Published : 22 Jan 2017 03:11 PM
Last Updated : 22 Jan 2017 03:11 PM

பருவத்தே பணம் செய்: இரு தரப்புக்கும் லாபம்!

எல்லோரும் வெளியேறும் நேரத்தில் நாம் உள்ளே நுழையவும் எல்லோரும் உள்ளே செல்ல முண்டியடிக்கும் நேரத்தில் நாம் வெளியேறிச் செல்லவும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு ஒரு ஞானியின் மனநிலை வேண்டும் என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார். அவர்தான் பங்குச் சந்தையின் பிதாமகன் வாரன் பஃபெட். அவரது அணுகுமுறை பங்குச் சந்தையின் அரிச்சுவடியாகவே பார்க்கப்படுகிறது.

நான்காவது வழி

ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையாக நான்கு வகையில் முதலீட்டைத் திரட்டலாம். முதலாவது தனி நபர் முதலீடு. இது முழுக்க முழுக்க முதலாளியின் முதலீடாக இருக்கும். அடுத்தது பார்ட்னர்ஷிப். இரண்டு பேரோ அதற்கு மேற்பட்ட சிலரோ சேர்ந்து முதலீடு செய்யும் முறை இது. மூன்றாவது ப்ரைவேட் லிமிடெட். தனிப்பட்ட குழுமம் தன்னுடைய முதலீட்டைப் போட்டுத் தொழில் தொடங்குவது. நான்காவதாக வரப்போகும் பப்ளிக் லிமிடெட்தான் நாம் கலந்துகொள்ளப் போகும் முதலீடு.

அதாவது ஒரு தொழிலைத் தொடங்க நினைக்கும் நிறுவனம் அதற்கான முதலீட்டின் ஒரு பகுதியை மக்களிடமிருந்து திரட்டும் முறைதான் இது. இந்த வகையில் முதலீட்டைத் திரட்டுவதற்காக அந்த நிறுவனம் தன் நிறுவன மதிப்பைப் பங்குகளாக மாற்றி விற்பனை செய்ய முன்வரும். அப்படி மாற்றப்பட்ட பங்குகளை முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர் யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இதன் மூலம் அந்த நிறுவனத்தில் நாமும் பங்குதாரர் ஆகிறோம்.

எங்கே கிடைக்கும்?

இப்போது பங்கு என்றால் என்ன என்று தெரிந்துவிட்டது. அதை நாம் எங்கே போய் வாங்குவது? நிறுவனம் பங்குகளை விற்கப் போகிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?அதற்காக இருக்கும் இடம்தான் பங்குச் சந்தை. சந்தை என்பதே பொருளை விற்பவரும் வாங்குபவரும் ஒன்று கூடி வியாபாரத்தை முடிக்கும் இடம்தானே. பொருள் என்னும்போது சந்தை. பங்கு என்று வரும்போது பங்குச் சந்தை.

சரி, இப்போது ஒரு தெளிவு வந்துவிட்டது. அதாவது நாம் முதலீடு செய்ய நினைக்கும்போது ஒரு நிறுவனம் தன் பங்குகளை விற்க வந்தால் சந்தை மூலமாக வாங்கிப் போடலாம். அப்படியானால் நிறுவனங்கள் பங்குகளை வெளியிட அதாவது விற்க வராதபோது என்ன செய்வது? அந்த நேரத்தில் சந்தை என்ன செய்துகொண்டிருக்கும்? இந்த இடத்தில்தான் பங்குச் சந்தை செயல்பாட்டை நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது.

முதல் நிலைப் பங்கு

ஒரு நிறுவனம் புத்தம் புதிதாகப் பங்குகளை விற்க வரும்போது அதை ஐபிஓ என்பார்கள். முதல் நிலைப் பங்கு வெளியீடு என்று அதற்குப் பெயர். அதில் எப்படி முதலீடு செய்வது, என்ன நிபந்தனைகள் என்பதையெல்லாம் பார்த்துவிடலாம். ஒரு நிறுவனம் புதிதாகப் பங்குகளை வெளியிட நினைக்கும்போது அறிவிப்பை வெளியிடுவார்கள். அந்த நிறுவனத்துக்குத் தொழில் வர்த்தகத் துறையில் இருக்கும் மதிப்பைப் பொறுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படும். விலை குறிப்பிட்ட தொகையாக இல்லாமல் குறைந்தபட்சம், அதிகபட்சம் என்ற அளவில் ஒரு விலைப்பட்டையாக நிர்ணயிப்பார்கள். எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அந்த அடிப்படையில் விலை முடிவாகும்.

எப்படி முதலீடு செய்வது என்றால், நாம் வழக்கமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது போலத்தான். அதாவது நம் பெயரில் ஒரு டீமேட் கணக்கு தொடங்கி ஐபிஓ அறிவிப்பு வரும்போதே விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அறிவித்ததைப் போல எத்தனை மடங்கு விண்ணப்பங்கள் வருகின்றனவோ அவற்றின் அடிப்படையில் பங்குகளை ஒதுக்குவார்கள். இதுதான் ஐபிஓவில் பங்குகள் வாங்கும் முறை.

லாபம் சுலபம்

ஐபிஓ என்று சொல்லப்படும் முதல் நிலைப் பங்கு வெளியீட்டைப் போலவே வேறு என்ன பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்பு இருக்கிறது என்று பார்த்தால், அதுதான் இரண்டாம் நிலைப் பங்கு வர்த்தகம். எளிமையாகச் சொல்வதாக இருந்தால் நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்காமல் வேறொரு முதலீட்டாளரிடமிருந்து நாம் பங்குகளை வாங்குவது. இங்குதான் வாங்குபவரும் விற்பவரும் ஒன்றுகூடும் சந்தை என்பது வருகிறது. நாம் குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என்ற முடிவோடு சந்தைக்குப் போகிறோம். அதே நிறுவனப் பங்குகளை விற்றுவிடலாம் என்ற முடிவோடு அங்கே ஒருவர் காத்திருப்பார். இருவரும் பேரம் பேசி குறிப்பிட்ட விலைக்குப் பங்குகளை வாங்குவோம்.

இப்படி வாங்குவது, விற்பது அடிப்படையான விஷயம். என்ன வாங்குவது? எப்போது வாங்குவது என்பது பற்றியெல்லாம் கற்றுத் தெளிந்தால்தான் நம்மால் பங்கு முதலீட்டில் வெற்றிகரமாக இயங்க முடியும்.

குறிப்பிட்ட பொருளைத் தனக்குத் தேவையில்லை என்றோ, பொருள் தரமானதாக இல்லை என்றோ விற்பது போல இல்லை பங்குச் சந்தை. இங்கே ஒருவர் குறிப்பிட்ட விலைக்கு வாங்கியிருப்பார். அவர் மனதில் ஒரு லாபக் கணக்கு இருக்கும். அந்த இடத்துக்குப் பங்கின் விலை உயர்ந்ததும் அதை விற்றுக் காசாக்குவார். அந்த விற்பனை விலையில் வாங்கும் முதலீட்டாளருக்கு மனதில் ஒரு லாபக் கணக்கு இருக்கும். அந்த விலைக்கு வரும்வரை காத்திருந்து வந்தவுடன் விற்பார். ஆக, இருவருக்குமே லாபம் தரக் கூடியதுதான் இந்த வகை முதலீடு.

பங்கில் முதலீடு செய்வதன் அடிப்படை என்ன என்று தெரிந்துவிட்டதல்லவா? இப்போது நாம் பங்குச் சந்தை பிதாமகன் சொன்ன விஷயத்தைப் பார்த்துவிடலாமா? காத்திருங்கள்.

(இன்னும் சேமிக்கலாம்)

கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x