Published : 27 May 2017 05:46 PM
Last Updated : 27 May 2017 05:46 PM
கடந்த வார ‘பெண் இன்று’ இணைப்பில் ‘மரியாதை வைப்பது தவறா?’ என்று தன் மனக்குறையைக் கொட்டித் தீர்த்த மகளே, உனக்கு என் அழுத்தமான ஆதரவை வழங்குகிறேன். எனக்கும் ஒரு மகள் உண்டு. டிப்ளமோ முடித்த அவள், வேலைக்குச் செல்கிறாள். சிறு வயது முதலே தன் அண்ணனின் நண்பர்களோடு விளையாடி, பள்ளி சென்று வந்தவள். என் உறவினரும் சுற்றத்தாரும் பெருமையாகப் பேசும்படிதான் இருக்கிறதே தவிர எவரும் குறை சொல்லும் விதத்தில் இருந்ததே இல்லை. எந்த ஆண் மகனையும் நேர் நின்று முகத்தைப் பார்த்துப் பேசச் சிறு வயது முதலே கற்றுத்தந்திருக்கிறோம். அதன் பலன், பலரும் இப்படிப்பட்ட மகள் தங்களுக்கு இல்லையே என்று ஏங்கிப் பேசுகின்றனர்.
ஒருநாள் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த கல்லூரி மாணவனை மருத்துவமனையில் சேர்த்தாள். தன்னுடைய கைபேசி மூலம் அவனுடைய பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்து, அவர்கள் மருத்துவமனை வரும்வரை கூடவே தங்கியிருந்து வீட்டுக்கு வர இரவு நேரமாகிவிட்டது. தாமதத்துக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்பதால் நாங்கள் எதுவும் கேட்கவில்லை. எங்கள் மகள் வீட்டுக்கு வந்த பிறகு நடந்த விஷயத்தைச் சொன்னாள்.
ராணுவத்தில் பணியாற்றும் என் மகனின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை உபசரிப்பது, அவர்களுடன் சமமாக அமர்ந்து பேசுவது என இயல்பாக இருப்பாள் எங்கள் மகள். எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை வளர்ப்பில் மனப் பக்குவம் இருக்கக் காரணம் எங்கள் பெற்றோர் இருவரும் தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். ஆனால் எல்லா பெற்றோரும் இப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
மதமும் சாதிய அமைப்பும் தாயானாலும் மகளாயினும் இளக்காரமாகப் பார்க்கும்படிதான் நம்மை வளர்த்து வந்திருக்கிறது. குருவுக்கும் அவரது அறிவுக்கும் மதிப்பளித்து நீ செய்த செயல் உன் பெற்றோருக்குத் தவறாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது ஓர் உயர்ந்த குணம்.
பெண் பிள்ளைகள் மீது பழமை வாதப் பார்வை கொண்டவர்கள் செலுத்தும் பெற்றோர்கள், ஆச்சாரக் கீழதுகள். நீயாவது உன் சந்ததிகளை இயல்பாக வளர்த்தெடு. வெற்றிக்கான வாய்ப்புகள் உன் இருப்பிடம் தேடிவரும்.
சி.செல்வராஜ், புலிவலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT