Published : 25 Jun 2017 03:22 PM
Last Updated : 25 Jun 2017 03:22 PM
எவ்வளவு முயன்றாலும் உடலின் பின்பக்க சதை பகுதியை குறைக்க முடியவில்லை.வெளியே செல்லக் கூச்சமாக இருக்கிறது. ஏதாவது வழி சொல்லுங்கள்
- பெயர் குறிப்பிட விரும்பாத வாசகி, மதுரை.
உமா ராகவன், ஊட்டச்சத்து நிபுணர்,
சஞ்சீவனம் நிறுவனம்.
உடல் எடை மற்றும் உடலின் பின் பகுதி மட்டும் அதிகளவு சதை பகுதி இருக்கிறவர்கள் அதிகளவு நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறி கலவை, பழக்கலவை போன்றவற்றை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களை எடுத்துக் கொள்ளும் போது அதனை தோலுடன் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்கள் ஆகியவற்றை அதிகளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.
நார்ச்சத்து அதிகமாக உள்ள சிறுதானியங்களை இட்லி மாவு போல் அரைத்து அதில் இட்லி, தோசை போன்றவற்றை வார்த்து சாப்பிடலாம். அப்போதுதான் பழத்தின் தோல் பகுதியில் உள்ள ஆண்டி ஆக்சைடு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவும். அதேபோல் கிரீன் டீ தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகளவு கிரீன் டீ எடுத்துக் கொண்டால் உடலில் அசிடிட்டி உருவாக்கும். விரைவாக நடப்பவராக இருந்தால் நடைப்பயிற்சிக்கு உகந்த காலனிகளை அணிந்துக் கொண்டும் குறைந்தபட்சம் இருபது நிமிடங்களாவது நடை பயிற்சி செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் போது கவனமாக உடற்பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றையும் செய்யலாம். இந்த வழிமுறைகளை ஒரு வாரம், இரண்டு வாரம் அல்லது ஒரு மாதம் மட்டும் செய்துவிட்டு நிறுத்த கூடாது. உடல் எடையில் நல்ல மாற்றம் வரும் வரை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். உடல் பயிற்சிகளை விரும்பி செய்யும் போதுதான் அடுத்து வரும் நாட்களிலும் சோர்ந்து போகாமல் தொடர்ச்சியாக செய்ய முடியும்.
என்னுடைய மனைவிக்கு 67 வயது ஆகிறது. அவர்களுக்கு இடது கையின் கீழ் பகுதியையும், இடது மார்பகத்தின் அருகிலும் பெரிய கட்டி ஒன்று உள்ளது. அதனால் எந்த வலி அல்லது அசௌகரியம் எதுவும் என் மனைவிக்கு இல்லை. இது மார்பக புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு அருகில் உள்ள மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து பார்த்தோம். அந்த பரிசோதனையில் அந்த கட்டி புற்றுநோய் கட்டி இல்லை என்றும், அதற்காக பயப்பட வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் இது குறித்து தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
- எஸ்.ஆர். சீனிவாசன்
எஸ்.ரகுநந்தன்,பொதுநல மருத்துவர்,
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் பொதுநல மருத்துவமனை.
சம்பந்தப்பட்ட நோயாளிக்கு உள்ள கட்டி என்பது மார்பகத்தின் அருகிலும், இடது கையின் கீழ் பகுதியிலும் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதேசமயம் அந்த கட்டியை பரிசோதனை செய்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. பொதுவாக நம்முடைய நாட்டில் பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றாக இருப்பது மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஆகும். ஏழு வருடங்களுக்கு முன்பு அது சாதார கட்டியாக இருந்து இருக்கலாம்.
தற்போது அந்த கட்டி புற்றுநோய் கட்டியா அல்லது கொழுப்பு கட்டியா என்பதை பயாப்சி எனப்படும்(உடல் திசு பரிசோதனை) செய்து பார்த்துக் கொள்வது அவசியம் ஆகும். கொழுப்பு கட்டியாக இருந்தால் அதனை எளிதாக அகற்றிவிடலாம். ஒருவேளை புற்றுநோய் கட்டியாக இருந்தால் அதற்காக சிகிச்சையை உடனடியாக எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.
வாசகரின் மனைவி ஆறுபது வயதுக்கு மேல் இருப்பதால் தாமதிக்காமல் உடனடியாக பயாப்சி பரிசோதனை செய்து அது எந்தமாதிரியான கட்டி என்பது தெரிந்துக் கொள்வது முக்கியமாகும். பொதுவாக முப்பது வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கட்டாயமாக மார்பக சுயபரிசோதனை செய்துக் கொள்வது கட்டாயம் ஆகும். மார்பகத்தில் கட்டி போன்று ஏதேனும் இருந்தால் அதில் வலி இருந்தாலும், வலி இல்லையென்றாலும். அதேபோல் ரத்தம், சீழ் போன்றவை மார்பக பகுதியில் வந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
உங்கள் கேள்வி என்ன? ‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக் குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT