Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

வெற்றி தந்த வெயிலுக்கு நன்றி

வேலூரின் சிறப்புகளில் ஒன்று என்னத் தெரியுமா? வருடத்தின் ஒன்பது மாதங்களும் வெயில் வாட்டியெடுக்கும். அந்த வெயிலையே தன் தொழிலுக்கான அச்சாணியாகப் பயன்படுத்தியிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த லாவண்யா பாலாஜி. தாகத்துக்குத் தண்ணீரைவிட குளிர்பானங்களையே இன்று பலர் நாடுகிறார்கள். மக்களின் அந்த மனநிலைதான் இவரைக் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கத் தூண்டியிருக்கிறது. இவர்களது நிறுவனத் தயாரிப்பில் உருவான குளிர்பானங்கள், இன்று நகரின் முக்கியக் கடைகளில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கல்லூரி பேராசிரியராக இருந்தவர், தொழில்முனைவோராக மாறியதற்குப் பின்னால் குடும்பமும், தன்முனைப்பும் இருப்பதாகச் சொல்கிறார்.

“திருமணத்துக்குப் பிறகு நான் சென்னையில்தான் இருந்தேன். அப்போது கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் கணவருக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அவருக்கு வேலூருக்குப் பணிமாறுதல் கிடைத்ததால் குடும்பத்துடன் இங்கே வந்துவிட்டோம். பொதுவாக வேலூரின் வெயிலைக் கண்டு பலரும் பயப்படுவார்கள். எங்களுக்கு என்னவோ அதிகமான வெயிலும், குளிரும் பிடித்துவிட்டது. அதனால் இங்கேயே நிரந்தரமாகக் குடியேறினோம். இங்கேயும் கல்லூரி பணி தொடர்ந்தது. என் இரண்டாவது குழந்தை பிறந்தபோது பணியைத் தொடரமுடியாமல் போனது” என்று முன்கதை சுருக்கம் சொல்கிறார் லாவண்யா.

கைகொடுத்த தொழில் மையம்

குழந்தை ஓரளவுக்கு வளர்ந்தாலும் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாத சூழல். அதற்காக வீட்டை மட்டும் நிர்வகிப்பதோடு தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை லாவண்யா. தன் திறமையை நிரூபிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தன் நினைப்பைப் பலரிடமும் கேள்வியாகக் கேட்டிருக்கிறார். அப்போது லாவண்யாவின் மாமனார்தான், தொழில்தொடங்கச் சொல்லி உற்சாகம் அளித்திருக்கிறார்.

“என் மாமனார் வீட்டில், சிறு அளவில் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்தார்கள். அதையே நான் பெரிய அளவில் செய்யலாம் என்று நினைத்தேன். என் கணவரும், மாமனாரும் எனக்குத் துணை நிற்க, தொழில் தொடங்குவது என்று முடிவெடுத்தேன். குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க லட்சக் கணக்கில் பணம் வேண்டுமே. என்னச் செய்வது என்று யோசித்தபோது, மாவட்டத் தொழில் மையம் எங்களுக்குக் கைகொடுத்து உதவியது. மாவட்டத் தொழில் மையத்தை அணுகியபோது, பட்டதாரிகளுக்கு என்னவிதமான கடனுதவித் திட்டங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். முதல்கட்டமாக மாவட்டக் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பு இருக்கும் என்று சொன்னார்கள். அதன்படி நான் கலெக்டரையும், அதிகாரிகளையும் சந்தித்து ஒப்புதல் வாங்கினேன். அதன் பிறகு ஒரு மாதம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தப் பயிற்சி, என் ஆர்வத்துக்கு உரமிட்டது” என்கிறார் லாவண்யா.

வழிகாட்டிய தொழில்முனைவோர்கள்

ஒரு மாதம் நடந்த பயிற்சியில் பலதுறை நிபுணர்களும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். தொழில்தொடங்கி வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடலும் நடந்திருக்கிறது. அதுதான், ‘என்னால் முடியுமா?’ என்ற லாவண்யாவின் தயக்கத்தைத் தகர்த்திருக்கிறது. கடனுதவி கிடைப்பதற்கு முன்னரே தொழிற்சாலை தொடங்குவதற்கான இடம், பணியாளர்கள், விற்பனை என்று சகலத்தையும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார் லாவண்யா. குளிர்பானத் தயாரிப்பு ஃபார்முலாக்களில் இவருடைய மாமனாரின் பங்கு அதிகம் இருந்ததாகச் சொல்கிறார்.

வரவேற்ற வாடிக்கையாளர்கள்

“உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனக் குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பு செல்லுபடியாக வேண்டும் என்றால் அது மிகப்பெரும் சவால்தானே? தரத்திலும் சுவையிலும் புதுமையைக் கூட்டினால்தான் அது சாத்தியமாகும் என்று புரிந்தது. குளிர்பானங்கள் இயற்கை மணத்துடனும் சுவையுடனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நம் மண்ணின் பானமான சோடா கலர் சுவையுடன் அது பொருந்திப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

உண்ணும் பொருள் என்பதாலேயே எதையுமே இரு மடங்கு பரிசோதனைக்குப் பிறகுதான் செயல்படுத்தினோம். என் மாமனாரின் தொழில்நுட்ப அறிவுடன் என் கணவரின் மார்க்கெட்டிங் அறிவும் எனக்குப் பக்கப் பலமாக இருந்தன” என்று சொல்கிற லாவண்யா, நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள, அவருடைய கணவர் பாலாஜி ராஜா, வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் கடைகளை அணுகுவதே சிரமமாக இருந்தது என்கிறார் லாவண்யா.

“புதுத் தயாரிப்பு என்பதாலேயே பல கடைகளில் எங்கள் குளிர்பானங்களை வாங்க யோசித்தார்கள். ஆனால் ஒருமுறை வாங்கிய வாடிக்கையாளர்கள், அடுத்தமுறையும் கேட்கத் தொடங்கியதால் எங்களுக்கு அதிகமாக ஆர்டர் வந்தது. இன்று ஆற்காடு முதல் குடியாத்தம் வரை கிட்டத்தட்ட இரண்டாயிரம் கடைகளுக்கு எங்கள் குளிர்பானங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

வேலூர் நகரின் முக்கியக் கடையில்தான் நான் மாதா மாதம் மளிகைப்பொருள்கள் வாங்குவேன். அங்கே வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பைப் பலர் விரும்பி கேட்டு வாங்கிச் செல்வதைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கும். இதுபோன்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு உழைக்கிறோம், நிச்சயம் வெற்றியும் பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் லாவண்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x