக வாய்ப்பில்லை.

எஸ்.சுந்தர், திருநெல்வேலி.

சாதி ஆணவக் கொலைகள் இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்திய மக்களின் ரத்தத்தில் சாதி ஊறியுள்ளது. அரசியலை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது சாதி. எல்லா அரசியல் கட்சிகளும் சாதி ஒழிய வேண்டும் என்று வெளியில் பேசினாலும் உள்ளுக்குள் தீவிரமாக ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. வேஷம் போடும் இந்த அரசியல் தலைவர்கள் மூலம் எப்படி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்? சாதி ஆணவக் கொலைகள் மறைய வேண்டும் என்றால் மக்களாகிய நாம்தான் மாறவேண்டும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதைப் பிறப்பின் மூலம் பாகுபடுத்துவதை எப்போது ஒழிக்கிறோமோ அப்போதுதான் ஆணவக் கொலைகள் ஒழியும். அதற்கான விழிப்புணர்வு இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த வேண்டும். சட்டம் மூலம் ஒழித்துவிடலாம் என்பது பகல் கனவு.

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

சாதி ஒழிய பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். அதேபோல் தலித்துகள் மேன்மையுற கல்வி பயில வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். ஆனால் இன்று கல்வி நிலையங்களிலேயே சாதியப் பாகுபாடு உருவாகியுள்ளது. மனமாற்றம் மட்டுமே தீர்வு. பணி இடங்கள் தற்போது கலப்புத் திருமணங்களுக்கான இடங்களாக மாறியுள்ளன. இந்த மாற்றம் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால்தான் மாறுதல் நிகழும்.

குரு. பழனிசாமி, கோவை.

சாதிப் பாகுபாடுகளைக் களைவதற்குக் கல்வியைக் கருவியாக எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வியை வைத்தே குறிப்பிட்ட சாதியினரை உயர்த்தியும் தாழ்த்தியும் கையாள்கின்ற சூழல், சாதி ஒழிப்புக்கான காரணியாக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு முயற்சியும் தாழ்ந்த இனத்தவர்களை மேற்கொண்டு வதைப்பதற்கான வரவுகளோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஏ.பி.எஸ்.ரவிந்திரன், வள்ளியூர்.

அரசியல் அமைப்புச் சட்டமே மனு தர்மத்தின் அடிப்படையில் உருவானது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதலில் திருத்தம் செய்யப்பட வேண்டும். பிறகு சாதி மறுப்புச் சட்டங்களை உருவாக்கினால், சமத்துவ சமுதாயம் அமைய வழிவகுக்கும். கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அரசுத் துறையில் வேலை தரவேண்டும்.

சி. செல்வராஜ், புலிவலம்.

இளைஞர்களின் எழுச்சியை சில சுயநல சாதியக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இது ஒரு விதத்தில் சாதிய வன்முறைகளுக்கும் ஆணவப் படுகொலைகளுக்கும் காரணமாகிறது.

எஸ்.பிரபு, தேனி.

சமத்துவம் மறுக்கப்பட்டால் அனைத்துமே மறுக்கப்பட்டதற்குச் சமம் என்று தனது கடைசி வரிகளை எழுதிவிட்டுச் சென்றார் முத்துகிருஷ்ணன். பல்கலைக்கழகம் என்றால் பாகுபாடு நிறைந்த இடம் என்று பார்க்கப்படுவதும், மாணவர்கள் நெஞ்சில் நச்சு விதையை விதைப்பதும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சமத்துவம், சகோதரத்துவம், நல்லொழுக்கம், மனிதநேயம் ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே பல்கலைக்கழகங்களில் நிகழ்கின்ற மரணங்களுக்குத் தீர்வு காண இயலும்.

சீ.லட்சுமிபதி, தாம்பரம்.

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் மாணவர் தற்கொலைகளைத் தடுக்கப் புதிய சட்டம் கொண்டு வரவேண்டும். இந்த மாதிரியான கொலைகள் நடந்தால் உடனே விசாரித்துக் கடும் தண்டனை வழங்க வேண்டும்.

பழனிசாமி, பெரியாத்துக்கள்ளிவலசு.

நாகரிக சமுதாயத்தில் சாதிய ஆணவக் கொலைகள் நடப்பது கேவலமான நிகழ்வு. இதுபோன்ற கொலைகளுக்குக் காரணம் இந்த மண்ணில் இன்னும் புரையோடிப் போயுள்ள சாதியப் பாகுபாடுகளே. பாரதி, பெரியார் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகள் முயன்றும் இன்னும் சாதி நம் மண்ணில் இருப்பதற்குக் காரணம் அரசியல் கட்சிகளே. வாக்கு வங்கி அரசியலுக்காகச் சாதியை மறைமுகமாக வளர்த்து வருகிறார்கள்.

பொன். கருணாநிதி, கோட்டூர்.

பள்ளியில் சேர்க்கும் போதே சாதிச் சான்றிதழ் காரணமாக மாணவர்கள் பிரித்து வைக்கப்படுகிறார்கள். நாடு முழுவதும் பொருளாதார அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். பெற்றோர், பிள்ளைகளுக்கு மனோதைரியத்தை வளர்க்க வேண்டும். எத்தனை தாக்குதல்கள் வந்தாலும் அதனைப் புறந்தள்ளி நம் குறிக்கோளில் கவனம் செலுத்த வேண்டும். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியின் பாடல் பாடத்திட்டத்தில் மட்டும் இல்லாமல் அதன்படி வாழ முயற்சி செய்ய வேண்டும்.

சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.

தீண்டாமையும் சாதியும் நிலைத்து நின்று பல முத்துகிருஷ்ணன்களின் உயிர்களைக் குடிக்கின்றன. பிறப்பால் வருவதல்ல பெருமையும் சிறுமையும் என்பதை இந்தச் சமூகம் என்றுதான் உணருமோ?

நா.ஞானசேகரன், திருலோக்கி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x